No menu items!

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது எப்படி? – Infosys நாராயணமூர்த்தி Tips

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது எப்படி? – Infosys நாராயணமூர்த்தி Tips

பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற வேண்டுமானால் தினமும் 14 மனிநேரம் உழைக்க நம் நாட்டு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் ஒரு அறிவுரையை சொல்லியிருந்தார் தொழிலதிபரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி. இது நாடு முழுவதும் பெரிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒருவர் தினமும் 14 மணி நேரம்வரை உழைத்தால், மீதி நேரம் பயணத்துக்கும் தூங்குவதற்குமே சரியாகப் போய்விடுமே… பிறகு குடும்பத்துக்கு எப்படி நேரம் செலவிடுவது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு அப்போது பதில் அளித்திருந்த நாராயணமூர்த்தி, “நான் என் சிறுவயதில் புதிய நிறுவனத்தை தொடங்கியபோது தினமும் 14 மணிநேரத்துக்கு மேல் உழைத்தேன்” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் தனது சிறுவயதில் வேலைகளுக்கு மத்தியில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தது எப்படி என்பதைப் பற்றி சமீபத்தில் நாராயணமூர்த்தி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த அவர், “நான் தினமும் காலை 6 மணிக்கு அலுவலகம் செல்வேன். அங்கு 13 மணிநேரத்துக்கு மேல் உழைத்து, இரவு 9.15 மணிக்குத்தான் நான் வீட்டுக்கு திரும்பி வருவேன். அங்கு என் குழந்தைகளும், மனைவியும் எனக்காக வீட்டு வாசலில் காத்திருப்பார்கள். நான், என் மனைவி சுதா, குழந்தைகள், மாமனார் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு வெளியில் செல்வேன். அவர்கள் விரும்பும் உணவைச் சாப்பிட நாங்கள் ஓட்டல்களுக்கு போவோம்.

அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். அந்த 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை என் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். நாம் எத்தனை மணிநேரம் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி நேரம் செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே விதிதான். எனது சகோதரிகள் உள்பட அனைவருக்கும் அதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நீங்கள் யாவரும் நன்றாக இருக்கும்போது நான் உங்களுக்குத் தேவைப்பட மாட்டேன். ஆனால் உங்களில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சினை என்றால் உங்களுக்காக நான் இருப்பேன். அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் வெளியேற உதவியாக இருப்பேன் என்று என் குடும்பத்தினர் அனைவருக்கும் நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.

மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, மவுலானா ஆசாத் போன்ற தலைவர்களால்கூட தங்கள் குடும்பத்துக்கு குறைந்த அளவிலேயே நேரத்தை ஒதுக்க முடிந்தது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்காவிட்டால் நாம் இன்று சுதந்திரமாக வாழ்ந்திருக்க முடியாது” என்று பேட்டியில் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...