No menu items!

தோனி விலகியது ஏன்?

தோனி விலகியது ஏன்?

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று சில முடிவுகளை அறிவிப்பது தோனியின் வழக்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியை உதறியது, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது என்று பல முடிவுகளை அவர் திடீரென்றுதான் அறிவித்தார். அதேபோலத்தான் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனதை இடியாய் தாக்கியுள்ளது இந்தச் செய்தி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. 2008-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்த காலம் முதல் கடந்த ஆண்டுவரை கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதே அந்த சிறப்பு.  ஆனால்  இந்த ஆண்டில் தான் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்று தோனி அறிவித்ததைத் தொடர்ந்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 “எப்போதும் ஆழமாக யோசித்த பிறகே தோனி முடிவுகளை எடுப்பார். ஆனார் அதை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியிடுவார். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றபோதே, இந்த ஆண்டில் கேப்டனாக செயல்படப் போவதில்லை என்று தோனி முடிவெடுத்துவிட்டார். எப்போதும்போல் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு இதை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்” என்கிறார்கள் தோனியின் நண்பர்கள்.

இந்திய அணியில் தான் இருக்கும்போதே கேப்டன் பதவிக்கு கோலியை நியமித்து அவரை பட்டை தீட்டினார் தோனி. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தான் இருக்கும்போதே புதிய கேப்டனை உருவாக்க தோனி திட்டமிட்டு இருந்தார். அதற்காகத்தான் அவர் தற்போது பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக தோனி ஆடாமல் இருக்கும்போது ரெய்னா கேப்டனாக செயல்படுவார். ஆனால் ரெய்னாவுக்கும் வயதானதால் அவரை கேப்டனாக்க தோனி விரும்பவில்லை. அணியில் ரெய்னா இருக்கும்போது ஜடேஜாவை கேப்டனாக்கினால் வீண் சிக்கல் எழும். அதனால்தான் இம்முறை ஏலத்தில் ரெய்னாவை தவிர்க்குமாறு தோனி வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரிலேயே தோனியால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இது சில ஆட்டங்களில் சென்னையின் பேட்டிங் வரிசையை பாதித்தது. இதனால் இந்த ஆண்டில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த தோனி திட்டமிட்டுள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது தனது பேட்டிங் பிரஷரை குறைக்கும் என்று தோனி கருதியதும் அவர் விலகியதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

தான் எதைச் செய்தாலும் தீவிரமாக யோசித்து செய்வது தோனியின் ஸ்டைல். கிரிக்கெட் மைதானத்தில் அவரது கணக்குகள் எப்போதும் தப்பியதில்லை. அதுபோல் இப்போதும் தப்பாது என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...