No menu items!

நியூஸ் அப்டேட்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

நியூஸ் அப்டேட்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. இதில், கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். அதேநேரத்தில்  “தீ விபத்தால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி. ஒதுக்கீடு ரத்து

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆண்டுக்கு 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் மொத்தம் 10 மாணவர்களை சேர்த்துவிடும் அதிகாரம் இருந்தது.

2021-22 கல்வியாண்டில் நாடு முழுவதும் 7,301 மாணவர்கள் இந்த எம்.பி.க்கள் இட ஒதுக்கீடு முறையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், எம்.பி.க்கள் ஒதுக்கீடு சீட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கல்வி அமைச்சகத்தின் ஊழியர்களில் 100 பேரின் குழந்தைகளுக்கு சீட் என்ற ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் குழந்தைகள், எம்.பி.க்களின் பேரப் பிள்ளைகள், கேந்திரிய வித்யாலயா ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரப் பிள்ளைகள், பள்ளி நிர்வாகக் குழு சேர்மனின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் வழங்கப்படும் சீட் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் சில புதிய ஒதுக்கீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய போலீஸ் படையான CRPF, BSF, ITBP, SSB, CISF, NDRF மற்றும் அசாம் ரைஃபில்ஸ் படையில் பணியில் உள்ள குரூப் பி, சி ஊழியர்களின் குழந்தைகளுக்காக 50 சீட்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன. PM CARES திட்டத்தின் கீழ் சலுகைகள் பெறத் தகுதியான குழந்தைகளுக்கு கே.வி. பள்ளிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பு மற்றும் நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 16,279 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


திமுக அரசு ஆன்மிக அரசுதான்: முதல்வர் சந்திப்புக்கு பின் தருமபுர ஆதினம் பேட்டி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உட்பட 11 ஆதினங்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து ஆதீன கர்த்தர்கள் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரையும் தலைமை செயலகத்தில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதீனம், “ஆதீன கர்த்தர்கள், சங்கராச்சாரியர், ஜீயர்களை உள்ளடக்கிய தெய்வீகப் பேரவை மீண்டும் நடத்த வேண்டும்; ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களின் படி அரசு செயல்பட வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளோம்” என்று  தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆன்மிக அரசு எனவும் தருமபுரம் ஆதினம் கூறினார்.


உக்ரைனுடனான பேச்சுவார்த்தை பலனை தரும் என புதின் நம்பிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இருந்து சுமார் 52 லட்சம் பேர் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் இறங்கி உள்ளார். அவர் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார். ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசுவதோடு, கீவ் சென்று உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச்சு நடத்த உள்ளார். ஐ.நா. சபையின் இந்த நேரடி நடவடிக்கை, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என்று தான் நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...