No menu items!

பாஜகவின் குமரி அரசியல் – பின்னணி என்ன?

பாஜகவின் குமரி அரசியல் – பின்னணி என்ன?

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக பாஜக வென்ற இடங்களில் பெரும்பான்மையானவை கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவை.

தமிழ்நாட்டில் பாஜகவின் கோட்டை கன்னியாகுமரி; தமிழக சட்டப்பேரவைக்கு முதன்முதலாக பாஜக சார்பாக ஒரு உறுப்பினரை அனுப்பியது இம்மாவட்டம்தான். 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜகவை சேர்ந்த சி. வேலாயுதன் திமுகவின் பாலஜனாதிபதியை வென்று தமிழக சட்டப் பேரவைக்கு தேர்வானார். தமிழக சட்டப் பேரவையில் பாஜகவின் குரல் முதலில் ஒலிப்பதற்கு காரணமான மாவட்டம் கன்னியாகுமரி.

தற்போதைய 4 பாஜக எம்.எல்.ஏ.களில் ஒருவரையும் (எம்.ஆர்.காந்தி – நாகர்கோவில் தொகுதி) இம்மாவட்டமே அனுப்பியுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் குமரி மாவட்டம் பாஜகவை கைவிடவில்லை. ஒட்டுமொத்தமாக பாஜக வென்ற இடங்களில் பெரும்பான்மையானவை கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவை.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 55 பேரூராட்சிகளில் 1 பேரூராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது, பாஜக!

குமரியில் தொடரும் பாஜகவின் வெற்றி

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 22 மாநகராட்சி உறுப்பினர்களையும், 56 நகராட்சி உறுப்பினர்களையும், 230 பேரூராட்சி உறுப்பினர்களையும் பெற்றுள்ளது, பாஜக. இதில் பெரும்பான்மை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இருந்து பெற்றதாகும். பாஜகவின் மொத்த வெற்றியான 230 பேரூராட்சி உறுப்பினர்களில் 168 இடங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல் 56 நகராட்சி உறுப்பினர்களில் 21 பேரும், 22 மாநகராட்சி உறுப்பினர்களில் 11 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றிபெற்றவர்கள்தான்.

மேலும், கன்னியாகுமரியில் இரணியல் பேரூராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 15இல் 12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற மூவரில் 2 சுயேச்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வென்றுள்ளனர்.

பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 20 இடங்களில், திமுக – பாஜக இரண்டு கட்சிகளும் தலா 7 இடங்களில் வென்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், சுயேச்சைகளில் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் மனநிலையில் உள்ளதால், நகராட்சி தலைவர் பதவியை பாஜகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமரியில் பாஜக காலூன்றியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, 1947 இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் சரி பின்பும் சரி பொதுவாக தேசிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திராவிட இயக்கங்களின் செயல்பாடு பெரிய அளவில் இந்த மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தியா சுதந்திரமடைந்த பிறகும், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்துடனேயே இணைந்திருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால், ’நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை’ என்று கருணாநிதி சொன்னதாகக் கூறப்படுவதுண்டு.

ஆனால், அக்காலத்தில் இம்மாவட்ட மக்களின் தேசியப் பார்வை காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தது. இது மார்ஷல் நேசமணி, காமராஜர் ஆகிய தலைவர்கள் மறைந்த பிறகு மாறத் தொடங்கியது. குறிப்பாக, அங்கிருந்த இந்து நாடார்களின் பார்வை இம்மாவட்டத்தில் ஏற்கெனவே காலூன்றியிருந்த இந்து இயக்கங்களை நோக்கித் திரும்பியது.

1956இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு இந்து இயக்கங்களின் செயல்பாடு தொடங்கிவிட்டது. குமரியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதல் ஷாகா 1948-ல் பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் இந்து நாடார்கள், கிறிஸ்தவ நாடார்கள், அய்யா வழியினர் என மூன்று பிரிவினராக உள்ளார்கள். இவர்களில் பொருளாதார ரீதியாக கிறிஸ்தவ நாடார்கள் சற்று வசதியானவர்கள். அடுத்த இடத்தில் அய்யா வழியினரும் மூன்றாம் இடத்தில்தான் இந்து நாடார் சமூகத்தினரும் இருந்தனர். இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வை முன்வைத்து அவர்களை இந்து அமைப்புகள் திரட்டி வந்தன.

இந்த நிலையில்தான் 1982-ம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பெரிய கலவரம் வெடித்தது. அதன் பின்னர் ஒரு மிகப் பெரிய இந்து அலை இந்து நாடார்கள் மத்தியில் ஏற்பட்டது. அது இந்து இயக்கங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. இம்மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தாணுலிங்க நாடார் காங்கிரசிலிருந்து விலகி இந்து முன்னணிக்கு வந்த பிறகு அங்கு இந்து இயக்கங்கள் மேலும் வேகமாக வளர ஆரம்பித்தன.

மண்டைக்காடு கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற 1984 சட்டப்பேரவை தேர்தலில் இந்து முன்னணி வேட்பாளர் வி. பாலசந்திரன் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றிபெற்றார். தமிழ்நாட்டில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சட்டப்பேரவைக்கு செல்வது அதுதான் முதல் முறை. இதற்குப் பிறகு கன்னியாகுமரியில் பெரும் எண்ணிக்கையில் ஷாகாக்கள் நடக்க தொடங்கின.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்த பாஜக

1996 சட்டப்பேரவை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி. வேலாயுதன் வெற்றிபெற்றார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் முதன்முதலாக பாஜக நுழைந்தது.

2001 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜக சார்பில் ஹெச். ராஜா உட்பட 4 பேர் வெற்றிபெற்றார்கள். ஆனால், அந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது. பத்மநாபபுரம் தொகுதியில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏ.வான சி. வேலாயுதனும் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

பின்னர் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் நான்கு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலை சந்தித்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில்கூட, கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் நாகர்கோவில் தொகுதியில் திமுக மாவட்ட செயலாளரும் இரண்டு முறை அமைச்சராக இருந்தவருமான சுரேஷ்ராஜனை 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார், பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி.

ஆனால், கடந்த மூன்று முறை வெற்றி பெற்றிருந்த அருமனை பேரூராட்சியை இம்முறை இழந்துள்ளது, பாஜக. இங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 13 இல் திமுக, காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் ஆகியவை வெற்றி பெற்று உள்ளன.

பாஜவுக்கு பாடம்

இத்தோல்வியில் இருந்து பாஜக மட்டுமல்ல அதிமுகவும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுண்டு; பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முற்போக்காளர்கள் அதிமுகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் கைவசம் இருந்த பாஜக வாக்குகளையும் இழந்தது அதிமுக. இதனாலேயே, கோவையில் படுதோல்வியை சந்தித்தது. அதுபோல் அதிமுக கூட்டணியிலேயே இருந்திருந்தால் கன்னியாகுமரியில் பெருவாரியான வெற்றிகளை பாஜக பெற்றிருக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...