No menu items!

சோனியா, ராகுல் காந்தி மீதான வழக்கு என்ன?

சோனியா, ராகுல் காந்தி மீதான வழக்கு என்ன?

ஜூன் 1, நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கும், ஜூன் 8 ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இப்போது அவரிடம் தொடர் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன நேஷனல் ஹெரால்டு மோசடி கேஸ்? பார்க்கலாம்.

இன்று செய்தி பரபரப்பாக இருக்கும் நேஷனல் ஹெரால்டின் துவக்கம் 1936ல். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.

இந்த நிறுவனத்தில் 5000 சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். விடுதலைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிகையின் ஒரே நோக்கம், இந்தியர்களின் சுதந்திர உணர்வை தூண்டும் எழுச்சி கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமே. அதனால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வந்த உருது மொழி தினசரி குவாமி அவாஸ், ஹிந்தி மொழியில் நவ்ஜீவன் தினசரி என மூன்று செய்தித்தாள்களை வெளியிட்டு வந்தது.

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர உணர்வைத் தூண்டுவதாக இருந்ததால் அந்தக் காலக் கட்டத்தில் இந்த பத்திரிகைகள் மிகப் பிரபலம்.

ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்று, வெள்ளையர்களை வெளியேற்றிய பிறகு நேஷனல் ஹெரால்டின் தேவை குறைந்து போனது. காங்கிரஸ் கட்சி பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாளாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கடுமையான நஷ்டத்தை சந்தித்து, அவற்றை சமாளிக்க காங்கிரஸ் கட்சியிடமிருந்து 90 கோடி கடனும் பெற்றது. ஆனாலும் நிறுவனம் நிமிரவில்லை.

2010 ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உறுப்பினர்களாக இருந்தனர். யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா, ராகுலுக்கு 76 சதவீத பங்குகளும் மிச்சமுள்ள 24% பங்குகள் காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிக்கையாளர் சுமன் தூபே, மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோரும் வைத்திருந்தனர்.

இந்த யங் இந்தியன் நிறுவனம், 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏ.ஜே.எல் நிறுவனத்தை வாங்கியது. ஏ.ஜே.எல். நிறுவனத்தின் மொத்த பங்குகளும் யங் இந்தியன் நிறுவனத்தின் பெயரில் மாற்றபட்டது. இதுதான் பிரச்சினையின் முதல் காரணம்.

2012ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த விஷயத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதாவது, காங்கிரஸிடம் பெற்ற 90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் செலுத்திவிடும் என கூறி, சுமார் 2000 கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வெறும் 50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

இதற்கு ஏ.ஜே.எல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் அனுமதியும் பெறவில்லை என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடுத்தார். நேரு ஆரம்பித்த ஏ.ஜே.எல் நிறுவனத்தில் 5000 பங்குதாரர்கள் இருந்தார்கள். 2010-ல் அந்த பங்குதாரர் எண்ணிக்கை 1052-ஆக குறைந்திருந்தது.

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை 2015 முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2015 டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் முன் ஜாமீன் அளித்தது. மேலும் 2016ஆம் ஆண்டு, குற்றவியல் நீதிமன்றம் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் தூபே, மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கும் அளித்திருந்தது.

அதன் பிறகு இவ்வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா விடம் மட்டும் ஒரே ஒரு முறை 2021 ல் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, தற்போது 2022ஆம் ஆண்டு சோனியா, ராகுல் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

சம்மன் அனுப்பிய 2 நாட்களுக்குள் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, ஆனால் குறித்த தேதியில் சோனியா ஆஜர் ஆவார் என்றும் அறிவித்திருந்தது காங்கிரஸ் தரப்பு. தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை வரும் ஜூன் 23 நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 13 ஆம் தேதி ஆஜராக அனுமதி கேட்டு அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினார். அனுமதியும் கிடைத்தது. அதனடிப்படையில் 13 ஆம் தேதி ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முடிவு செய்தனர். சிறிது தூரத்தில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, ஊர்வலமாக வந்த அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

பின் ராகுல் காந்தி தனியே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்அரசியலில் பழிவாங்கும் நோக்குடன் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை மூலம் பாஜக மிரட்டல் விடுப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

இது குறித்த முடிவுகளை பொருத்திருந்து காண்போம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...