No menu items!

சில நிமிட உச்சக்கட்டம்! ட்ரெண்ட்டிங் போதையில் தமிழ்சினிமா.

சில நிமிட உச்சக்கட்டம்! ட்ரெண்ட்டிங் போதையில் தமிழ்சினிமா.

எக்கச்சக்கமான எதிர்பார்புகளோடு காத்திருந்து, ஒருவழியாக ஏடிஎம்மிற்குள் நுழைந்து டெபிட் கார்டை சொருகிப் பார்க்கும் போது, உள்ளே ஒன்றுமில்லை என தெரிந்தால் ஒரு சிட்டிசனுக்கு எப்படியிருக்குமோ அதே ’அவ்வ்வ்’ மொமெண்ட்தான் இன்றைக்கு ’சோஷியல் மீடியா ’ட்ரெண்ட்டிங்கில்’ பட்டையைக்கிளப்பும் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்குள் நுழையும் ’நெட்’டிசன்களுக்கும்.

காரணம் ரொம்ப சிம்பிள். தமிழ் சினிமாவில் இன்றைக்கு அருமையான கதைக்கும், பெயர்சூட்ட அழகான பெயர்களுக்கும் உருப்படியாக யோசிக்கிறார்களோ இல்லையோ ஆனால் தங்களது படங்களை, ’ட்விட்டர்’, ‘ஃபேஸ்புக்’. ‘யூ ட்யூப்’ உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ‘ட்ரெண்ட்டிங்’கில் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஒரே முனைப்பில் இருக்கின்றனர் இன்றைய ‘5G’ தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்.

‘டிஜிட்டல் இந்தியா…டிஜிட்டல் இந்தியா’ என மோடி அறைக்கூவல் விடுக்கும்போது, அதென்ன பாஸ் சோஷியல் மீடியா…ட்ரெண்ட்டிங்..இத்யாதிகள் எல்லாம் என கேட்கிற அப்பாவி சிட்டிசன்னா நீங்கள்? அப்படியானால் இதோ உங்களுக்காக ஒரு சோஷியல் மீடியா டீசர். ஃபேஸ்புக் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும், ஆனால் ட்விட்டர் ட்ரெண்டிங், யூ ட்யூப் வியூ’ சமாச்சாரம் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

ட்விட்டர் அதாவது இன்றைய X என்பது 140 எழுத்துகளில் தகவல்களையும், 4 புகைப்படங்களுடனும் செய்திகளையும், சொந்த கருத்துகளையும், பணத்திற்காக விளம்பர வார்த்தைகளையும் பதிவிட உதவும் ஒரு சமூக வலைதளம். இங்கு அக்கெளண்ட் வைத்திருக்கும் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட இதர விஐபிக்களை நீங்கள் ஃபாலோ என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பின் தொடரலாம். அதாவது அவர்கள் பதிவிடும் தகவல்கள், புகைப்படங்களை நீங்கள் உங்கள் அக்கெளண்ட் பக்கத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இவர்களைத் தவிர இப்போது ‘இன்ஃப்ளூயன்ஸர்’ (INFLUENCER) எனப்படும் அதிக பாலோயர்களை கொண்ட ’திடீர்’ பரபரப்பை கிளப்பும் சாமானியர்களும் உள்ளனர். இவர்கள்தான் இந்த ‘ட்ரெண்ட்டிங்’ எனும் சில நிமிட பப்ளிசிட்டி ஆட்டத்தின் மாடர்ன் சாணக்கியர்கள்.

இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ அல்லது ஹீரோவோ அல்லது அப்படத்தின் மக்கள் தொடர்பாளரோ விரும்பினால், வெளியாகவுள்ள தங்களது படங்களைப்பற்றி, ‘மோஸ்ட் எக்ஸ்பெட்டேட்’, ‘காண்ட் வெயிட்’ ‘சூப்பர் டூப்பர் மாஸ் மூவி’ ‘மோஸ்ட் அவெய்டிங்’ என இதரபல வார்த்தை ஜாலங்களுடன் விளம்பரப்படுத்த இந்த இன்ஃப்ளூயன்ஸர்களுக்கான ஊதியத்தைக் கொடுத்துவிட்டால் போதும். சில நிமிடங்களில் இந்தியாவில், சென்னையில் என ’அதிகம் பேசப்படக்கூடிய’, ’அதிகம் பகிரப்படக்கூடிய’ விஷயமாக அந்த குறிப்பிட்ட படத்தைப் பற்றி ட்வீட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு படத்திற்கான பப்ளிசிட்டியை ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வார்த்தைகளை திரும்ப திரும்ப பயன்படுத்தி 140 வார்த்தைகளில் தங்களது பணியை ஆரம்பித்துவிடுவார்கள். தங்களது ஹீரோவின் படங்களுக்கு இவர்கள் இதுபோன்ற பப்ளிசிட்டி மற்றும் தகவல்களைப் பரிமாறுவதால் இவர்களுக்கான ஃபாலோயர்கள் அதிகமிருப்பார்கள். இவர்கள் அனைவரும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் அல்லது சினிமாவை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் சாதாரண நெட்டிசன்கள்.

இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படத்தின் விளம்பரத்திற்காக, ஒரே நேரத்தில் திரும்ப திரும்ப ட்வீட் செய்வதன் மூலம், அவர்களது ஃபாலோயர்கள் அதை ரீட்வீட் அதாவது ரீபோஸ்ட் முறையில் மீண்டும் ட்வீட் செய்ய, X-ல் அப்படத்தின் பப்ளிசிட்டி தூள் பறக்கும். இதைதான் ‘ட்ரெண்ட்டிங்’ என்று சொல்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படம் பற்றிய தகவல் அதிகம் பகிரப்பட்டால், ட்ரெண்ட்டிங் ஆகிவிடும். இந்த ட்ரெண்டிங் போதைக்காகவே தமிழ் சினிமாவில் பாதிப்பேர் ஸ்மார்ட் ஃபோனிலேயே 24X7 காலம் கழிக்கிறார்கள்.

உண்மையைச் சொல்ல போனால், இந்த ட்ரெண்ட்டிங் என்பது சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க கூடிய உச்சக்கட்ட பப்ளிசிட்டி. சில சமயங்களில் ட்ரெண்ட்டிங்கானது 12 மணி நேரம் தாக்குப்பிடிக்கலாம். இந்த ட்ரெண்ட்டிங்கை கிளப்ப லட்சக்கணக்கானோர் தேவையில்லை. விரல் விட்டு என்ணக்கூடிய சிலர் இருந்தால் போதும். சோஷியல் மீடியாவின் ஹிட் ஃபார்மூலாவின் ஓட்டைகள் தெரிந்திருந்தால் இனி நீங்களும் ஒரு இன்ஃப்ளூயன்ஸர் ஆகலாம். ஸ்மார்ட் ஃபோன் உதவியுடன் உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களில் சம்பாதிக்கலாம். உண்மையில் இது ஒரு ‘ஹைடெக் குடிசைத் தொழில்’ ஆக கிடுகிடு வளர்ச்சிக் கண்டு வருகிறது.

தனது ஆதர்ச நாயகனின் படம் ஓடவேண்டுமே இல்லையென்றால் பாக்ஸ் ஆபிஸில் போட்டியாளரான மற்றொரு ஹீரோவின் ரசிகர்கள் X-லும், ஃபேஸ்புக்கிலும் கிண்டலடிப்பார்களே என்ற ’ஈகோ’, ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களையும் இந்த X-ல் ட்ரெண்ட்டிங் போராட்டத்தில் இழுத்துவிடுகிறது. இதேபோல் ஒரு ஹீரோவை தாக்கி உருவாக்கப்படும் ப்ரத்யேக வார்த்தைகளின் கோர்வை ’#’ என்ற அடைமொழிக் குறியீட்டுடன் பகிரப்படும் போது அந்த ஹீரோவின் போட்டியாளரான மற்றொரு ஹீரோவின் ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் மற்றும் ரீபோஸ்ட் செய்ய அதுவும் ட்ரெண்ட்டிங் ஆகும். ஆக இது போன்ற ட்ரெண்ட்டிங் சமாச்சாரத்தில் சாதாரண நெட்டிசன்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அதனால் இந்த ட்ரெண்ட்டிங் என்பது ‘PRE-TRUTH ILLUSION’ ஆக மட்டுமே கவனத்தைக் கவர்கிறது.

ட்ரெண்ட்டிங் விஷயத்தில் சுவாரஸ்யமான விஷயம், ட்ரெண்ட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய பல படங்கள் (ஒரு சில படங்கள் மட்டும் விதிவிலக்கு. காரணம் அப்படங்களின் கதை, திரைக்கதை, இசை, மேக்கிங் இவை அனைத்துமோ அல்லது ஒன்றிரண்டோ உண்மையிலேயே பாராட்டும்படி இருந்தது), பாக்ஸ் ஆபிஸில் சூட்டைக் கிளப்பவே இல்லை என்பதுதான். இதனால் இன்று ட்ரெண்ட்டிங்கில் ஹிட்.. பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் ரிவிட்.. வாங்கிய படங்களின் பட்டியல் அதிகம் நீண்டுக்கொண்டே போகிறது.

அடுத்து ’ஃபர்ஸ்ட் லுக்’, ’டீசர்’, ’ட்ரெய்லர்’ கலாட்டாக்கள். இந்த ஹீரோவின் ட்ரெய்லர், சோஷியல் மீடியாவில் வெளியான 10 நிமிடத்தில் 10 மில்லியன் ’வியூ’ (VIEWS), 15 மில்லியன் ‘லைக்ஸ்’ (LIKES) என்பது போன்ற விளம்பர வாசகங்களுடன் கூடிய விளம்பரத்தை தினசரிகளில் பார்த்திருப்பீர்கள். இதுவும் சாதாரண மக்களின் காதில் பூ சுற்றும் வேலைதான்.

காணொலிகளை பதிவேற்றம் செய்யும் சோஷியல் மீடியாவில், ஒரு படத்தின் டீசரை அப்லோட் செய்துவிட்டால், அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையானது வியூஸ்-ல் இடம்பெறும் அதிக ’வியூ’, அதிக ’லைக்’ பெறுகிறார்கள் என்பதில்தான் இப்போது கோடம்பாக்கத்தில் கடும்போட்டி.

இதற்கும் ‘ஹைடெக் குடிசைத் தொழில்’ சிலருக்கு கைக்கொடுக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட வேலையை திரும்ப திரும்ப செய்வதை ‘PEDDLING’ என்று அழைக்கிறார்கள். இதை செய்வதற்கு ’PODS’ உதவுகின்றன. அதாவது ஒரு ஹீரோ படத்தின் டீசர் வெளியாகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்த டீசரின் இணைய முகவரிக்கு மீண்டும் மீண்டும் செல்லவும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த, வேறு வேறு நெட்வொர்க்கில் இருந்து க்ளிக் செய்து, அதை ஒரு வியூவாகவும் கணக்கிட இவை உதவுகின்றன. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், நாலைந்து கம்ப்யூட்டர்களை ஒரே அறையில் வைத்துகொண்டு, அவற்றுக்கு ‘வர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க்’ (VIRTUAL PRIVATE NEWTWORK – VPN) எனப்படும் சாப்ட்வேரை பயன்படுத்தி, உங்கள் இடத்தில் இருந்தபடியே வெவ்வேறு ஐபி (INTERNET PROTOCOL) முகவரிகளில் ஒரே நேரத்தில், ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய முடியும். அதாவது நீங்கள் உசிலம்பட்டியில் இருந்தாலும், லண்டன், நியூயார்க், பாரீஸ், ஸ்விட்சர்லாந்து, ஹாங்காங், பட்டையா என பல நகரங்களில் நீங்கள் இருப்பது போன்ற போலியான அடையாளத்தை உருவாக்கும் வகையில் மெய்நிகர் முகவரியை உருவாக்கி கொடுக்கும். இந்த புதுப்புது ஐபி அட்ரஸை வைத்துகொண்டு, அந்த டீசரை க்ளிக் செய்தால் போதும். உங்கள் பெட்ரூமில் ஹாயாக படுத்தப்படியே, மெளஸை மட்டும் க்ளிக் செய்து, வெவ்வேறு ஊர்களில் இருந்து வேறு வேறு நபர்கள் அந்த டீசரை கண்டுக்களிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இதுவொரு கில்லாடி டெக்னிக்.

அடுத்ததாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் சில முக்கிய இணையதளங்களுக்கு விளம்பரங்களைக் கொடுப்பார்கள் இங்குள்ள சோஷியல் மீடியா ஏஜென்ஸி பார்ட்டிகள். அதாவது அந்த இணையதளங்களை அங்குள்ள மக்கள் பார்க்க செல்லும் போதேல்லாம், ’பாப் அப்’ (POP UP) எனப்படும் விளம்பர கட்டம் டமால் என்று வெளிப்படும். அதாவது அந்த பாப் அப்பில் இந்த படத்தின் டீசர் ஓடும். இந்த பாப் அப்பை அவர்கள் பார்க்கவிட்டாலும், இதுவும் ஒரு ‘வியூ’ ஆக கணக்கில் சேர்ந்துவிடும். எனவே பத்து மில்லியன் அல்ல 2 கோடி வியூக்களும் கூட, இப்போது சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு எளிதில் தொட்டுவிடக்கூடிய இலக்கே. மேற்படி டீசரை யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை அவர்களின் இருப்பிடம் சார்ந்த அதாவது ஜியோக்ராஃபிக்கலாக பார்த்தால் போதும், உண்மை வெட்டவெளிச்சமாகிவிடும். ஆனால் நம்மூர் பப்ளிசிட்டி கோயிந்துகள் ’என் தலைவருக்கு சோமாலியாவுல கூட ரசிகர்கள் இருக்காங்க, உகாண்டாவுல நற்பணி மன்றம் இருக்கு. பட்டயாவுல ரசிகைகள் மன்றம் இருக்கு’ என புது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு ‘குபீர்’ ஷாக்குகளை கொடுப்பார்கள்.

மொத்தத்தில் இந்த போலியான இலக்க போட்டிக்குதான் அப்பாவி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிதானம் இழந்து, வார்த்தை மோதல்களில் ஈடுப்பட்டு, அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் ஃபேவரிட் ஹீரோக்களுக்கும் கெட்டப் பெயரை உருவாக்கிவிட நேர்கிறது.

’மில்லியன்களை கடந்த டீசர்’ என்ற ரிக்கார்ட்டை உண்டாக்கிய பெரும் ஹீரோக்களின் சில படங்கள் கூட பாக்ஸ் ஆபீஸில் களைக் கட்டியது இல்லை என்பது அடுத்த உண்மை.

ரசிகர்களின் இந்த மோதல் மூலம் குளிர்காய்கிற, சில ஹீரோக்களும் இருக்கிறார்கள் (அனைத்து ஹீரோக்களும் இப்படியில்லை) என்பது உச்சக்கட்ட கொடுமை.

’ஆக மொத்தத்தில் இந்த ட்ரெண்ட்டிங் கலாட்டாக்கள் கல்யாண வீட்டிற்கு எழுதும் வராத மொய்!’ என்று இப்போது நீங்கள் முணுமுணுப்பது இங்கே வரை கேட்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...