No menu items!

சித்ரா ராமகிருஷ்ணாவின் மர்ம சாமியார் யார்?

சித்ரா ராமகிருஷ்ணாவின் மர்ம சாமியார் யார்?

‘செஷல்ஸ் தீவின் கடலில் குளியல் போட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்’ என்றும்; இடையில் புகார் பிரச்சினை வந்தபோது, ‘சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவு செல்ல ஏற்பாடு செய்கிறேன்’ என்றும் இமெயிலில் சிரோன்மணி கூறியுள்ளார். மேலும், சித்ராவின் சிகை அலங்காரம் குறித்தும் இமெயிலில் வர்ணித்துள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ-வும் எம்டியுமான சித்ரா ராமகிருஷ்ணாதான் இப்போது இந்திய வர்த்தக உலகின் ஹாட் டாபிக். சித்ரா, 20 வருடங்களாக தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை ‘மர்ம சாமியார்’ ஒருவரிடம் பகிர்ந்துகொண்டதையும், அந்த சாமியாரின் உத்தரவுகள்படியே நிர்வாக முடிவுகளை எடுத்துள்ளதையும், இந்திய பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி கண்டுபிடித்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவின் வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றுள்ளன.

யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணா?

ஹர்ஷத் மேத்தா ஊழலுக்குப் பின்னர் இந்திய பங்குச் சந்தையில் சில மாற்றங்களை கொண்டுவர அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் முடிவு செய்தார். குறிப்பாக, பங்கு வர்த்தகத்தை கணினிமயமாக்க விரும்பினார். ஆனால், அப்போது இந்திய பங்குச் சந்தைகளில் தனிப்பெரும் அமைப்பாக கோலோச்சிய மும்பை பங்குச் சந்தை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் புதிய பங்குச் சந்தையை தொடங்கும் பொறுப்பை, அப்போது ஐடிபிஐ வங்கியை திறமையாகவும் வெற்றிகரமாகவும் நிர்வாகம் செய்து வந்த நட்கர்னியிடம் மன்மோகன் சிங் ஒப்படைத்தார்.

நட்கர்னி, தேசிய பங்குச் சந்தையை உருவாக்கினார். கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் போன்ற புதுமைகள் காரணமாக தேசிய பங்குச் சந்தை வேகமாக வளரத் தொடங்கியது. மெட்ராஸ் பங்குச் சந்தை உட்பட 20-க்கும் மேற்பட்டவை அப்போது இந்தியாவில் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் வளர்ச்சி காரணமாக ஒவ்வொன்றாக வாடிக்கையாளர்களை இழந்து, மூடப்பட்டது.  மும்பை பங்குச் சந்தை மட்டுமே தப்பியது. அதிலும், மும்பை பங்குச் சந்தை லேட்டாக கணினி மயமாக்கப்பட்டதால், இந்தியாவின் ‘பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ்’ மார்கெட்டில் 98 – 99 சதவிகிதம்  இப்போது தேசிய பங்குச் சந்தையிடமே உள்ளது.

தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்ட போதே நட்கர்னி மூலமாக அதற்குள் வந்தவர்தான், இந்த சித்ரா ராமகிருஷ்ணா. 1963-ல் பிறந்த சித்ரா 1985-ல் சிஏ முடித்து, இன்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (ஐடிபிஐ) வேலைக்கு சேர்ந்தார். அங்கே ஸ்டார் பெர்பாமராக இருந்ததால், சில ஆண்டுகளிலேயே நட்கர்னியின் நன்மதிப்பை பெற்றார். எனவே, தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டபோது அவருக்கு முக்கிய பொறுப்பை நட்கர்னி கொடுத்தார்.  2009-ல் அதன் இணை நிர்வாக இயக்குநராக உயர்ந்தார்.

2013இல் தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ரவி நாராயணன் விலக சித்ரா ராமகிருஷ்ணா சிஇஓ ஆனார். இவரது சம்பளம் வருடம் 9 கோடி ஆனது. அப்போது இந்திய பைனான்சியல் சர்வீஸில்  இரண்டாவது பெரிய சம்பளம் இது. போர்ப்ஸ் நிறுவனத்தின் ‘சிறந்த தலைவி’ விருதையும் அதே ஆண்டு பெற்றார், சித்ரா.

சித்ரா ராமகிருஷ்ணா பிறந்தது மும்பை என்றாலும் பூர்வீகம் சென்னைதான். தமிழ்நாட்டில் சேலையூரிலும் சென்னை அண்ணா சாலையிலும் இவருக்கு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் அதன் பல்வேறு வணிக செயல்பாடுகள் அல்லது விரிவாக்கத்திற்காக மூலதனத்தை உயர்த்துவதற்கு முதல் முறையாக பொது மக்களுக்கு தனது பங்குகளை விற்பது ஐபிஓ என்று சொல்லப்படும். பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடவேண்டும் என்பது என்எஸ்சியின் நீண்டகால திட்டம். இதற்கான பணிகளை 2016 வாக்கில் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அச்சமயத்தில்தான், சில குறிப்பிட்ட புரோக்கர்கள் மட்டுமே பலனடையும் வகையில் நடந்த ‘கோலோகேஷன்’ (Colocation) முறைகேடு குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின. அதாவது, தேசிய பங்குச் சந்தை நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வெளிவரும் முன்பே சிலருக்கு மட்டும் சென்று அதன் மூலம் அவர்கள் கோடி கோடியாக லாபமடைந்தார்கள். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட செபி, முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்தது.

இந்த சமயத்தில் சித்ரா ராமகிருஷ்ணா சிஇஓ பதவியில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக சித்ரா கூறியிருந்தாலும், முறைகேடு குறித்த விசாரணைகள் அவரையும் அவரால் என்எஸ்சிக்குள் கொண்டுவரப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரையுமே சுற்றி சுற்றி வந்தன.

யார் இந்த ஆனந்த் சுப்ரமணியம்?

தேசிய பங்குச் சந்தையின் சிஇஓ-ஆக சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பேற்றதும்,  அவரால் என்எஸ்சியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ-வின் தலைமை வியூக ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் ஆனந்த் சுப்பிரமணியம். அவ்வளவு பெரிய பதவியை பெறும் அளவுக்கு ஆனந்த் பயோடேட்டா பலமானது இல்லை என்பதால் அப்போதே அந்த நியமனம் சர்ச்சையானது.

என்எஸ்இயில் சேர்வதற்கு முன்பு, ஆனந்த் சுப்ரமணியம் ஒரு சாமானிய மனிதராகத்தான் இருந்தார். பால்மர் லாரி மற்றும் ஐசிஐசிஐ குழுமத்தின் ஒரு கூட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு, அவரது ஆண்டு ஊதியம் ரூ. 14 லட்சத்தை விட சற்று அதிகம். ஆனால், ஏப்ரல் 2013இல் என்எஸ்இ-யில் அவருக்கு ரூ. 1.38 கோடி வருடாந்திர பேக்கேஜ் வழங்கப்பட்டது. 2016க்குள் அது ரூ 4.21 கோடியாக உயர்த்தது.

‘கோலோகேஷன்’ முறைகேடு குறித்த புகார் எழுந்த நிலையில், என்எஸ்இ-யின் தணிக்கைக் குழு விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம் தவறான முறையில் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.   2016 அக்டோபரில் ஆனந்த் விலகினார்.

இந்நிலையில்தான், 2016-ல் தொடங்கிய விசாரணை முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன.

சித்ரா, ஆனந்த் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், தேசிய பங்குச் சந்தையின் தொடக்கக் காலம் முதல் அவர் பதவி விலகுவது வரையான 20 ஆண்டுகள், என்எஸ்சியின் எதிர்கால வணிகத் திட்டங்கள், நிதிக் கணிப்புகள், நிகழ்ச்சி நிரல், நிர்வாக விவரங்கள், அன்றாடச் செயல்பாடுகள், உயர்மட்ட நியமனங்கள் போன்ற ரகசியங்கள் முதல் பணியாளர்களின் அப்ரைசல் விவரம் வரை அனைத்தையும்  வெளியில் ஒருவருடன் பகிர்ந்து வந்துள்ளதை செபி கண்டுபிடித்துள்ளது.

“என்எஸ்இ-யின் நிதி மற்றும் வணிகத் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வது  கற்பனைக்கு எட்டாதது; பங்குச் சந்தையின் அடித்தளத்தையே அசைக்கக் கூடிய செயல். என்எஸ்சியை அந்த வெளி நபரே நிர்வாகம் செய்துள்ளார். அவரது கைகளில் சித்ரா வெறும் பொம்மைதான்” என்று செபி கூறியுள்ளது.

[email protected] என்ற அந்த மின்னஞ்சல் முகவரிக்கு சொந்தமானவரை இமயமலையில் இருக்கும் ஒரு இந்து சாமியார் என்கிறார் சித்ரா ராமகிருஷ்ணா. மேலும், “நிர்வாக விஷயத்திற்காக பிற நபர்கள் தங்கள் நண்பர்களிடமோ ஆலோசகர்களிடமோ ஆலோசனைகள் பெறுவதில்லையா? அப்படித்தான் இதுவும். சாமியார் ஆலோசனைகள் என் பணியை சிறப்பாக செய்ய உதவியது. வேறு எந்த ஆதாயமும் நான் அடையவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சித்ராவால் சிரோன்மணி (உயர்ந்தவர்) என்று குறிப்பிடப்படும் அந்த ஆன்மீக குருவின் இமெயில் உத்தரவுபடிதான் ஆனந்த் சுப்ரமணியனைத் தேசிய பங்குச் சந்தையின் 2-வது உயர்ந்த பதவியான குரூப் ஆபரேட்டிங் ஆபிசராக நியமித்துள்ளார்.

யார்தான் அந்த குரு?

“சிரோன்மணியோடு மின்னஞ்சல் தொடர்பு மட்டும் இருந்தது. நேரில் சந்தித்ததில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு ஆன்மீக சக்தி;  எந்த உடல் அல்லது இருப்பிட ஒருங்கிணைப்புகளும் இல்லை. பெரும்பாலும் இமயமலைத் தொடர்களில் வசித்தவர்” என்றும் செபி விசாரணையில் சித்ரா கூறியுள்ளார்.

ஆனால், கங்கைக் கரையில் அந்த சாமியாரை சித்ரா 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்திருப்பதையும், செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்துள்ளதையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தி இருக்கிறது. ‘செஷல்ஸ் தீவின் கடலில் குளியல் போட்டு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம்’ என்றும்; இடையில் புகார் பிரச்சினை வந்தபோது, ‘சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் தீவு செல்ல ஏற்பாடு செய்கிறேன்’ என்றும் இமெயிலில் சிரோன்மணி கூறியுள்ளார். மேலும், சித்ராவின் சிகை அலங்காரம் குறித்தும் இமெயிலில் வர்ணித்துள்ளார்.

இதனிடையே, தடயவியல் தணிக்கையில் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடியை பயன்படுத்தியது வேறு யாருமல்ல, ஆனந்த் சுப்ரமணியன் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆம், அந்த மர்ம சாமியார் வேறு யாருமல்ல ஆனந்த்தான் என்கிறது செபி. இவர் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தில் சித்ராவின் நம்பிக்கைக்குரிய ஊழியராகவும், இமெயிலில் முகம் தெரியாத சிரோன்மணியாகவும் ‘அந்நியன்’ பாணியில் இரண்டு வாழ்க்கை நடத்தியுள்ளாரா ஆனந்த்?

அல்லது, சாமியார் என்று புதுக்கதை சொல்லி ஆனந்த் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாரா சித்ரா?

பின்னணியில் இருக்கும் பெரிய தலைவர் யார்?

எப்படியிருந்தாலும், சித்ரா ராமகிருஷ்ணா பதவியில் இருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகம் தொடர்புடைய ஒரு ஊழல் குறித்த விசாரணை, 2016இல் தொடங்கியும் ஏன் இவ்வளவு காலமும் வெளிவரவில்லை; இந்த ஆறு வருடங்கள் சித்ரா ராமகிருஷ்ணாவை காப்பாற்றிய பெரிய தலைவர் யார் என்ற கேள்வியும் முக்கியமானது.

இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்கள், ஒரு யோகா குருவின் பெயர்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.  விசாரணை முடிவு வெளிவருமா அல்லது அமுக்கப்படுமா என்பதில் இருக்கிறது இதற்கான விடை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...