அதிமுகவில் மீண்டும் பரபரப்பு. இரட்டைத் தலைமைக்கு எதிராக மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன, இந்த முறை மிகத் தீவிரமாக.
ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுகவினர் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள். முன்பிருந்த நிலை வேறு, இப்போதைய நிலைமை வேறு. எனவே காலத்தின் கட்டாயத்தால் ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் நடத்தினோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காலத்தின் கட்டாயம் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டதை கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஒற்றைத் தலைமை என்பது அதிமுகவுக்கு காலத்தின் கட்டாயமா?
அதிமுக என்ற கட்சி இப்போது ஏறத்தாழ எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. அதற்கு காரணம் ஓபிஎஸ் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மை. தர்ம யுத்தம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்த மரியாதை அவர் மீண்டும் எடப்பாடியுடன் இணைந்த போது குறைந்தது.
அவர் பாஜகவுடன் காட்டும் நெருக்கம் மேலும் அவர் மேல் சந்தேகத்தை உண்டு பண்னியது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தன் ஆதரவாளர்களுக்கு அவரால் தொகுதி பிடித்துக் கொடுக்க இயலாமல் போனது மற்றொரு சறுக்கல். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு அவரால் இடங்களைப் பெற்றுத் தர இயலவில்லை.
அதிமுகவின் மீதான் ஒபிஎஸ்ஸின் பிடி குறைந்துக் கொண்டே வந்தது. இதை ஓபிஎஸ்ஸும் உணர்ந்திருந்தார். அதனால் சசிகலாவை அதிமுகவுக்குள் அனுமதித்தால் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க முடியும் என்று நம்பினார். அதனால் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூற ஆரம்பித்தார். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பினால் அவரால் சசிகலாவை முழுவதுமாக ஆதரிக்க இயலவில்லை.
அவர் நம்பியிருந்த பாஜகவும் இப்போது அவரது உதவிக்கு வரவில்லை என்றே அதிமுகவினர் கூறுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் அதிமுகவில் நடக்கும் பலப் பரீட்சையை ஒதுங்கி நின்று பார்க்கவே பாஜக விரும்புகிறது. பலப்பரீட்சை அதிகரித்தால் அது பாஜகவுக்குதான் சாதகமாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நன்றாக கவனித்தாரோ இல்லையோ கட்சியை நன்றாக கவனித்து தனக்கான விசுவாசமான ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டார். கட்சிக்குள் மட்டுமில்லாமல் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்ததன் மூலம் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் தன் பலத்தை தக்க வைத்துக் கொண்டார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தப் பகுதிகளில் அதிமுக அழுத்தமான வெற்றியைப் பெற்றது கட்சியில் அவருக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால் ஓபிஎஸ், தான் சார்ந்த பகுதிகளில் கூட வெற்றிப் பெற இயலவில்லை என்பதையும் குறிப்பாக பார்க்க வேண்டும்.
ஒற்றைத் தலைமை அதிமுகவினர் அனைவராலும் ஏற்கப்படுமா? ஒற்றைத் தலைமை என்றால் அது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஒற்றைத் தலைமை என்றால் அந்த இடத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஒருவரே வருவார் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.
ஜூன் 23ல் நடக்க உள்ள அதிமுக பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொது செயலாளர் பதவி கொண்டு வரப்படும். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார்.
அப்படியென்றால் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்வார்?
ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொள்வதை தவிர அவருக்கு வேறு வழிகள் இப்போது இல்லை. அவருக்கு கௌரவப் பதவிகள் கொடுக்கப்படும். அந்தப் பதவிக்கு அதிக அதிகாரம் இருக்காது. ஒ.பன்னீர்செல்வம் அதை பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அப்படி, ஓபிஎஸ் பொறுமையாக இருப்பாரா?
சசிகலா ஆதரவாளர் ஓபிஎஸ் தரப்பிடம் பேசி வருவதாக அதிமுக வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. சசிகலா வழிகாட்டலில் ஓபிஎஸ் கடுமையான முடிவுகளை எடுத்தால் அதிமுகவின் ஒற்றுமை பலியாகும். பாஜக பலம் பெற ஒரு வழியாகும்.
என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ் என்பதே இப்போதைய கேள்வி.
ஜூன் 23 வரை காத்திருப்போம்.