No menu items!

கதை கதையாம் காரணமாம்  – அ. வெண்ணிலா

கதை கதையாம் காரணமாம்  – அ. வெண்ணிலா

இக்கதையை கவிஞர் அ.வெண்ணிலா குரலில் கேட்க

“சார், ஒரு பொண்ணு வரலையாம் சார்.”

அய்யய்யோ, எந்த ரூம்?”

“அஞ்சாம் நெம்பர் ரூம் சார்.”

“ஏன், இவ்வளவு நேரம் பார்க்கலைங்க சார்? மணி பத்தாச்சே. முன்னாடியே சொல்லியிருந்தா என்ன யாருன்னு பார்த்து போன் பண்ணியிருக்கலாமே. இனிமே சொல்லி எப்ப வரவைக்கிறது? இன்னைக்கு ஜே.டி. விசிட், நம்ம ஏரியாதான்” என்று சொல்லியபடியே எக்ஸாம் சீஃப் வேகமாக அறை எண் ஐந்தை நோக்கி நடந்தார். அவர் வேகமாக, அதுவும் டென்ஷனாக போவதைப் பார்த்த டிபார்ட்மென்ட்டலும் அவரைப் பின் தொடர்ந்தார்.

அறை எண் மூன்றைக் கடக்கும்போதே, அறை எண் ஐந்திலிருந்து சத்தம் வருவது கேட்டது. சீஃப் இன்னும் வேகமாக நடந்தார். மாணவிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளை வாங்கிக் கொண்டு, ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், பக்கத்தில் இருக்கும் மாணவிகளிடம் திரும்பிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாணவியின் முகத்திலும், சின்ன பரபரப்பு, கொஞ்சம் ஆர்வம், லேசான சலசலப்பு.

சீஃப் வந்தவுடன் சட்டென்று சின்ன அமைதி. ஏதும் தகவல் சொல்ல வருகிறாரா என்று ஆர்வத்துடன் மாணவிகள் அவர் முகத்தைப் பார்த்தனர்.

சீஃப், அறைக் கண்காணிப்பாளரைப் பார்த்தப் பார்வையிலேயே அவரைக் குற்றம் சொல்ல வருவது தெரிந்தது. அறைக் கண்காணிப்பாளர் முந்திக் கொண்டார்.

“சார், நான் உள்ள வந்தவுடனே கேட்டேன் சார். அந்தப் பொண்ணு வந்துடுச்சு, சைக்கிள் ஸ்டேண்ட்லதான் உட்கார்ந்து படிச்சுகிட்டு இருந்துச்சுன்னு பசங்க சொன்னாங்க. அதனால் உள்ள எங்காவது பை வைக்கப் போயிருக்குமோன்னு வெயிட் பண்ணேன். இவ்வளவு நேரமாச்சுன்ன உடனேதான் நான் டிமார்ட்மென்டலை கூப்பிட்டுச் சொன்னேன்.”

“யாரும்மா பார்த்தது அந்தப் பொண்ண? என்னா வூர் அந்தப் பொண்ணு?” சீஃப் விசாரணையைத் தொடங்கினார்.

“எருமைவெட்டி சார்” – ஒரு பெண்.

“அந்தப் பொண்ணு வந்ததை யார் பார்த்தீங்க?”

எல்லா மாணவிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சார், பக்கத்து ரூம்ல இருக்க ஒரு பொண்ணு சொன்னா சார், அவ அங்கப் படிச்சுகிட்டு இருந்தான்னு” – ஒரு பெண், மென்று முழுங்கிச் சொன்னாள்.

“ஸ்கூலுக்குள்ள வந்துட்டு வெளிய போயிருக்குன்னா, என்ன பிரச்சனைன்னு தெரியலையே, இன்னும் பத்து நிமிசத்துக்குள்ள வந்தாதான் உள்ள சேர்க்க முடியும்” என்று சொல்லியபடியே பாக்கெட்டுக்குள் இருந்து செல்போனை எடுத்து அந்தப் பள்ளி தலைமையாசிரியரின் எண்ணை அழுத்தினார்.

எதிர்முனையில் பேசும்முன்னே இவர் பேசத் துவங்கிவிட்டார். “மேடம், உங்கப் பொண்ணு ஒன்னு காலையில ஸ்கூல் வந்துட்டு, இப்போ எக்ஸாம் ஹால்ல இல்ல, எங்கப் போச்சுன்னும் தெரியலை. ஜே.டி. இந்தப் பக்கம்தான் விசிட்டாம், என்ன பண்றது மேடம்? யார்னா இருந்தா, என்ன ஏதுன்னு விசாரிக்கிறீங்களா?”

“எக்ஸாம் வந்துட்டு, காணாமப் போயிட்டாளா, அய்யோ, இந்தப் பசங்கள வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியலையே சார், ஒரு பெர்சண்ட் ரிசர்ல்ட் அவுட்டா. நான் இந்த ஸ்கூல்ல உட்கார்ந்துகிட்டு என்ன சார் பண்றது… நான் எங்க ஸ்டாஃப் யார்கிட்டயாவது கேட்டுப் பார்க்கிறேன்.” எதிர்முனையில் தலைமையாசிரியரின் ரத்த அழுத்தம் எகிறியது.

“அவ பேர் என்னங்க சார்” – முக்கியமான விஷயத்தை கேட்க மறந்ததுபோல் மீண்டும் கேட்டார்.

“கீதா, சி.1.குரூப்” – சீஃப்.

“இந்தப் பசங்கள தேத்தி அனுப்பறதுக்குள்ள நம்ம பட்றபாடு யாருக்குத் தெரியுது. மேல இருக்கிறவங்க கிட்ட இதெல்லாம் சொல்ல முடியுதா? அவங்களுக்குத் தேவை ரிசல்ட். காரணமே சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. ஸ்கூலே வரமாட்டேன்றாளுங்க, வந்தாலும் இப்படி கிளம்பிப் போயிட்றாளுங்க… இவளுங்கள வச்சுக்கிட்டு என்ன ரிசல்ட் வாங்குறது. இனிமேல்லாம் வேலை செய்ய முடியாதுங்க சார். டெய்லி ஒரு டென்ஷன். எக்ஸாம் முடியறதுக்குள்ள தலையில ஒருமுடி இருக்காதுபோல. ஒகேங்க சார். நீங்க அங்க பசங்க கிட்ட விசாரிங்க, நான் என்ன பண்ண முடியும்னு பேசிட்டு லைன்ல வர்றேன்.”

போனை கட் பண்ணிய சீஃப், பக்கத்தில் நின்று கொண்டிருந்த டிபார்ட்மென்டலைப் பார்த்தார்.

“சார், வந்துட்டு வெளிய போயிருக்குன்னா, வேறு ஏதோ பிரச்சனை சார். இன்னிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான், ஃபெயிலாயிடுவோம்னு பயம்கூட கிடையாது. 30 மார்க் வாங்குனாலே பாஸ் பண்ணிடலாம். அப்போ வேற ஏதோ காரணம்தான் சார்.” டிபார்ட்மென்டல் தன்னுடைய கண்டுபிடிப்பைக் கூறினார்.

“எலக்‌ஷன்கூட நடத்திடலாம். இனி எக்ஸாம் நடத்தமுடியாது போல. ஓவர் கெடுபிடியா போச்சு. நாம ஏதோ கோல்மால் பண்ணிட்ற மாதிரி, எல்லாரையும் தூக்கி அடிச்சிட்றாங்க. அவங்கவங்க ஸ்கூல்ல அவங்கவங்க எக்ஸாம் நடத்துனா என்ன ஏதுன்னு புரியும். எதுன்னா ஒரு பிரச்சனைன்னாகூட சமாளிக்கலாம். புது ஸ்கூல்ல வந்து நாம் என்ன பண்றது. ஒருத்தர் கிடையாது ஹெல்ப்புக்கு…. போங்க சார், இந்த ஸ்கூல் ஸ்டாஃப் யாராவது வெளிய இருக்காங்களா பாருங்க. அந்தப் பொண்ணு இங்க் கிங்க் வாங்க கடையில எங்காவது நிக்குதா பாருங்க.”

தகவல் மெல்ல பரவ, பள்ளி வளாகத்திற்குள் காலை வெயிலைப் போல் பதற்றம் ஏறிக் கொண்டிருந்தது. டிபார்ட்மென்டல் கையிலிருந்த பேப்பர்களுடன் வெளியே போகப் போனார்.

“சார், நீங்க வேற, கையில என்ன இருந்தாலும் அப்படியே வெளியப் போவீங்களா, அந்த பேப்பர்ல்லாம் உள்ள வச்சுட்டுப் போங்க, அப்புறம் கொஸ்டீன் பேப்பர் அவுட் பண்ணிட்டோம்னு பேப்பர்ல வந்துட போது.”

டிபார்ட்மென்டல் கையிலிருந்த பேப்பர்களை உள்ளே வைத்துவிட்டு, மீண்டும் வெளியே போக வந்தார்.

அவர் வெளியே வரும் நேரம், பி.கே. உள்ளே வந்தார்.

“மேடம் போன் பண்ணாங்க சார், சி.1.ல்ல ஒரு பொண்ணு வரலையாமே? என்னன்னு பார்க்கச் சொன்னங்க.”

“அதான் சார், கடைக்கு எதுனா போயிருக்கான்னு பாக்க வந்தேன். காலையில் வந்திருக்கே ஸ்கூலுக்கு. வந்துட்டு எங்கப் போச்சுன்னு தெரியல.”

“எருமைவெட்டியாம் சார் அது. சனிக்கெழமை ஸ்பெஷல் கிளாஸ் வச்சாலே அது வீட்டில இருந்து கிளம்பி வந்துட்டு, கிளாஸ்க்கு வராது. எங்க சுத்துதுன்னு தெரியலையே.”

“பரீட்சை நேரத்துல எங்க சார் போகும்.”

“நீங்க வேற சார், இப்பல்லாம் பொம்பள பசங்கள நம்பவே முடியலை சார். எதுனா பையன்கூட கிளம்பிப் போயிட்டு இருக்கும்.”

“போறதுதான் போகுது, பரீட்சை முடிச்சுட்டு போவக் கூடாது. அவ்வளவு அவசரம் என்ன?”

“அவங்க அவசரம் அவங்களுக்கு, நமக்கென்ன தெரியும். பொம்பளைப் பசங்கன்னா அமைதியா படிக்கும்னு சொல்லுவாங்க. இப்பல்லாம் பையனக் கூட மடக்கி உட்கார வச்சு படிக்க வச்சுடலாம். இந்த பொம்பளைப் பசங்கள ஒன்னும் பண்ண முடியலை. நம்ம கையில் என்ன இருக்கு. எதுவும் கேட்க முடியாது, ஏன் வரலை, ஏன் படிக்கலன்னு கேட்டா அவ்வளவுதான், அடுத்த நாளே நாலு பேரு வந்துடுவாங்க. சி.இ.ஓ., ஆனா ஊன்னா, கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்னா 100% ரிசல்ட்தான் வேணும்ன்றார். போனவாரம் வந்த ஜே.டி., எங்க மேடமை எல்லா ஸ்கூல் எச்.எம். முன்னாடியும், 90% ரிசல்ட்ட்லாம் ஒரு ரிசல்ட்டா, பெண்கள் பள்ளினா 100%தான்னு வேணும்னு திட்டியிருக்கார். ஏற்கனவே அவங்க ரொம்ப டென்ஷன்ல்ல இருப்பாங்க, இப்போ, ஒரு பெர்சண்ட் போச்சா, அவ்வளவுதான், இன்னேரம் அவங்களுக்கு பிபி எகிறி இருக்கும்.” பேசிக் கொண்டே இருவரும் பள்ளிக்கூட வாசலுக்கு வந்தார்கள்.

“பாட்டி, பசங்க யாரும் வெளிய போனாங்களா?” – பி.கே.

“ஒரு பொண்ணு இங்க நின்னு இருந்துச்சே சார், கொஞ்ச முன்னாடி பார்த்தேன். குனிஞ்சு வியாபாரம் பார்த்ததுல எங்க போச்சுன்னு பார்க்கலையே” என்று நாகப்பழத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஈயை விரட்டினாள் பாட்டி.

பி.கே.வின் முகம் ஒளிர்ந்தது.

“நான் சொன்னேனா இல்லையா, பாருங்க சார், அந்தப் பொண்ணு பிளான் பண்ணித்தான் கிளம்பியிருக்கா.”

“ஏன் பாயி, நம்ம ஸ்கூல் பசங்க எதுனா இப்போ வெளிய வந்துச்சுங்களா பார்த்தீங்களா?”

டீ கிளாஸை உயர்த்தி டீ யை ஆற்றிக் கொண்டிருந்த பாய், வாத்தியார் என்ன கேட்கிறார் என்பதுபோல் பார்த்தார்.

“நம்ம ஸ்கூல் பசங்க எதுனா வெளிய வந்துச்சா பாயி? யார்கூடவாவது போச்சுங்களா?”

“ஒரு பைக்தான் ரொம்ப நேரமா ஸ்கூல் வாசல்ல நின்னு இருந்துச்சு சார், பசங்க யாரும் வெளிய வந்த மாதிரி தெரியலையே.”

“பார்த்தீங்களா சார், என்னவோ ஏடாகூடம் பண்ணிடுச்சு இந்தப் பொண்ணு.” பி.கே.பதட்டமானார்.

இருவரும் உள்ளே ஓடினார்கள். சீஃப் என்னாச்சு என்பதைப் போல் பார்த்துக் கொண்டே இவர்களை நோக்கி ஓடி வந்தார்.

“நாகப்பழம் விக்கிற பாட்டி பார்த்திருக்காங்க சார். அந்தப் பொண்ணு வாசல்லதான் வெயிட் பண்ணியிருக்கா. யாரையாவது வரச் சொல்லிப் போயிருக்கணும். ஒரு பைக் வேற ஸ்கூல் வாசல்ல ரொம்ப நேரமா இருந்திருக்கு. டீக்கடை பாயி பார்த்திருக்கார். எப்பா, நல்ல வேளை, காமர்ஸ் பரீட்சைக்கு வந்துடுச்சு, இல்லை எனக்கு ஒரு பெர்சண்ட் ரிசல்ட் போயிருக்கும்.” பி.கே. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

“போறதுன்னு முடிவு பண்ணிட்டா, இந்தப் பொண்ணு மொத நாளே நின்னுப் போயிருக்கலாம், எங்களுக்கு இவ்வளவு டென்ஷன் இல்ல” – டிபார்ட்மென்ட்டல்.

சீஃப் முகத்தில் கணக்கற்ற குழப்ப ரேகைகள் ஓடின.

“சி.இ.ஒ.க்கு இன்ஃபார்ம் பண்ணிடலாமா சார்” – டிபார்ட்மென்ட்டல்

“அதெல்லாம் சொல்ல வேணாம் சார். ஆப்சென்ட் ஆகிறதுக்கு நாம என்ன செய்ய முடியும். வெறுமனே ஆப்சென்ட்ன்னு மட்டும் போட்டு வைங்க. உள்ள வந்துட்டு போயிட்டான்னா நாம் என்ன பண்ண முடியும்” என்றார் பிகே.

“மத்த எல்லா எக்ஸாமுக்கும் வந்திருச்சே சார் அந்தப் பொண்ணு” – டிபார்ட்மென்ட்டலைப் பார்த்துச் சொன்னார் சீஃப்.

“இன்னைக்கு வரலையே சார், அப்போ பெயிலுதான், ஆப்சென்ட்டக்கூட இப்போ ஃபெயில் பெர்சன்டேஜ்லதான் காட்றாங்களே” – டிபார்ட்மென்ட்டல்.

“நம்ம உயிரை வாங்குறதுக்கே இதெல்லாம் ஸ்கூல் வருதுங்க” – சீஃப்

செல்போன் ஒலிக்கவே எடுத்துப் பேசினார் பி.கே.

“ஆமாம் சார், யாருன்னு முகம் நினைவுல இல்ல சார். கொஞ்சமா இருந்தாதானே ஞாபகம் வர்றதுக்கு. நூறு ஒக்காந்துக்குனு இருந்தா? எருமைவெட்டின்னு சொன்னாங்க. ஆளப் பார்த்தாத்தான் தெரியும். ஆனா அது ஸ்பெஷல் கிளாஸ்கூட வராது சார். முழு ஏமாத்து. இந்த ரெண்டு பரீட்சை எழுதிட்டுப் போவக் கூடாதா, கல்யாணத்துக்கு 50000 ரூபாயாவது கிடைச்சிருக்கும் .” நிறுத்தாமல் பேசினார்.

“பார்த்தீங்களா, உங்களுக்குக்கூட தெரிஞ்சிருக்கே. அதான் போல இருக்கு. இது ரொம்ப நாளா நடந்துக்குனுதான் இருந்திருக்கு. நமக்குத்தான் தெரியலை போல. எங்க, நாம் உள்ள போனமா, பாடம் நடத்தணுமான்னு வந்துட்றோம். மீறி ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தைப் பேசுனா, இந்த வாத்தியாரு பொம்பளப் பசங்களப் பார்த்தாலே வழியறாருன்றாங்க. நமக்கு எதுக்கு வம்பு. ஆட்ட மேச்சமா கோலம் போட்டமான்னு இருக்கணும். கேர்ள்ஸ் ஸ்கூல்ல இருக்க ஜென்ஸ் ஸ்டாஃபைல்லாம்கூட பாய்ஸ் ஸ்கூலுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டா பரவாயில்ல. நிம்மதியா போயிடலாம்” என்றபடியே போனை கட் செய்தார்.

“எஸ்.எஸ்.ஸூம் சொல்றார் சார். பசங்க அவர்கிட்ட சொல்லியிருக்காங்களாம். கீதா, சாயந்திரம் கிளாஸ் முடிஞ்சா கூட நேரா வீட்டுக்குப் போகாதாம். பஸ் ஸ்டாண்ட்ல நின்னு ஒரு பையன்கிட்ட பேசிட்டு அடுத்த பஸ்ஸுக்குத்தான் போகுமாம். பிளான் பண்ணித்தான் கிளம்பி இருக்கு. பரீட்சை எழுதிட்டு கிளம்பியிருக்கலாம். நாம் என்ன சொல்லப் போறோம்”-பி.கே

“வீட்ல இருந்தே கிளம்பி போயிருக்கக் கூடாதா சார் அந்தப் பொண்ணு, எதுக்கு ஸ்கூல் வந்துட்டு கிளம்பிப் போயிருக்கணும்?” – டிபார்ட்மென்ட்டல்

சீஃப் கையில் செல்போனைத் தயார் நிலையிலேயே வைத்திருந்தார். டைம் பார்த்தார். 10.20.

“இனிமேல் வந்தாக்கூட சேர்க்க முடியாதே சார். இந்தப் பொண்ணு வேற எதுனா ஏடாகூடமா பண்ணி நாளைக்கு விஷயம் வெளிய தெரிஞ்சா நாம எல்லாம் தொலைஞ்சோம். மொத்தப் பத்திரிகையிலும் பரபரப்பா செய்தி போட்டுடுவாங்களே. சி.இ.ஓ.க்கு தகவல் சொல்லிடலாம் சார்” –  சீஃப் போனை எடுத்து நெம்பரைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

அப்போது அவரின் செல்போன் ஒலித்தது. சீஃப்க்கு குப்பென்று முகம் வேர்த்தது.

எடுத்துப் பேசிவிட்டு கட் செய்தார்.

“ஜே.டி. வாழாவெட்டி ஸ்கூல் வந்துட்டாராம். எப்படியும் அடுத்து இங்க வரலாம்னு கே.எஸ். சொல்றார்.”

“என்ன சார் பண்றது, ஆப்சென்ட் போடுங்க, நீங்க ஏதோ தப்பு பண்ண மாதிரி பயந்துகிட்டு இருக்கீங்க, இதுல நம்ம தப்பு என்ன சார் இருக்கு. நாம சொல்லிக்கலாம். வாங்க ஆப்சென்ட் போட்டு வைங்க. வந்தா சொல்லிக்கலாம் .” பி.கே.வேகமாகச் சொன்னார்.

“நம்ம பக்க நியாயத்த யார் கேப்பாங்க? நான் ஜே.டி.க்காக ஒன்னும் யோசிக்கலை. பாவம், 12 வருசம் படிச்ச படிப்பு. ஒரு சர்டிஃபிகேட் வாங்கிக்குனு வெளிய போனா, எங்கேயாவது பொழைச்சுக்கலாம். பொம்பளைப் பொண்ணா இருக்கேன்னு யோசனையா இருக்கு. எங்கப் போயிருக்கும்னு தெரிஞ்சாகூட கூட்டிக்கிட்டு வந்து எழுத வச்சுடலாம். அப்புறம் அது கதைய அது பார்த்துக்கப்போது.” சீஃப் முகத்தில் உண்மையான கவலை.

“யார் சார் சொன்னது, அந்தப் பொண்ணு உள்ள வந்துட்டு போயிடுச்சுன்னு?” -சீஃப்

டிபார்ட்மென்ட்டல் லேசாக விழித்தார்.

“அஞ்சாம் நெம்பர் ரூம்ல, பசங்கதான் சொன்னாங்க சார்.

சீஃப் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வேகமாக அந்த அறையை நோக்கி நடந்தார்.

மாணவிகள் தேர்வெழுதத் தொடங்கி இருந்தனர். இந்த நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்வதா என்று யோசனையாக இருந்தது. ஆனால், வேறு வழியில்லையே?

“கீதாவை காலையில் யாரும்மா பார்த்தீங்க?” என்றார்.

மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“யார் சார் சொன்னது” என்று அறைக் கண்காணிப்பாளரைப் பார்த்துக் கேட்டார்.

“இந்தப் பசங்கதான் சார் சொன்னாங்க, காலையில சைக்கிள் ஸ்டேண்ட்ல உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்துச்சுன்னு.”

“என்னம்மா, பதிலே சொல்ல மாட்டேன்கிறீங்க, நீங்க தானே சொன்னீங்க, சொல்லுங்க, யாரு பார்த்ததுன்னு, பாவம், அந்தப் பொண்ணு, பரீட்சை எழுதாம எங்க போச்சோ, விஷயம் தெரிஞ்சது சொன்னீங்கன்னா, கூப்பிட்டுக்கிட்டு வரலாம்.”

“பக்கத்து ரூம்லதான் ஒரு பொண்ணு சொன்னா சார். அவங்க பக்கத்து ஊரு அவ.”

உடனே பக்கத்து அறையை நோக்கி வேகமாக நடந்தார். இரண்டு ஆசிரியர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

சீஃப்பை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மாணவிகள் விடாமல் எழுதத் தொடங்கினர்.

“சி.1.கீதா ஊரு யாராவது இருக்கீங்களாம்மா, காலையில அந்தப் பொண்ணு எக்ஸாம்க்கு வந்ததா?” என்றார் சீஃப்.

அறைக் கண்காணிப்பாளர் ஏதோ பிரச்சனை என்றுணர்ந்து, பதில் சொல்லுங்கள் என்பதுபோல் பிள்ளைகளைப் பார்த்தார்.

“நாங்க பார்க்கலைங்களே சார்” என்றனர் மாணவிகள்.

“ஏம்மா, நீங்க சொன்னீங்கன்னுதான் பக்கத்து ரூம்ல சொல்றாங்க, யார்னா பாத்திருந்தா சொல்லுங்கம்மா, பாவம் அந்தப் பொண்ணு, எக்ஸாமுக்கு வரலை” என்றார்.

சலசலவென்று சத்தம் எழுந்தது. மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக் கொண்டனர்.

சீஃப் யாராவது பதில் சொல்லமாட்டார்களா என்று ஆர்வமாகப் பார்த்தார்.

மாணவிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்களே தவிர எந்த பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை.

“கீதா ஊருக்குப் பக்கத்து ஊர்ல இருந்து வர்ற பொண்ணு யாரும்மா?”

ஒரு பெண் மெதுவாக எழுந்தாள்.

“சார், நான்தான் சார். ஆனா அவ ஏன் வரலைன்னு எனக்குத் தெரியாது சார். நான் இன்னைக்கு எங்க அப்பாகூட வண்டியில வந்துட்டேன் சார். பஸ்ஸூல வரலை” என்றாள்.

“ஸ்கூல் வந்துச்சா காலையில.”

“நான் பாக்கலைங்க சார்.”

“அவங்க வீட்டு போன் நெம்பர் ஏதுனா இருக்கா உன்கிட்ட.”

“இல்ல சார். அவகூட பேசுனா எங்க அம்மா திட்டுவாங்க சார் .”

கடைசியாக உட்கார்ந்திருந்த ஒரு பெண் எழுந்தாள்.

“சார், என்கிட்ட இருக்கு சார். காமர்ஸ் பரீட்சை அன்னிக்கு நான்தான் சார் கேட்டு வாங்குனேன். ஏதுனா டௌட் இருந்தா கேட்கலாம்னு.”

“இப்போ இருக்கா.”

“புக்ல எழுதி வச்சிருக்கேன் சார். வெளிய இருக்கு புக்கு.”

“ஓடு, ஓடு, எடுத்துக்கிட்டு வா, வேகமா.”

சீஃப் அந்தப் பெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேகமாக கூடவே நடந்தார்.

அந்தப் பெண் புத்தகங்கள் வைக்கும் அறைக்குச் சென்று தன்னுடைய பையைத் தேடி எடுத்தாள். அதிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி எடுத்து வேகமாகப் பக்கங்களைத் தள்ளினாள்.

சட்டென்று ஒரு பக்கத்தில் கையை வைத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

அதற்குள் சீஃப் செல்போனில் எண் 9 யை அடித்து வைத்திருந்தார்.

அவள் 8, 0 என ஆரம்பித்தாள்.

“அட என்னடா” என்று 9 யை டெலிட் செய்துவிட்டு, வேகமாக பத்து எண்களையும் அடித்து கால் பட்டனை அழுத்தினார்.

முழுமையாக அடித்து முடித்தும் யாரும் எடுக்கவில்லை.

“எல்லாம் வேலைக்குப் போகிற ஜனங்க, போனை எங்க வச்சுட்டுப் போயிருக்குங்களோ” என்று புலம்பியபடி தொடர்ந்து முயற்சித்தார்.

மூன்றாவது அழைப்பில்தான் எதிர்முனையில் குரல் கேட்டது.

“சார், நாங்க ஸ்கூல்ல இருந்து பேசுறோம், இன்னைக்குப் பாப்பாவுக்கு எக்ஸாமாச்சே, இன்னும் வரலையே.”

எதிர்முனையில் ஆண் குரல்.

“இன்னைக்கா பரீட்சை, இந்த நாயி வூட்ல உக்காந்துக்குனு இருக்கு, ஏய், கீதா, ஸ்கூல்ல இருந்து பேசுறாங்க, இன்னைக்குப் பரீட்சையாமே.”

“……”


ஓவியம்: வேல்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...