தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை ஒழிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும் என்று சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியுள்ளார். இதற்கு எதிர் தரப்பினர் பதில் என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“1920இல் ஒன்றிய அரசு சிபி ராமசாமி ஐயங்கார் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த குழு இந்தியா முழுவதும் பயணம் செய்து கோவில்களை பார்த்தது. அந்த குழு தாங்கள் பார்த்ததை அறிக்கையாக கொடுத்தபோது சிபி ராமசாமி ஐயங்கார் சொன்னது என்னவென்றால், ‘இந்து சமய அறநிலையத்துறை இல்லையென்றால் கோவில்களில் அறமே இருக்காது’ என்பதுதான்.
மேலும், கோவில்கள் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது, கோவில்களில் அநாகரிகமான செயல்கள் நடக்கிறது, கொலை – கொள்ளை நடக்கிறது, குருக்களுக்கு மந்திரமே தெரியவில்லை, சமஸ்கிருதம் தெரியவில்லை, ஆகமம் தெரியவில்லை, சாமி நகை குருக்கள் ‘ஆத்துல’ இருக்கிறது. எனவே, எந்தந்த மாநிலங்களில் எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை இல்லையோ அங்கெல்லாம் தயவு செய்து அந்தத் துறையை ஆரம்பித்துவிடுங்கள்’ என்றெல்லாம் அறிக்கையில் சிபி ராமசாமி ஐயங்கார் குறிப்பிட்டிருந்தார். அதில் மிக முக்கியமான மாநிலம், உத்தரபிரதேசம். அதன் பின்னர், அவரது அறிக்கை அடிப்படையில் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இந்தத் துறை உருவாக்கப்பட்டது.
ஆக, தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. தமிழ்நாட்டில் இந்த துறையை கலைக்க வேண்டும் என்று சொல்லும் பாஜகவினரும் அண்ணாமலையும், அவர்கள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களிடம் சொல்லி ஏன் அந்த துறையை கலைக்கவில்லை. அங்கெல்லாம் செல்லாமல் தமிழ்நாட்டில் இதை வலியுறுத்துவதற்கு அண்ணாமலைக்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.
அண்ணாமலைக்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் என்ன?
பாஜகவால் தமிழ்நாட்டில் மதவெறியை தூண்டவே முடியாது. தமிழ்நாடு ஆன்மிக மண்தான்; இங்கே இருக்கும் 99 சதவிகித மக்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அந்த இறை நம்பிக்கையை அவர்கள் அரசியலாக மாற்றவில்லை. ஆன்மிகத்தையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியலோடு கலக்கக்கூடாது என்கிற சிந்தனை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது. அதனால்தான், தமிழ்நாட்டை பெரியார் மண் என்றும் சொல்கிறோம். இதனால், இந்து சமய அறநிலையைத்துறையை கலைத்துவிட்டு, கோவிலுக்குள் சென்று, கோவில்களில் அரசியல் பரப்புரை செய்து, மத அரசியலை புகுத்தி, மதவெறியை உருவாக்கிவிட வேண்டும் என்று பாஜககாரர்கள் திட்டமிடுகிறார்கள்.
ஏற்கெனவே, ஒரு கோவிலில் மோடிஜி பேசியை பரப்புரை செய்துள்ளார்கள். இப்படி கோவிலுக்குள் செய்வது ஆகம விதி மீறல்.
கோவில்களில் ஊழல் இருந்ததால் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இப்போது இந்து அறநிலையத்துறையில் ஊழல் உள்ளது; கோவில்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதனால்தான் அந்தத் துறையை கலைக்கச் சொல்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்?
வாய் வார்த்தையாகத்தானே சொல்கிறார்கள். அதையே அறிக்கையாக கொடுப்பார்களா? இங்கே, இவ்வளவு பணம் காணாமல் போயுள்ளது என்று அறிக்கையாக கொடுக்கச் சொல்லுங்கள். இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போடச் சொல்லுங்கள். அதைச் செய்யாமல் வாய் வார்த்தையாகவே அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதற்கு காரணம், மக்கள் மத்தியில் மதவெறியை தூண்டுவதுதான் நோக்கம்.