No menu items!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – இந்தியா நம்பும் 3 வீரர்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – இந்தியா நம்பும் 3 வீரர்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இன்று நாக்பூரில் தொடங்கி இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது சாதாரண டெஸ்ட் தொடராகத் தெரியலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற வேண்டுமானால் இந்த தொடரில் இந்தியா ஜெயிக்க வேண்டும்.

இந்த தொடரில் இந்தியாவை ஜெயிக்கவைக்கும் ஆற்றல் வாய்ந்த 3 முக்கிய வீரர்களைப் பற்றி பார்ப்போம்…

ரவிச்சந்திரன் அஸ்வின்

கிரிக்கெட்டில் மற்ற எந்த நாடுகளுக்கும் இல்லாத பெருமை இந்தியாவுக்கு இருக்கிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் அதிகம் தோற்காத அணி என்பதே அந்தப் பெருமை. கடந்த 2013-ம் ஆண்டுமுதல் இதுவரை உள்ளூரில் ஒரு டெஸ்ட் தொடரில்கூட தோற்காமல் இருந்திருக்கிறது இந்தியா. இதற்கு முக்கிய காரணம் சுழற்பந்து வீச்சு. குறிப்பாக அஸ்வினின் சுழற்பந்து வீச்சு.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் முன்பே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கும் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்துவீச்சு இதுவரை செய்திருக்கும் மாயாஜாலம்தான் இதற்கு காரணம். இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கை 449. இதில் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே 312 விக்கெட்களை அவர் எடுத்துள்ளார் என்பதுதான்.

இந்திய ஆடுகளங்கள் பொதுவாக 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில்தான் அஸ்வினின் ருத்ர தாண்டவம் ஆரம்பமாகும். அடுத்தடுத்து விக்கெட்களை கொய்து இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பார் அஸ்வின். அவரது இந்த ஆற்றல்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பயம்காட்டி இருக்கிறது. அதனால் அஸ்வினை எதிர்கொள்வதற்காக மட்டுமே அவரைப் போல் பந்துவீசும் ஆற்றல் வாய்ந்த மகேஷ் பிதியா என்பவரை பந்துவீச வைத்து பேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார்கள் ஆஸ்திரேலியர்கள்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் அஸ்வின் கவலைப்படுவதாக இல்லை. நீங்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் பயிற்சி செய்துகொள்ளுங்கள் புதுப்புது பந்துவீச்சு முறைகளுடன் மைதானத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று தனது பங்குக்கு அவர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பந்துவீச்சு மட்டுமின்றி தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும் கைகொடுப்பதால் இந்தத் தொடரில் இந்தியாவின் நம்பர் ஒன் நம்பிக்கை நட்சத்திரமாக அஸ்வின் இருக்கிறார்.

விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த முறை நடந்த டெஸ் தொடரில் 3 போட்டிகளில் எடுத்த மொத்த ரன்கள் 46-தான். ஆனால் அந்த ரன்களை வைத்து அவரை தப்பாக எடைபோட்டு விடக்கூடாது என்று ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் ரவி சாஸ்திரி. கடந்த சில மாதங்களில் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதே அவரது எச்சரிக்கைக்கு காரணம்.

விராட் கோலி ஆடத் தொடங்கிய பிறகு இந்திய பேட்டிங்கின் போராட்ட குணம் அதிகரித்துள்ளது. எதிரணி எத்தனை ரன்களை டார்கெட்டாக வைத்தாலும் அதை விரட்டிப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையை அவரது பேட்டிங் இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.

இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களிலேயே அதிக ரன்களைக் குவித்திருக்கும் வீரர் விராட் கோலிதான். 104 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8,119 ரன்களை அவர் குவித்திருக்கிறார். கேப்டன் பதவியால் வந்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்பட்டது. ஆனால் ரோஹித்திடம் கேப்டன் பதவியைக் கொடுத்த பிறகு அவரது பேட்டிங்கில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்த அவர், அதே வேகத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆட வருகிறார். டெஸ்ட் தொடரிலும் அவரது ஃபார்ம் மீண்டால் ஆஸ்திரேலியாவைக் காக்க யாராலும் முடியாது.

சுப்மான் கில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. கே.எல்.ராகுல் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு பதில் கில்லை ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தும் இந்திய டீம் மேனேஜ்மெண்டின் காதில் இது விழவில்லை. இந்த போட்டியில் அவர் ஆடாத நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிகளிலாவது அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கில் சதங்களைக் குவித்தது மட்டும் இதற்கு காரணம் அல்ல. ஆஸ்திரேலியாவில் நடந்த முந்தைய டெஸ்ட் தொடரில் கப்பா மைதானத்தில் மற்றவர்கள் தடுமாறியபோதும் கில் தைரியமாக பந்துகளை விளாசி 91 ரன்களைக் குவித்ததும் இதற்கு மற்றொரு காரணம். இதனாலேயே தான் பயிற்சியாளராக இருந்தால் கில் நிச்சயம் அணியில் இருப்பார் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார் ரவி சாஸ்திரி.

முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்டு கில்லுக்கு அணியில் வாய்ப்பளித்தால் கோலியும் கில்லும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக ஆஸ்திரேலியா மீது பாய்வதைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...