No menu items!

என்ன செய்யப் போகிறார் தோனி?

என்ன செய்யப் போகிறார் தோனி?

“ஒரு அணியில் உள்ள வீரர்களை வைத்துத்தான் கேப்டனுக்கு மதிப்பு. நல்ல வீரர்கள் இல்லாவிட்டால் ஒரு சிறந்த அணியை கேப்டனால் உருவாக்க முடியாது” என்று ஒரு கருத்து இருக்கிறது.

அந்தக் கருத்து பொய் என்பதை தனது முதல் தொடரிலேயே நிரூபித்தவர் கேப்டன் தோனி. “கேப்டன் என்பவர் சிறந்த வீரர்களைக் கொண்ட அணியால் உருவாகுபவர் அல்ல. ஒரு சிறந்த அணியை உருவாக்குபவர்” என்பது தோனியின் பயணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கற்றுத்தந்த பாடம். 2007-ல் நட்சத்திர வீரர்கள் யாருமில்லாமல் சாதாரண அணியை வைத்து டி20 உலகக் கோப்பையை தோனி வெல்ல, அவரது புகழ் பரவியது. இப்போது அதே தோனி மீண்டும் வந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இருந்து இந்த ஆண்டுடன் ஓய்வுபெற முடிவெடுத்த தோனி, அதற்கு முன் புதிய கேப்டனை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக தனது கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு வழங்கினார். போட்டிகளின்போது ஜடேஜாவுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஆனால் அவர் என்ன செய்தாலும் ஜடேஜாவால் தோனியைப் போல் சிறந்த கேப்டனாக முடியவில்லை. பீல்டிங்கில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள் அணியை பாதித்தன. மறுபுறம் கேப்டன்ஷிப்பால் வந்த நெருக்கடியால் ஜடேஜாவின் பேட்டிங்கும், பந்துவீச்சும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய ஜடேஜாவால் கடந்த 9 போட்டிகளில் மொத்தமாக 112 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சிலும் பெரிதாக சாதிக்காத அவரால் 5 விக்கெட்களை மட்டுமே கொய்ய முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவரான அவர், இத்தொடரில் சாதாரண கேட்ச்களையே தவறவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 7 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. 5 போட்டிகளில் தோற்றுப் போனது.

இப்படியே தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்துகொண்ட ஜடேஜா, கேப்டன் பதவியை தோனி வசமே திரும்ப ஒப்படைத்தார்.

7 ஆட்டங்களில் 5-ல் தோற்ற சென்னை அணியை வைத்து தோனியால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்தது. இந்தச் சூழலில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி தலைமையேற்கிறார் என்ற ஒரு வார்த்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புத்துயிர் ஊட்டியது. ருதுராஜுடன் வழக்கமாக ஆடும் உத்தப்பாவை மாற்றி, அந்த இடத்தில் கான்வாயை களம் இறக்கினார் தோனி.

அங்குதான் தோனியின் ‘மிடாஸ் டச்’ வேலை செய்தது. ஆக்ரோஷமாக களம் இறங்கிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 182 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தது. இதனால் இப்போட்டியில் சென்னை அணி 202 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 189 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சென்னை. இதனால் இந்த ஐபிஎல்லில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் சென்னையின் கனவுக்கு உயிர் வந்துள்ளது.

சென்னையை தோனி கரைசேர்த்ததெல்லாம் சரி. இனியும் எத்தனை காலத்துக்கு அவரால் சென்னையை சுமக்க முடியும்? 40 வயதான தோனி இனியும் கிரிக்கெட்டை தொடர முடியுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

வர்ணனையாளர் ஒருவர் இதே கேள்வியைக் கேட்க, “நான் அடுத்த ஆண்டும் மஞ்சள் நிற ஜெர்ஸியில்தான் இருப்பேன். ஆனால் அது எந்த மஞ்சள் ஜெர்சி என்பதைத்தான் சொல்ல முடியாது” என்று பதிலளித்துள்ளார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஒருவித மஞ்சள் ஜெர்ஸியிலும், அதன் பயிற்சியாளர், வழிகாட்டி உள்ளிட்டவர்கள் நீலம் கலந்த மஞ்சள் ஜெர்ஸியையும் அணிந்து வருகிறார்கள். இதைத்தான் நேற்று தோனி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டும் சென்னை அணியில்தான் இருப்பேன் என்று உறுதியாக கூறியுள்ள தோனி, அது பயிற்சியாளராகவா அல்லது வீரராகவா என்பதை உறுதியாக கூறவில்லை.

அடுத்த தொடரில் பயிற்சியாளராக தோனி இருப்பதென்றால், அணிக்கான புதிய கேப்டனை உருவாக்க வேண்டும். அல்லது இந்த தொடரில் டு பிளஸ்ஸியை பெங்களூரு ஏலத்தில் எடுத்ததுபோல், கேப்டன் பதவிக்கு தகுதியான வீரரை அடுத்த ஏலத்தில் சென்னை அணி வாங்கவேண்டும். அதற்கு தனது முடிவை தோனி இப்போதே தெரிவிக்க வேண்டும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் இப்போது ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தான் சார்ந்த அணிக்கு சாதகமான முடிவுகளை எடுக்கும் தோனி, இந்த முறையும் அப்படியே செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...