No menu items!

சித்திரை திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

சித்திரை திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

சித்திரை திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில் “தமிழர்கள் வாழ்வில் வெற்றிகளை நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான “சுபகிருது” தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு

அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந்தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14-ந்தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷனில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை

ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டசபையில் பேசிய அமைச்சர் நாசர், “இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.87 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கச்சத்தீவை மீட்பதே முதன்மையான குறிக்கோள் : தமிழக அரசு உறுதி
தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பேட்டில், “தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். எனவே, கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கிடைப்பது மற்றும் பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டு எடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...