No menu items!

நிகாத் செரீன் – ஒரே குத்து பெரிய வெற்றி

நிகாத் செரீன் – ஒரே குத்து பெரிய வெற்றி

தன் முதலாவது குத்துச்சண்டை போட்டியில் நிகாத் செரீன் கலந்துகொண்டபோது அவரது வயது 12. நிகாத் செரீனுக்கு எதிராக ஆடிய பெண் விட்ட குத்தில் கண்ணைச் சுற்றி பலத்த காயம். கன்றிப்போன முகத்துடன் வீட்டுக்கு வந்த நிகாத் செரீனைப் பார்த்ததும் அவரது அம்மா பர்வீனுக்கு கோபம்.

“ஏற்கெனவே இவள் குத்துச்சண்டைக்கு போவது நம் சொந்தக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில் காயத்தால் முகமும் கெட்டுப்போனால் இவளை யார் திருமணம் செய்துகொள்வார்கள்” என்றார் கணவரிடம்.

“கல்யாணத்தைப் பற்றி நீ யோசிக்கிறாய். இந்த உலகமே அவளைப் பார்த்து வியக்கப்போகும் நாளைப் பற்றி நான் யோசிக்கிறேன்” என்று அமைதியாக பதில் அளித்தார் நிகாத்தின் தந்தை ஜமீல்.

ஜமீல் அன்று வைத்த நம்பிக்கை இன்று நிஜமாகி இருக்கிறது. துருக்கியில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வாங்கியுள்ளார் நிகாத். இதற்காக ஒட்டுமொத்த உலகமே அவரைக் கொண்டாடுகிறது.

குத்துச்சண்டை போட்டியில் சர்வதேச அளவில் நிகாத் செரீன் சாதிப்பதற்கு முழு காரணமும் அவரது அப்பா ஜமீல்தான்.

நிகாத் செரீனுக்கு குத்துச்சண்டையை அறிமுகப்படுத்தியது பற்றி கூறும் ஜமீல், “எனக்கு 3 மகள்கள். செரீனுக்கு மூத்ததாக 2 பெண் குழந்தைகள். அவர்கள் இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருந்தனர். அதனால் பிரச்சினையில்லை. ஆனால் நிகாத் செரீன் எல்லோருடனும் சண்டை பிடிப்பவளாக இருந்தாள். அவளால் அடிக்கடி பஞ்சாயத்து வரும். நான் அப்போது வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வந்தேன். என் மனைவி அடிக்கடி போனில் புலம்புவார்.

இந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருந்தபோது அவளை பக்கத்தில் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்றிருந்தேன். அங்கு பல சிறுவர்கள் குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இதைப் பார்த்த நிகாத் செரீன், ‘ஏன் ஆண் குழந்தைகள் மட்டும் குத்துச்சண்டை பயில்கிறார்கள். பெண் குழந்தை இதில் கலந்துகொள்ளாதது ஏன்’ என்று கேள்வி எழுப்பினாள்.

நான் அவளிடம், ‘முகமது அலியின் மகள் லைலா அலி ஒரு சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக இருக்கிறார். நீ விரும்பினால் உனக்கு குத்துசண்டை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்றேன். அவள் சம்மதிக்க குத்துச்சண்டை பயிற்சிக்கு ஏற்பாடு செய்தேன்” என்கிறார் ஜமீல்.

குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் சேர்ந்தாலும் நிகாத் செரீனால் அவ்வளவு சீக்கிரத்தில் பயிற்சி பெற முடியவில்லை. அந்த பயிற்சி மையத்தில் ஒரே பெண் நிகாத் செரீன் மட்டும்தான். மற்ற அனைவரும் ஆண் குழந்தைகள். ஒரு பெண்ணுடன் சண்டைபோட்டு பயிற்சி பெற நாங்கள் தயாராக இல்லை என்று ஆரம்பத்தில் பல சிறுவர்கள் ஒதுங்கினர்.

பின்னர் சில சிறுவர்கள் அதற்கு முன்வந்தாலும் பயிற்சியின்போது நிகாத் செரீனை கடுமையாக தாக்கினார்கள். ஆனால் போராட்ட குணம் கொண்ட செரீன் இதற்கெல்லாம் பதறவில்லை துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். படிப்படியாக முன்னேறினார்.

நிகாத் செரீன் அடுத்த கட்டத்துக்கு முன்னேற தூரத்தின் வடிவில் மற்றொரு தடை வந்தது. நிகாத் செரீன் அப்போது வசித்தது நிசாமாபாத்தில் அங்கிருந்து ஹைதராபாத் 160 கிலோமீட்டர் தூரம். அடுத்தகட்ட பயிற்சிக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அவரது இந்த போராட்டங்களுக்கு 14 வயதில் பலன் கிடைத்தது. தேசிய அளவிலான சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதைத்தொடர்ந்து பல போட்டிகளில் வென்றவர் இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்தார்.

48 கிலோகிராம் எடைப்பிரிவில் அவர் வேகமாக முன்னேறி வந்த காலத்தில் மற்றொரு தடை வந்தது. அந்த தடை மேரி கோம். ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒரே எடைப்பிரிவில் ஒரு வீராங்கனைதான் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டும் என்ற விதி இருந்தது.

இந்தியாவின் குத்துச்சண்டை ராணியான மேரி கோம் அதே 48 கிலோகிராம் எடைப்பிரிவில் இருந்ததால், ஒவ்வொரு முறையும் நிகாத் செரினை ஓரம்கட்டி மேரி கோம் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டார்.

இதனால் மேரி கோமுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிகாத் செரீன், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மேரி கோம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போர்க்கொடி தூக்கினார் செரீனா.

தனக்கும் மேரி கோமுக்கும் இடையே போட்டி வைத்து அதில் வெல்பவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து நடந்த போட்டியில் நிகாத் செரீன் தோற்க, மேரி கோம் ஒலிம்பிக் சென்றார்.

இப்போது மேரி கோம் தற்காலிக ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தன்னாலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் நிகாத் செரீன்.

எப்படியோ பி.டி.உஷா, மேரி கோம், சாய்னா நெவால்,
பி.வி.சிந்து வரிசையில் மற்றுமொரு விளையாட்டு நட்சத்திரம் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...