லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தின் இயக்குநர் யார் என்ற பஞ்சாயத்து ஒய்ந்து, அடுத்து எப்போது ஷூட்டிங் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவே மாதக்கணக்கில் இழுத்து கொண்டு போனது.
இப்போது ஒரு வழியாக அஜர்பைஜான் நாட்டில் ’விடாமுயற்சி’யின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி உட்பட ஒட்டுமொத்த யூனிட்டும் இந்தியா திருப்பிவிட்டார்கள்.
பொதுவாகவே தனது படம் வெளியாகும் போதே அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவது விஜயின் வழக்கம். ஆனால் அஜித் அப்படியெல்லாம் யோசிப்பதும் இல்லை. திட்டமிடுவதும் இல்லை.
இதனால் ’விடாமுயற்சி’க்குப் பிறகு அஜித் நடிக்கப் போகும் படம் பற்றிய பரபரப்பே இல்லாமல் இருந்தது. ஆனால் விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் எதிர்பாராத பாராட்டைப் பெற்றதும், அப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதுதான் அஜித் படம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
நான் இந்தப்படம் பண்ண காரணம் அஜித்தான் என்று ஆதிக் ரவிச்சந்திரன் மேடையில் உரக்க கூறியதும், அஜித்தின் அடுத்தப்படத்தை ஆதிக் இயக்கப் போகிறார் என்று ஒரு பேச்சு எழுந்தது.
ஆனால் இப்போது ஒரு புதிய கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
அதாவது அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது ஒரு தெலுங்கு இயக்குநர். பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வீர சிம்ஹ ரெட்டி’ படத்தை இயக்கிய கோபிசந்த் மாலினெனிதான் அவர். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.
கமர்ஷியலான மசாலா படங்களை எடுப்பதில் கில்லாடியான கோபிசந்த் மாலினேனி அஜித்துடன் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.