No menu items!

1 ரூபாய் 30 பைசாவுடன் சென்னைக்கு வந்தேன்! வண்ணநிலவன்

1 ரூபாய் 30 பைசாவுடன் சென்னைக்கு வந்தேன்! வண்ணநிலவன்

வண்ணநிலவன்

நா. காமராசன் வீட்டு படியேறினேன். ஒருவர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவர்தான் பாலகுமாரன். நான் விக்ரமாதித்யனை தேடி வந்திருக்கிறேன் என்றதும் என்னை பக்கத்திலிருந்த அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

புதிதாக யாருடனாவது நமக்கு அறிமுகம் ஏற்பட்டால், எந்த ஊரில் இருக்கிறார், குடும்பம் போன்ற விவரங்களில் தவறாமல் இடம்பெறும் விசாரணை, “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”என்ற கேள்வி. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கேட்கப்படும் கேள்வி இது. நாம் பழகும் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களாகத்தான் அமைவார்கள். அபூர்வமாக வியாபாரத்தில் ஈடுபடுகிறவர்கள், சுயதொழில் செய்கிறவர்களும் தட்டுப்படலாம்.

1969இல் என்னிடம் இந்த கேள்வியை கேட்டால், “குமாஸ்தாக இருக்கிறேன்” என்று சொல்லி இருப்பேன். எஸ்.எஸ்.எல்.சி. படித்தவனுக்கு, அதுவும் 236 மார்க்கில் தப்பித்தவறி பாஸானவனுக்கு திருநெல்வேலியில் கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும்? திருநெல்வேலியில் கஷ்டப்பட்ட கீழ் மத்தியதர வர்க்கத்து இளைஞர்களின் புகழிடம், ஏதாவது கடையில் வேலை பார்ப்பதுதான். என் அதிர்ஷ்டம் எனக்கு குமாஸ்தா என்ற சற்றூ கெளரவமான வேலை கிடைத்தது.

பாளையங்கோட்டையில் டாக்டர்களை விட அந்த காலத்தில் அட்வகேட் என்ற வக்கீல்கள் அதிகம் பேர் இருந்தனர். அப்படி ஒரு வக்கீலான டி.எஸ். ஸ்ரீனிவாசகத்திடம் (தாமஸ் சுந்தரம் ஸ்ரீனிவாசகம்) நான் 1969 ஜனவரி 1ஆம் தேதி வைத்து குமாஸ்தாவாக சேர்ந்தேன். சம்பளம் 30 ரூபாய். மதியமும் இரவும் வக்கீல் வீட்டிலேயே சாப்பாடு. டி.எஸ். ஸ்ரீநிவாசகம் சிவில் வழக்குகளைத் தான் எடுத்துக் கொண்டார். அவர் பாளையங்கோட்டையில் பெரிய வக்கீலும் அல்ல; ‘யாராவது கிளையண்ட் வரமாட்டானா’ என்று ஈயோட்டிக் கொண்டிருந்த வக்கீலுமல்ல. நடுவாந்திரமான வக்கீல். தினசரி குறைந்தபட்சம் மூன்று நான்கு கேஸ்களாவது கோர்ட் டைரியில் இருக்கும்.

புதுசாக ஏதாவது கேஸ் தாக்கல் செய்தால் எனக்கு ஐந்து ரூபாய் குமாஸ்தா ஃபீஸாக கிடைக்கும். சாட்சிகளை விசாரிக்கிற அன்று கட்சிக்காரர் இரக்கப்பட்டு இரண்டோ மூன்றோ கொடுத்தால் உண்டு. 30 ரூபாய் சம்பளம் போக குமாஸ்தா பீஸாக மாசம் பத்து ரூபாய் கூட கிடைக்காது. அப்பாவுக்கு எந்த வேலையும் இல்லை. அம்மா சாராள் தக்கர் பள்ளியில் சமையல் வேலை செய்தாள். மூன்று தங்கைகளும் கிறிஸ்தவப் பள்ளியில் இலவச பள்ளியில் தங்கி படித்தனர். நான் இரவு என் நண்பன் ரவியின் வீட்டில் படுத்துக்கொள்வேன். காலை உணவும் அவர் வீட்டில்தான். இரண்டே இரண்டு வேட்டி சட்டைகள்தான் இருந்தன.

1970இல் வல்லிக்கண்ணன், நம்பிராஜன் (விக்ரமாதித்யன்), வண்ணதாசன் சினேகம் எல்லாம் ஏதோ அகஸ்மாத்தாக கிடைத்தது. வல்லிக்கண்ணன் தான் எனக்கு வண்ணநிலவன் என்ற பெயரை வைத்தார். அவர் உதவியால் ’சாந்தி’ என்ற மாதமிருமுறை பத்திரிகையில் இரண்டு சிறுகதைகள் வெளிவந்தன.

தாமரையிலும் சிறு சிறு இடைவெளியில் சில சிறுகதைகள் வெளிவந்திருந்தன. தி.க.சி., தஞ்சை பிரகாஷ், கி.ராஜநாராயணனுடனெல்லாம் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. வல்லிக்கண்ணன் அடிக்கடி கடிதம் எழுதுவார். வண்ணதாசனிடம் இருந்து தினசரி கடிதம் வரும். வக்கீலய்யா வீட்டு முகவரியை தான் எல்லோருக்கும் கொடுத்திருந்தேன். வாங்குகிற சம்பளத்தில் கார்டு, இன்லேண்ட் என்று தபால் செலவுக்கும் சினிமா பார்க்கவுமே பாதிக்குமேல் போய்விடும்.

சினிமா, இலக்கியம் இரண்டும் என் கவலைகளை மறக்க உதவின. 1973 ஜூனில் நான் தங்கியிருந்த வீட்டு நண்பர் செல்வகுமாருக்கு (ரவியின் அண்ணன்) திருமணம் நடந்தது. அப்போதுதான் நம்பிராஜன் சென்னையில் நா. காமராஜன் ஆரம்பித்திருந்த ‘சோதனை’ என்ற பத்திரிகையில் சேர்ந்திருந்தார். ரவி பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் வேலை கிடைத்து பெங்களூர் போய் விட்டான்.

நாலு வருசமாக அதே 30 ரூபாய் சம்பளம்; இரண்டு வேளை சாப்பாடு என்பதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், சென்னையிலிருந்த தி.க.சி., நம்பிராஜன், என் பெரியப்பா மகன் மூவருக்கும், ‘நான் சென்னைக்கு வரலாமா’ என்று கேட்டு கடிதம் எழுதினேன். “தைரியமாக வாருங்கள்” என்று நம்பிராஜன் பதில் எழுதியிருந்தார். 1973 ஜூன் 16ஆம் தேதி செல்வகுமாரின் திருமணம் முடிந்ததும் என் வக்கீலிடம் சென்னைக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன். அரை மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய் கொடுத்தார்.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு மதியம் 3 மணிக்கு ஒரே ஒரு ரயில் புறப்படும்; டிக்கெட் 16 ரூபாய் 60 காசு. கையிலிருந்தது 15 ரூபாய் தான். இன்னும் ஒரு ரூபாய் 60 பைசாவுக்கு எங்கே போவது? மதுரையில் என் தாய் மாமனார், சித்தப்பா போன்ற உறவினர்கள் இருந்தார்கள். அதனால் மதுரைக்குச் சென்று அவர்களிடம் பணம் புரட்டிக்கொண்டு சென்னைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். இரவு 10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ஒரு பாசஞ்சர் ரயில் இருந்தது. மூன்று ரூபாய் சார்ஜ். அந்த ரயிலில் மறுநாள் காலை நாலரை மணிக்கு மதுரையில் போய் இறங்கினேன். சோமு சித்தப்பா வீடு மேலமாசி வீதியிலிருந்தது. பக்கத்தில்தான் மாமாவுடைய வீடு. முதலில் சித்தப்பா வீட்டுக்குப் போனேன்.

அங்கே யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் மதுரையில் தங்கும் படியாகிவிட்டது. கையிலிருந்த பதினொரு ரூபாயும் குறைந்துகொண்டே வந்தது. ஒரு வழியாக ஒரு நாள் இரவு மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரசில் சென்னைக்கு வண்டி ஏறினேன். சித்தப்பா கொடுத்த பணத்தில் டிக்கெட் போக ஒரு ரூபாய் 30 பைசா மீதம் இருந்தது. பாண்டியனில் ஒரே நெருக்கடி; கூட்டம். முன்பதிவு செய்யாததால் பொதுப்பெட்டியில்தான் ஏற முடிந்தது. உட்கார இடமில்லை. கழிவறை செல்லும் பாதையில் நிற்க இடம் கிடைத்ததே பெரும்பாடு. திண்டுக்கல், திருச்சி எல்லாம் மேலும் மேலும் ஆட்கள் ஏறிக்கொண்டே இருந்தார்கள்.

நெரிசலில் மூச்சுத் திணறியது. கையிலிருந்த துணிப் பையில் கல்யாணி (வண்ணதாசன்) கொடுத்த இரண்டு சட்டைகள் இருந்தன. அதை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருந்தது. அவ்வளவு கூட்டம், நெரிசல். சட்டைப் பையிலிருந்த ஒரு ரூபாய் 30 பைசாவை யாராவது அபேஸ் செய்துவிடக் கூடாதே என்ற கவலை.

அதிகாலையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சென்னையில் கொண்டு வந்து என்னை பிளாட்பாரத்தில் தள்ளியது. எக்மோர் ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்தேன் (பத்து பைசா தான்). நா. காமராஜன் வீட்டின் ஒரு பகுதியிலேயே நம்பிராஜன் இருந்தார். லாயிட்ஸ் ரோட்டில் நா.கா. இருந்தார். லாயிட்ஸ் ரோட்டுக்கு எந்த பஸ் போகும் என்று விசாரித்து 23-பி-யில் ஏறினேன். முகவரியை கண்டுபிடித்து மாடியில் இருந்த நா.கா. வீட்டுக்குப் படியேறினேன். ஒருவர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம், “வீடு பூட்டி இருக்கு” என்றார்.

அவர் தான் பாலகுமாரன். நான் நம்பிராஜனை தேடி வந்திருக்கிறேன் என்றதும் என்னை பக்கத்திலிருந்த அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். என்னைக் குளிக்க சொன்னார். பாலகுமாரன், அப்போது ’டஃபே’ என்ற டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்தார்.

குளித்துவிட்டு வந்ததும் பாலகுமாரனின் அம்மா அவருக்கும் எனக்கும் டிபன் பரிமாறினார்கள். பாலகுமாரனுக்கு ஆபீஸ் போக வேண்டும். என்னை சிறிது நேரம் கழித்து நா.க. வீட்டுக்குப் போய் நம்பிராஜனை பார்க்குமாறு கூறிவிட்டு, அவர் சைக்கிளில் ஆபிசுக்கு புறப்பட்டு விட்டார்.

அவர் போன பிறகு சிறிது நேரம் கழித்து, லாயிட்ஸ் ரோடு முகவரிக்குப் போனேன். நல்லவேளையாக வீடு திறந்திருந்தது. விக்கிரமாத்யன் இருந்தார். ‘அப்பாடா’ என்றிருந்தது. இப்படித்தான் 1973இல் இருந்து நான் சென்னைவாசியானேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...