பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி எரிய, அதைச் சமாளிப்பதற் பாட்டரியில் இயங்கும் இ-பைக்கை வாங்கத் தொடங்கினார்கள் மக்கள், ஆனால் இப்போது அந்த இ-பைக்குகளே ஆங்காங்கே பற்றி எரிகின்றன. இ-பைக்குகளில் என்ன பிரச்சினை? தீர்வு என்ன?
எரியும் இ-பைக்குகளால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது, வாங்குவதற்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம், தங்களின் 3,000 மின்சார வாகனங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது, அதேபோல் ப்யூர் ஈ.வி நிறுவனம் 2000 வாகனங்களை திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இது போன்ற சம்பவங்கள் நடைபெற நிறுவனங்களின் அலட்சியம் காரணமாக இருப்பின் தண்டனைகள் கடுமையாக இருக்கும்” என்று எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஆந்திராவில் மீண்டும் ஒரு ஓலா மின்சார வாகனம் திடீரென பேட்டரி கோளாறு காரணமாக தீப்பிடித்து கருகி சாம்பலானது. இதனால் ஓலா நிறுவனமும், எரிந்த வாகனத்தின் பேட்சில் உருவான 1,441 மின்சார வாகனங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த வாகனங்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
இந்த வகை பேட்டரிகள் ஆபத்தானவை என்றாலும் அவற்றை முறையாக பயன்படுத்தினால் பிரச்சினை கிடையாது என்றே தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள். தரமற்ற பேட்டரிகளை வாகனங்களில் பொருத்துவதும் விபத்துகளுக்கு காரணமாகிறது.
எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகள் வெடிப்பதை தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் ஐந்து விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.
- பேட்டரியை குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.
- இரவு முழுவதும் சார்ஜ் போடுவது சரியான நடைமுறை அல்ல
- வாகனங்கள் வாங்கும்போது அந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட பேட்டரியின் தரம் பற்றி நிச்சயம் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்களை திரட்டி நிறை குறைகளை அறிந்த பிறகே வாகனம் வாங்க வேண்டும்.
- வாகனம் வாங்கும்போது கொடுக்கப்படும் அறிவுரைகளின்படியே வாகனத்தை பயன்படுத்த வேண்டும். போன் சார்ஜரை பயன்படுத்துவது போல் வாகன சார்ஜரை பயன்படுத்த கூடாது.
- நீண்ட தூர பயணங்களின்போது பேட்டரியின் வெப்பம் தணிய சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
இந்த அம்சங்களை தெளிவாக பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்.