No menu items!

அண்ணமாலை Vs காயத்ரி ரகுராம் – பாஜகவின் ஆபாச குழப்பங்கள்!

அண்ணமாலை Vs காயத்ரி ரகுராம் – பாஜகவின் ஆபாச குழப்பங்கள்!

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை புகார் கூறி 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்தக் கட்சியில் இன்று வரை நீடித்த காயத்ரி ரகுராம் புகார் தெரிவித்திருக்கிறார். கட்சியை விட்டு விலகியிருக்கிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இன்று காலையில் நடந்துவிட்டது.

’கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுகிறேன். அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை. அண்ணாமலை மலிவான அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவிலிருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். பெண்களே உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்னிடம் உள்ள வீடியோ ஆடியோக்களை காவல்துறையிடம் வழங்கப் போகிறேன்’ என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களில் வெற்றி. 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சி என்று கனவுகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பாஜகவுக்கு கடந்த சில வாரங்களாக சிக்கல் மேல் சிக்கல். அனைத்தும் ஆபாசம், பாலியல் தொல்லைகள் அடிப்படையில் உள்ளவை.

திருச்சி சூர்யா சிவா – டெய்ஸி ஆபாச ஆடியோ

கேசவ விநாயகம் குறித்து ஆபாச குற்றச்சாட்டுக்கள்

காயத்ரி ரகுராம் துபாய் பயணம் குறித்த ஆபாச விமர்சனங்கள்

அலிஷாவை லாங் ட்ரைவ்க்கு கூப்பிட்டார்கள் என்று சூர்யா ஆபாச குற்றச்சாட்டு

வேலூர் இப்ராஹிம் – டெய்சி தொடர்பு குறித்து ஆபாச குற்றச்சாட்டுகள்

சேலை எப்படி கட்ட வேண்டும் என்று அலிஷாவுக்கு அட்வைஸ்….

இப்படி கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டு பாஜகவினரின் ஆபாச குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டு பாஜகவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது நடந்தவை தவிர கே.டி.ராகவன் ஆபாச வீடியோ, சசிகலா புஷ்பாவுக்கு பொது இடத்தில் நடந்த ஆபாச சில்மிஷம், மதன் ரவிச்சந்திரன் குறிப்பிட்ட ஆபாச வீடியோக்கள் என பாஜகவை சுற்றி வரிசைக் கட்டி நிற்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டுகள், கொள்கை முரண்பாடுகள், தடாலடி பேச்சுக்கள் என பழகியிருந்த தமிழக அரசியல் இப்போது பாஜக உபயத்தில் ஆபாச ஆடியோக்கள் வீடியோக்கள் என பாலியல் பக்கம் திசை மாறியிருக்கிறது.

தன்னிடம் இருக்கும் வீடியோ ஆடியோ ஆதாரங்களை காவல்துறையிடம் கொடுக்கப் போவதாக காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார். இது பாஜகவுக்கு பெரும் சிக்கல்களை உண்டாக்கும். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக திமுக இருக்கிறது. அதன் தலைமையில் காவல்துறை இயங்குகிறது. அந்தக் காவல்துறையிடம் பாஜகவின் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் செல்வது பாஜகவை பலவீனப்படுத்தும்

2021 ஆகஸ்ட் மாதம் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ என்று ஒன்று வெளியிடப்பட்டது. அதை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் இது போன்று பல வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாகவும் கூறினார். அக்டோபர் 2020-ல் ஊடகவியலாளராக இருந்த மதன் ரவிச்சந்திரன் டெல்லிக்கு சென்று பாஜகவில் இணைந்தார். அதே நிகழ்வில்தான் குஷ்புவும் பாஜகவில் இணைந்தார். அந்த சமயத்தில் மதன் ரவிச்சந்திரன் பரபரப்பான ஊடகவியலாளராக இருந்தார். அவர் பாஜகவில் இணைந்தது கட்சியை வளர்க்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 2021 ஆகஸ்ட்டில் ராகவன் வீடியோவை வெளியிட்டதற்காக அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இன்று மதன் ரவிச்சந்திரன் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

இப்போது காயத்ரி ரகுராம் தன்னிடம் இருக்கும் வீடியோ ஆடியோ ஆதாரங்களைக் கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

செய்தியாளர் சந்திப்புகளிலும் செய்தியாளர்களிடமும் வீரம் காட்டும் அண்ணாமலைக்கு இது கஷ்ட காலம். அரசியலுக்கு வந்து பாஜகவில் இணைந்து ஒரே வருடத்தில் ஆல் பவர் ஃபுல் தலைவராக தமிழ்நாட்டு பாஜகவுக்கு தலைமைப் பொறுப்புக்கு வந்தார். அந்த அனுபவமின்மை இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு பாஜகவில் மூத்தவர் – இளையவர், புதியவர் – பழையவர், ஆண்கள் – பெண்கள், பிரமாணர் – பிரமாணர் அல்லாதோர் என பலவிதங்களில் பிளந்து கோஷ்டிகளாய் நிற்பது ஒவ்வொருவரும் கொடுக்கும் பேட்டிகளிலிருந்து தெரிகிறது.

டெல்லி மேலிடத்தால் தமிழ்நாட்டு பாஜகவுக்குள் திணிக்கப்பட்டவர் அண்ணாமலை. அவர் அரசியலுக்கு வந்த ஃப்ளாஷ் பேக்கையும் அரசியல் சூழல்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் திடீரென்று வேலையை ராஜினாமா செய்கிறார். விவசாயம்தான் என் உயிர் என்கிறார். ஆடு, மாடு கோழி வளர்க்கிறார். விவசாயத்தை வளர்ப்போம்..காப்போம் என்று ஆடுகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பேட்டியளிக்கிறார். அவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வளர்கின்றன. ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பிய நேர்மையாளர் என்ற பிம்பம் அவர் மீது கட்டமைக்கப்படுகிறது.
“நாடு போற போக்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள். வருமானத்தை எல்லாம் டாஸ்மாக்குல விட்டுட்டு, குடும்பத்தை கஷ்டத்துல விடுறாங்க உழைப்பாளிங்க. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அரசியல்வாதிகள், ஓட்டுகளை வியாபாரமாக்கிட்டாங்க. எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்கள்ல இதுவரை ஓட்டுக்குப் பணம் கொடுத்தவங்க, அந்தக் கொடுமையை இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் 600, 700 எனப் பணம் கொடுக்கும்வரைக்கும் வந்துட்டாங்க. மக்களும் அதைச் சங்கடமே இல்லாம வாங்குறாங்க. கெட்ட விஷயம், நல்ல விஷயம் எதுங்கிற விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆள் இல்லை.

காரணம், சமூகத்தில் லீடர்ஷிப் இல்லை. அதனால்தான், எனது ஒன்பது வருடம் போலீஸ் வேலையை உதறித் தள்ளிவிட்டு, `வி த லீடர்’ங்கிற சமூக அமைப்பை ஆரம்பித்திருக்கிறேன். இது அரசியல் அமைப்பு அல்ல; அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு; மக்களை விழித்தெழுச் செய்யும் அமைப்பு” என்று 2020 பிப்ரவரியில் பசுமை விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் அண்ணாமலை. அப்போது அவரது பெயர் அர்ஜுன் அண்ணாமலை. அந்தக் கட்டுரை முழுக்க அவரது ‘கர்நாடக சிங்கம்’மாக அவரது வீரதீர செயல்களும் நாட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணங்களும் குவிந்துக் கிடக்கின்றன.

இதே காலக் கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் நாம் பார்க்க வேண்டும். 2017 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கிறார். 2018ம் 2019ம் கடக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆரம்பிப்பதாக சொன்ன கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அரசியல் கருத்துக்களை மட்டும் அவ்வபோது சொல்லி அரசியல் முடிவை அணையாமல் பார்த்துக் கொள்கிறார்.
2020 மார்ச் மாதம் 12ஆம் தேதி ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிடுகிறார், லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த். தனது அரசியல் வருகை குறித்து பேசுகிறார். அப்போது அவர் சொல்லிய ஒரு கருத்து முக்கியமானது.

‘முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை.முதல்வராக என்னை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இதுபற்றி 1996 லேயே தெரியும். ஆக நான் வலிமையான கட்சித் தலைமை பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நேர்மையும் , திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை (அவர் பெண்ணாகக்கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன்’ இதுதான் ரஜினி சொன்னது.

2016ல் ஜெயலலிதா மறைகிறார். 2017 இறுதி நாளில் கட்சித் துவங்குவதாக ரஜினி அறிவிக்கிறார். 2018ல் கருணாநிதி மறைகிறார். 2019 மே மாதம் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்கிறார். 2020 பிப்ரவரியில் நாட்டை மாற்ற வேண்டும், விவசாயத்தைக் காக்க வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார். 2020 மார்ச் மாதம் நான் முதல்வர் இல்லை, படித்த நல்ல இளைஞர்தான் முதல்வர் என்று ரஜினி அறிவிக்கிறார். ஆனால் அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை. கொரோனா பொதுமுடக்க காலம் முடிந்ததும் அவர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்கவில்லை அண்ணாத்தே ஷூட்டிங்குக்குதான் சென்றார். அவருக்கு கொரோனா வருகிறது. ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ரஜினியில் நிலை இப்படி இருக்கும்போது 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைகிறார் அண்ணாமலை.

தனித் தனியே நடந்த நிகழ்வுகள் என்றாலும் அந்த நிகழ்வுகளின் சூழலை ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒரு வலைப் பின்னல் இருப்பதைப் பார்க்க இயலுகிறது. இந்த நிகழ்வுகளுக்கு Anti Climax 2020 டிசம்பர் 29-ம் தேதி அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி அறிவிக்கிறார். தமிழ்நாட்டுக்கு அரசியல் கட்சிகள் வைத்திருந்த திட்டங்கள் மாறுகின்றன. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் அண்ணாமலை பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக அக்டோபர் மாதம் பொறுப்பேற்கிறார்.

சற்று சிந்தித்துப் பார்த்தால் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளாராக வந்திருக்க வேண்டியவர் தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார் என்று தோன்றுகிறது.

இப்படி எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்த அண்ணாமலைக்கு ஆரம்பத்திலிருந்தே பாஜகவின் மூத்த தலைவர்களிடமிருந்து ஆதரவு இல்லை. அதனால் தனக்கென ஒரு அதிகார வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த அதிகார வட்டத்துக்கு இதுவரை தமிழ்நாட்டு பாஜகவை ஆண்ட வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் மோதல்களின் வெளிப்பாடுகள்தாம் இப்போது காயத்ரி ரகுராம் விலகல் வரை வளர்ந்திருக்கிறது.

காயத்ரி ரகுராமுடன் இதற்கு முற்றுப் புள்ளியா அல்லது இதுதான் தொடக்கப்புள்ளியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...