பாலா என்றால் சர்ச்சைகளின் மறுப்பெயர் என்றாகி விட்டது.
பாலா சாதாரணமாக பேசினாலும் கூட அதில் ஒரு சூடு இருக்கும். அவர் எடுக்கும் படத்தில் நடிப்பவர்களுக்கோ அல்லது படம் பார்க்கும் நமக்கோ ஏதாவது வகையில் ஒரு வலி இருக்கும். இந்த இரண்டும் இல்லையென்றால் குறைந்தபட்ச சர்ச்சை ஒன்றாவது இருக்கும்.
இந்த மூன்றாவது வகையறாவில் ‘வணங்கான்’ சிக்கியிருக்கிறது.
ஆரம்பம் முதலே பாலாவுக்கும் சூர்யாவுக்கு இடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டிக்கொண்டது என்ற பேச்சு கிளம்பியது.
’நந்தா’வில் பார்த்த சூர்யா வேறு. இன்று கமர்ஷியல் ஹீரோவாக, பெரும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹீரோவான சூர்யா வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கொஞ்சம் கூட உணராமல், ஷூட்டிங் ஸ்பாட்டில், ‘சூர்யா இங்க வா. அப்படி ஓடுடா’ என சூர்யாவை பாலா அலைக்கழித்த விதமே இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கிவிட்டது என்கிறார்கள் அப்படக்குழுவினர்.
இதனால் ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா கழன்று கொண்டார். பாலா, சூர்யா இருவர் தரப்பிலிருந்தும் நாசூக்கான வார்த்தைகளுடன் இந்த பஞ்சாயத்தை முடித்து கொண்டார்கள்.
அருண் விஜய் சூர்யாவுக்கு பதில் கமிட்டாக, கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே அதே போல் வணங்கான் பட ஷூட்டிங்கில் ஒரு பெரிய பஞ்சாயத்து முடியக்கூட இல்லை அதற்குள்ளாகவே மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இப்பட ஷூட்டிங்கில் கேரளா எல்லைக்கு அருகில் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் ஷூட்டிங் செம ஜோராகதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் சம்பளம் மட்டும் அன்றன்றைக்கு செட்டில் செய்யப்படவில்லையாம்.
இதனால் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜிதின் என்பவரிடம் துணை நடிகை லிண்டா என்பவர் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைகள் கோபத்தில் தடம் புரண்டிருக்கின்றன.
கோபத்தின் உச்சத்தில் லிண்டாவை ஜிதின் தாக்கியிருக்கிறார். இதில் லிண்டாவின் முகத்தில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் பாலாவின் காதுகளுக்கு எட்டியதா இல்லையா என்பது ஒரு முடிவுக்கு வருவதற்குள், லிண்டா காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகாரை கொடுத்துவிட்டார்.