No menu items!

ஒரு ஆண்ட்ராய்ட் விமர்சகனின் ஆதங்கம்!

ஒரு ஆண்ட்ராய்ட் விமர்சகனின் ஆதங்கம்!

பத்து வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் சினிமா தற்போது இல்லை.

முன்பு சினிமாவுக்குள் நுழைவது அவ்வளவு சுலபமானது அல்ல. சினிமா காஸ்ட்லியான மீடியம். நினைத்ததை எல்லாம் படமெடுத்து கொண்டே இருக்கமுடியாது. ஃப்லிம் ரோல்களின் விலை அதிகம். சினிமாவை இயக்கும் மனிதவள கூட்டமைப்பான ஃபெப்சியில் கெடுப்பிடிகள் அதிகம். அவுட்டோர் ஷூட்டிங்கிற்கான செலவுகளும் அதிகம்.  ஆனால் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் இருந்தது.

இன்று, தமிழ்சினிமாவின் நிலைமையே வேறு.

யார் நினைத்தாலும், இயக்குநராகலாம், நட்சத்திரமாகலாம், தயாரிப்பாளராகலாம் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, சினிமாவை சாமானியனுக்கும் சாத்தியமாக்கி இருக்கிறது. பல லட்சங்களைக் கொட்டி, ஃப்லிம் ரோல்களை வாங்கவேண்டிய அவசியம் இல்லை. ’5டி’, ’ரெட் எபிக்’ இன்னும் பல நவீன டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டதால், இவ்வளவுதான் ஷூட் பண்ணமுடியும் என்ற வரையறை இல்லை. ஃபெப்சி போன்ற அமைப்புகளின் கெடுப்பிடிகளும் தற்போது அதிகம் இல்லை. அதேநேரம், திரையரங்கிற்கு சென்று படம்பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம் இல்லை.

ஒருபக்கம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும், பெரும் எதிர்பார்பை உருவாக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள், எதிர்பார்க்காத தோல்வியை தழுவுகின்றன. மறுபக்கம், ’அயோத்தி’ ‘குட் நைட்’ போன்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் கூட, மக்களிடம் வரவேற்பைப் பெற்று, வசூலையும் தருகின்றன. ஆனாலும் தமிழ்சினிமா இன்று ஆரோக்கியமாக இல்லை.

‘எப்படி சார் தமிழ்சினிமா ஆரோக்கியமா இருக்க முடியும்? டிக்கெட் விலை எவ்வளவுன்னு தெரியுமா… பாப்கார்ன், வாட்டர் பாட்டிலுக்கு ரெண்டு, மூணு மடங்கு காசு வாங்குறாங்க…. பார்க்கிங்குக்கு பர்ஸ்ஸை காலி பண்ணிடுறாங்க… ஒரு குடும்பம் படம் பார்க்கணும்னா ஆயிரத்து ஐநூறு ரூபா காலி…’ இப்படி அடுக்கடுக்கான புலம்பல்கள் உங்களிடம் இருந்து வருவதை உணரமுடிகிறது.

இதையும் தாண்டி வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா???

ஆமாம். நிச்சயமாக.

சமீபத்தில் வெளியான பிரபல கதாநாயகனின் படம் குறித்து, ஒரு விமர்சகர் சமூக ஊடகத்தில் தனது விமர்சனத்தை முன்வைத்தார். அவ்வளவுதான் அடுத்தவிநாடியே சமூக ஊடகங்களில் ’கமெண்ட் கலவரம்’ மூண்டது. ஒரு பத்திரிகையாளர், ஒரு நடிகரின் படத்தை, மற்றொரு நடிகரின் படத்தோடு குறிப்பிட்டு கருத்திட்டார். அவ்வளவுதான், ரசிகர்களில் சிலர் தங்களது வம்படியான வார்த்தைகளால், முன்னணி நடிகரின் இமேஜ்ஜையே பதம்பார்த்துவிட்டார்கள். நான் அப்படிப்பட்டவர் இல்லை என அந்த நட்சத்திரம் தானாக வலிய வந்து சொல்லுமளவுக்கு நிலைமை மாறியது.

சில நேரங்களில், சில முன்னணி நட்சத்திரங்களின் படங்களைப்பற்றி, மனதில்பட்டதை வெளிப்படையான விமர்சனமாக முன்வைத்தால்,  விமர்சகரின் கைப்பேசி எண்ணைக் கண்டறிந்து, அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அந்த எண்ணிற்கு போன் செய்து, முடிந்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டுங்கள் என்று பல ரசிகர்கள் நிதானமிழக்கும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறி வருகின்றன. (குறிப்பு – இதில் எந்த நடிகராக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் அனைவருமே முரட்டு ரசிகர்கள் அல்ல. நல்லவர்கள் அதிகமிருந்தாலும், முரட்டு ரசிகர்களும்  கூடவே இருக்கிறார்கள்). சில முரட்டு ரசிகர்களால் இதே அனுபவம் அனைத்து  விமர்சகர்களுக்கும் தொடர்கிறது.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தமிழ்சினிமாவில் யாரும் புரிந்து கொள்வதே இல்லை. தரமானப் படங்கள் வரும்போதெல்லாம், மக்களுடன் விமர்சகர்களும் படம் பார்க்க திரையரங்கு செல்கின்றனர். படம் பார்க்கும் மக்களின் கருத்துகளையே, விமர்சகர்கள் தங்களது திரைவிமர்சனத்தில் கமெண்ட்களாக பிரதிபலிக்கிறார்கள். ஆனால், விமர்சனங்கள் தரும் படிப்பினையை, யதார்த்தத்தை, எதிர்பார்புகளை தமிழ்சினிமாவில் யாரும் புரிந்து கொள்வதும் இல்லை. ஏற்றுக்கொள்வதும் இல்லை.

தனது கவலைகளை மறக்க, கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் டிக்கெட் வாங்குகிறான் சாதாரண ரசிகன். இந்த நடிகரின் படம் நிச்சயம் நன்றாக இருக்கும். இந்தப்படத்தில் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்ற நம்பிக்கையில் திரையரங்கிற்குள் வருகிறான். படம் பார்த்து ஏமாறுகிறான்.  அப்படியென்றால், அப்படத்தில் நடித்த ஆதர்ச கதாநாயகன் தனது ரசிகனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமில்லையா….தன்னையே ஒப்படைத்த ஹீரோவுக்கு சரியான கதையை யோசிக்காத இயக்குநர், அந்த ஹீரோவுக்கும் செய்யும் நம்பிக்கை துரோகமில்லையா… தவறுகளை, எதிர்பார்புகளைச் சுட்டிக்காட்டினால் தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்றுவரை திரைப்படங்களை விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதலுக்கு உள்ளாகி வருவது, ஆரோக்கியமான சினிமாவுக்கான தளம் அல்ல.

மற்றொருப்பக்கம், செலவு மிகமிக குறைந்திருந்தாலும், தரமானப் படங்களை சிந்திக்கவும், இயக்கவும் படைப்பாளிகள் முன்வருவதில்லை. இது வருத்தப்படவேண்டிய ஒன்று. ஒரு படம் நன்றாக வரவேற்பைப் பெற்றிருந்தால், காஸ்ட்யூம், லொகேஷன், வசனம்  ஆகியவற்றை மட்டும் மாற்றிவிட்டு அதே கதையை, அதே களத்தை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என திரும்ப திரும்ப எடுப்பது ட்ரெண்டாகிவிட்டது.

படைப்பாளிகளுக்கு தங்களது படங்களுக்கான பெயரை கூட யோசிப்பதற்கு அவகாசம் இல்லை அல்லது அவர்கள் தயாராக இல்லை. எம்ஜிஆர் அல்லது ரஜினிகாந்த் நடித்த ஹிட் படங்களின் பெயரையே தங்களது புதிய படங்களுக்கு வைத்துவிடுகிறார்கள். இல்லையென்றால், ஆங்கிலத்தில் பெயரை வைத்து ஹாலிவுட் படங்களைப்  போல் விளம்பரப்படுத்துகிறார்கள்.

அடுத்து, முன்னணி ஹீரோக்களில் பலர், தனக்கென ஒரு ரசிகர்கூட்டம் இருக்கிறது என்ற ஒரு ’மெய்நிகர் உலகத்தில்’ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ‘’ஜி உங்க ஆடியன்ஸே வேற ஜி.. ‘, ‘சீஃப், உங்க ஒபனிங் யாருக்கு இருக்கு?”’ என எண்ணெய் இல்லாமலே பஜ்ஜி போடும் சில ’ஜி’.-கும்பல்களின் சீப்பான ஜால்ராவில்  கதாநாயகர்களும் டக் அவுட் ஆகிவிடுகிறார்கள்.

 உண்மையில், ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்  உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்தே வந்துள்ளனர்.  மாஸ் ஹீரோக்களிடம், மாறுபட்ட கோணமுள்ள கதையை சொல்வது என்பது கோடம்பாக்கத்தில் ’சினிமா குத்தம்’  என்றே ஆகிவிட்டது.

‘நான் மாஸ் ஹீரோ. எனக்குன்னு ஆடியன்ஸ் இருக்காங்க. என்னோட ஸ்டைலுக்கு தகுந்தமாதிரி கதைப் பண்ணுங்க’’ என்று எந்த முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களும் சொன்னதில்லை என்று முன்னணி படைப்பாளிகளால் சத்தியம் செய்யமுடியுமா???.

படைப்பாளிகளுக்கு இருக்கும் இந்த சிக்கல், எம்ஜிஆர் காலம் முதல்  இன்றுவரை நடந்துவரும் ’வழக்கமான பிழை’. இதனால் படைப்பாளிகள் ஒரு வட்டத்திற்குள்ளேயே அடைப்பட்டு விடுகிறார்கள். இந்த பிழையைக் களையாதவரை, பெரிய நடிகர்களின் படங்களில் ஏதாவது ஒரு படம், எப்போதாவது மக்களிடம் வரவேற்பைப் பெறும் படமாக அமையும். பெரிய நடிகர்கள் தங்களுக்கு இருப்பதாக நினைக்கும் ‘மெய்நிகர் எதிர்ப்பார்புகள்’, ‘கமர்ஷியல் க்ளிஷேக்கள்’ அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, கொஞ்சம் மாறுபட்ட கதையில் நடிக்க ஆரம்பித்தால், அந்தப்படங்கள் வெற்றிப்பெறும். தமிழ்சினிமாவின் இன்றைய முன்னணி நடிகர்களின் சில படங்கள், இன்றும் சமூக ஊடகங்களில் கேலிக்குரியப் படங்களாக வலம்வருவது  குறையும். 

முன்பெல்லாம், தினசரிகளில் வரும் விமர்சனம், வார இதழ்களில் வெளிவரும் விமர்சனம், படம் பார்த்தவர்களின் வாய் வழியாக வெளிப்படும் ‘வேர்ட் ஆஃப் மெளத்’ விமர்சனம் என முன்பெல்லாம் மக்கள் விமர்சனங்களைத் தெரிந்துகொள்ள நாட்கள் பிடித்தன.

ஆனால் இன்று… பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் தமிழ்சினிமாவில் முதல் நாள், முதல் காட்சியை வெற்றியடைய வைக்கும் பவர்ஃபுல் மாஸ்ஸாக திகழ்கிறார்கள். இந்த இளைஞர் பட்டாளம் பல்வேறு ரசனைகளைக் கொண்டது. பல்வேறு அறிவுகளைக் கொண்ட ரசிகர்கள் கூட்டம் இது. இந்த ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு நட்புவட்டம் இருக்கிறது. இப்போது இவர்களது பாக்கெட்டுக்குள்தான் தமிழ்சினிமா இருக்கிறது. ‘ஐ யம் வாட்சிங் …….. வித் ஃப்ரெண்ட்ஸ்’ என்று தனது பாக்கெட்டுக்குள் இருக்கும் ஆண்ட்ராய்ட் போனை கையிலெடுத்து, சமூக ஊடகத்தில் தட்டிவிடும் செல்ஃபியிலிருந்து ஆரம்பிக்கிறது, ஒரு படத்தின் தலைவிதி. ’ப்ரேக்கிங் நியூஸ்’ என்று பரபரப்பை கிளம்பும் செய்தி தொலைக்காட்சிகளைவிட, நொடிக்கு நொடி படம் பற்றிய அசத்தலான கமெண்ட்களை படு ஸ்பீட்டாக அப்லோட் செய்கிறார்கள். ‘படம் மொக்க’…’இந்த ஹீரோவை வேஸ்ட் செய்துவிட்டார்கள்’..’டிக்கெட் காசு..  டூவீலர் பார்க்கிங் காசு வேஸ்ட்’ என ஒற்றைவரியில் மளமளவென ஒரு படத்தின் வசூல் நிலவரத்தை கலவரமாக்கிவிடுகிறார்கள். ஒருவருக்கு 5 நண்பர்கள் என்றால், அந்த 5 நண்பர்களுக்கு வேறு வேறு நட்புவட்டம். இதனால் அந்த ஒற்றைவரியே, விமர்சனமாக வைரலாகிறது. மற்றொரு பக்கம் தரமான படங்கள் வெற்றிப்படங்களாக மாற இந்த இளைஞர்படையின் ஒற்றைவரி யதார்த்தமான விமர்சனங்களும் காரணம்.

ஒரு புதியப்படத்தின் விமர்சனம் முதல் நாள் முதல் காட்சியின் முதல் இருபது நிமிடங்களிலேலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இதனால் உண்மையிலேயே தரமானப் படமாக இருக்கும்பட்சத்தில், மக்களிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. கொஞ்சம் சலிப்பு தட்டினாலும், மீம்ஸ்களுக்கு இரையாகிவிடுகிறது.

திரைப்பட விமர்சனங்கள் மீதான அலட்சியப் போக்கு மற்றும் விடாப்பிடியாக க்ளிஷேக்களை தூக்கிப்பிடிக்கும் ஹீரோக்கள், அதற்கு துணைப்போகும் படைப்பாளிகள் விஷயத்தையும் தாண்டி தற்போது தமிழ் சினிமா ஆர்வக்கோளாறினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒல்லியாக, மாநிறமாக, ஹீரோவுக்கான சினிமா இலக்கணங்கள் எதுவுமில்லாமல், சினிமாவிற்குள் நுழைந்து, இன்று உலகளவில் ரீச் ஆகியிருக்கும் ‘தனுஷ்’ தான் இவர்களுக்கு முன்னுதாரணம். ’தனுஷ் ஜெயிக்கலையா… நானும் வந்து காட்டுறேன்’ என ஊரில் வசதியாக இருக்கும் தனது அப்பாவையோ, மாமாவையோ, தயாரிப்பாளராக்கி விடுகிறார்கள். அவர்களும், மகனுக்கோ அல்லது மருமகனுக்கோ மொய் எழுத சினிமாவை புரிந்து கொள்ளாமலேயே கிளம்பிவந்துவிடுகிறார்கள்.

இங்கே இயக்குநர் வாய்ப்புக்காக தவமிருப்பவர்கள் தங்களது லட்சியம் நிறைவேண்டுமே என்பதற்காக, கதைக்கும், ஹீரோவுக்கும் பொருந்தமில்லை என்றாலும் கூட ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, எப்படியாவது ஒரு கதையைச் சொல்லி, எப்படியாவது ஷூட்டிங்கையும் முடித்துவிடுகிறார்கள். இதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸூக்கு காத்திருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் வரிசை ரேஷன்கடைகளில் நிற்கும் கூட்டத்தைவிட மிகவும் நீளமானதாக இருக்கிறது.

காரணம், சினிமாவின் பலம் அப்படி. எப்படிப்பட்டவரையும் ஒரே நாளில் ஊடகங்களின் வெளிச்சத்தில் நனைய வைக்கும். ஊரெங்கும் போஸ்டர்களில் போஸ் கொடுக்கவைக்கும். ஷாப்பிங் மாலுக்கு நுழைந்தால், ஒரு செல்ஃபி எடுக்கலாமா என பப்ளிக்கை  கேட்கத்தூண்டும். இந்த போதைக்கு ஆசைப்படுபவர்கள் தயாரிப்பாளர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ அவதாரமெடுக்க  கிளம்பி வந்துவிடுகிறார்கள்.

சினிமாவைப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாமல், அதன் செலவு, வர்த்தகம் மற்றும் நடைமுறைகள் தெரியாமல் பணத்தைக் கொட்டிவிடுகின்றனர். சினிமாவின் மற்றொரு பக்கம் புரியும்போது, பாதிப்படத்தின் ஷூட்டிங் முடிந்திருக்கும். வேறுவழியில்லாமல், ஊர்ப்பக்கம் கெளரவத்தை விட்டுகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக, கந்துவட்டிக்கு  ஃபைனான்ஸ் வாங்கி ரிலீஸூக்கு முயற்சிப்பவர்கள், படம் வியாபாரம் ஆகாமல், ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைக்காமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள்.

இதையும் தாண்டி வருடத்திற்கு, தோராயமாக 200 படங்களாகவது வெளிவந்துவிடுகின்றன. மேம்போக்கான கணக்கில் பார்த்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு படம் என்றரீதியில் படங்கள் வெளியாகின்றன. அப்படியானால், எந்தப்படத்தை பார்ப்பது? எல்லா படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பது எப்படி சாத்தியம்?  இப்பிரச்னையில், புதிய முகங்கள் நடித்திருக்கும் அருமையான, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, வித்தியாசமான படங்கள் மக்களின் பார்வைக்கு வராமலேயே வந்து போய்விடுகின்றன.

இதற்கு ஒரே வழி….தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து, இவ்வளவு படங்களைதான் எடுத்து வெளியிடமுடியுமென சரியான திட்டமிடலை மேற்கொள்ளலாம். இதன் மூலம் அனைத்துப்படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்கும், தேவையான விளம்பரம் கிடைக்கும், தேவையில்லாத நெருக்கடி குறையும். அதேநேரம் இதற்கு எதிர்விளைவாக, ரிலீஸ் ஆவதற்கு காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரிலீஸிற்காக காத்திருக்கவேண்டியது கட்டாயமாகும். இதனால் பப்ளிசிட்டிக்காக, படமெடுக்க நினைப்பவர்களின் நெரிசல் கோடம்பாக்கத்தில் குறையலாம். உண்மையிலேயே சினிமாவை நேசிப்பவர்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பார்கள்.

இன்று ஃப்லிம் ரோல் இல்லாததும், தொழில்  அமைப்புகளின் கெடுப்பிடிகள் அதிகமில்லாததாலும் அதிக எண்ணிக்கையிலான படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை நினைத்து, சந்தோஷப்படுவதா இல்லை…. சினிமாவின் மீதிருக்கும் அந்த கவர்ச்சியை, காதலை காலிப்பண்ணும்வகையில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம், நடிக்கலாம் என சினிமாவை நீர்த்துப்போக செய்வதை நினைத்து வருந்துவதா… புரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...