No menu items!

சிஎஸ்கேவின் கதை 2: தோனிக்காக நடந்த ஏலம்

சிஎஸ்கேவின் கதை 2: தோனிக்காக நடந்த ஏலம்

சென்னையும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனியை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டின.

“என்ன விலை கொடுத்தாலும் சரி… தோனியை வாங்கியே தீரவேண்டும்” என்ற திட்டத்துடன் முதலாவது ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றனர் சிஎஸ்கே நிர்வாகக் குழுவினர். 2007-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தோனி கோப்பையை வென்று கொடுத்த காலம் அது. சிஎஸ்கே நிர்வாகத்தைப் போலவே தோனியை வாங்குவதில் மற்ற அணிகளும் ஏக தீவிரம் காட்டின.

இந்த ஏலத்தில் பிசிசிஐ ஒரு முக்கிய விதியை விதித்திருந்தது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவக், யுவராஜ் சிங் ஆகியோர் ’லெஜண்ட்ஸ்’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். தாங்கள் இருக்கும் நகரத்தைச் சேர்ந்த அணிகளுக்காக இந்த வீரர்கள் ஆடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி சச்சின் மும்பை இந்தியன்ஸுக்கும் யுவராஜ் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராகுல் திராவிட் டெக்கான் சார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணிக்கும் சென்றுவிட்டார். மேலும் கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ஒப்பந்தமானார்.

அப்போது தோனி லெஜண்டாக அறிவிக்கப்படவில்லை. அதனாலேயே அவருக்கென்று எந்த அணியும் இல்லை. அதேபோல் சென்னைக்கென்று எந்த லெஜண்ட் வீரர்களும் இல்லை.

இப்படி நாடில்லாத ராஜாவாக தோனியும், ராஜா இல்லாத நாடாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருந்தன.

தோனியை சூப்பர் கிங்காக சிஎஸ்கே தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.

லெஜண்ட் வகை வீரர்களை வைத்திருக்கும் அணிகள், தங்களுக்காக வாங்கும் மற்ற வீரர்களில் அதிக விலைக்கு யாரை ஏலத்தில் எடுக்கிறார்களோ அதிலிருந்து 15 சதவீதம் அதிக தொகையை லெஜெண்ட்ஸுக்கு கொடுக்க வேண்டும் என்பது மற்றொரு விதியாக இருந்தது.

முதலாவது ஐபிஎல் ஏலத்தில் தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பல்வேறு அணிகளும் அவருக்காக குரல் கொடுத்தன. ஏலம் களை கட்டத் தொடங்கியது. ஒரு மில்லியன் டாலருக்கு மேல் தோனியின் ரேட் ஏற மற்ற அணிகள் பின்வாங்கின. ஆனால், சென்னையும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனியை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டின. இதனால் தோனியின் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது.

ஒரு கட்டத்துக்கு மேல் தோனியின் ரேட் ஏறத் தொடங்கியதும் மும்பை அணி யோசிக்கத் தொடங்கியது.

ஏலம் மேலும் அதிகரித்து தோனிக்கு 15 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டிவந்தால், அதைவிட 15 சதவீதம் அதிகமாக, அதாவது 16.5 கோடி ரூபாயை ‘லெஜண்ட்’ வீரரான சச்சினுக்கு கொடுக்க வேண்டி வரும். ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையே 60 கோடி ரூபாய்தான். இதில் சச்சினுக்கும் தோனிக்கும் மட்டுமே 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மற்ற வீரர்களை வாங்க பணம் இருக்காதே என்று யோசித்தது.

இதன் காரணமாக கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பின்வாங்க, 11.33 கோடி ரூபாய்க்கு தோனியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். படைத்தலைவனை வாங்கியாயிற்று… இனி படை வீரர்களை வாங்க வேண்டாமா…

அதற்கான ஏல யுத்தம் தொடங்கியது.

(செவ்வாயன்று மீண்டும் சிங்கங்கள் கர்ஜிக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...