உலகம் வேகமாக மாறிவருகிறது. பல மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும் சில மாற்றங்களை எல்லோராலும் உடனடியாக ஏற்றுக் கொள்ள இயலுவதில்லை.
அதில் முக்கியமான ஒன்று ஒரினச் சேர்க்கை உறவு.
ஒரினச் சேர்க்கை குறித்து சமூகத்தின் பார்வை விசாலமடையவில்லை.
ஆனாலும் பொதுவெளியில் ஓரினச்சேர்க்கை குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது.
ஓரினச் சேர்க்கை உறவுமுறை பற்றியும், இந்த உறவு முறையில் ஈடுபடும் ஜோடிகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘பதாய் தோ’ (Badhaai Do). இந்தியில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஒடிடி தளத்தில் எல்லோராலும் பார்க்க முடியும். Spoilers Alert உடன் ஒரு விமர்சனம்.
படத்தின் நாயகன் ஷர்துல், ஒரு காவல் அதிகாரி. நாயகி சுமி ஒரு ஆசிரியை. இருவரும் ஒரே பால் ஈர்ப்புடையவர்கள். அவர்கள் இருவருக்கும் நடக்கும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களையும், அதை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும்தான் இப்படத்தின் கரு. காமெடியாக சொல்லியிருக்கிறார்கள், விரசமில்லாமல்.
ஷர்துலுக்கு சுமி தன்னைப் போலவே ஓர் பால் ஈர்ப்புடையவள் என்று தெரிய வருகிறது. அதை அவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகின்றனர்.
குடும்பத்தினரின் கட்டாயத்துக்கும், சமூக கட்டமைப்பிற்கும் இணங்க திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் தனித்தனியறையில் நண்பர்கள் போல வாழத் துவங்குகின்றனர்.
அவ்விருவருக்கும் காதலர்கள் இருக்கின்றனர். இந்தக் காதல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து காதலில் விழும் தருணம் எவ்வளவு அழகானதோ அதற்கு சற்றும் குறைவானது இல்லை ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் காதலில் விழும் தருணம் என்பதை இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.
ரிம் ஜிம்மைப் பார்த்து சுமியும், குருவைப் பார்த்து ஷர்துலும் காதல் வயப்படும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் கொள்ளை அழகு.(குருவின் திரையாளுமையானது அவர் திரையில் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரைத் தவிர வேறு யார் மீதும் கண்கள் செல்லாதவாறு கட்டிப் போடுகிறது).
ஒரு வருடம் ஆனதும், குழந்தை எங்கே என்று குடும்பத்தினர் நச்சரிக்கின்றனர். அதில் இருந்து தப்ப, தாங்கள் தத்தெடுக்க விரும்புவதாகக் கூற ஷர்துலின் அம்மா உளவுப் பார்க்க இவர்களுடன் வந்து வசிக்கிறார்.
ஒரு கட்டத்தில் சுமி ஓர் பால் சேர்க்கையில் ஈர்ப்புடையவள் என்று தெரியவர,பூகம்பம் வெடிக்கிறது.
தாங்கள் யார் எனும் உண்மையை அவர்கள் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானதாக இருக்கிறது.
நாம் யார் என்ற உண்மையை உலகிற்கு சொல்ல இயலாவிட்டாலும் பரவாயில்லை,ஆனால் நம் குடும்பத்திற்கு சொல்ல இயலாவிட்டால் அது எவ்வளவு பெரிய வலியைக் கொடுக்கும் என்பதை இந்தக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்கள். ஒரு மனிதனின் அடிப்படைப் பண்பே நேசித்தல்தான். ஆனால் காலங்காலமாக அதைக் கூட நாம் இவர்களுக்கு வழங்க மறுக்கும் ஒரு கொடூர சமூகமாகத் தான் இருந்துக்கிருக்கிறோமா என்று சிந்திக்க வைக்கிறது.
உண்மை தெரிந்த பிறகு குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பதே மீதி கதை.
இவ்வளவு சென்சிடிவான கதையை முழுக்க, முழுக்க லைட் ஹார்ட்டாகவும், ஃபீல் குட் மூவியாகவும் எடுப்பது மிகவும் கடினம். அதை இப்படத்தின் கதாசிரியர்கள் சாத்தியமாக்கிருக்கிறார்கள். ஒரு ஆண் gay-ஆக இருக்கும் பட்சத்தில் அவனிடம் நளினம் இருக்கும் என்றும், ஒரு பெண் lesbian என்றால் அவள் கரடு முரடாகத்தான் இருப்பாள் எனும் பொதுக் கருத்தை இப்படத்தில் உடைத்திருக்கிறார்கள். அதற்கு படக்குழுவினரைப் பாராட்ட வேண்டும்.
இறுதியாக மிக முக்கியமான ஒன்று. 2018-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை திருமணம் இந்தியாவில் செல்லும் என்று சட்டம் வந்திருந்தாலும் கூட, அவர்களால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இன்னும் நம் சட்டத்தில் இடமில்லை என்று சுட்டிக் காட்டியிருக்கிறது இப்படம்.
மெல்ல மெல்ல இந்த சமூகம் சிறு சிறு மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு முன்னேற முயன்று வருகிறது.விரைவில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் சமூகமாக திளைக்க அனைவரும் முயற்சி செய்வோமாக!
wow