தமிழ்நாட்டின் முதல்வராய் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த போதுகூட எடப்பாடி பழனிசாமி தன்னை இத்தனை அதிகாரமிக்கவராய் உணர்ந்திருக்க மாட்டார். ஆனால், இப்போது அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முழுமையான அதிகாரத்துடன் சுதந்திரமாக வலம் வருகிறார். இந்த அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் என்றும் அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் உடைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்ளே ஜெயலலிதாவுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களை காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வீடியோ காட்டுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துரோகி பட்டம் கட்டியாகிவிட்டது. திமுகவின் நண்பர் என்று சொல்லியாகிவிட்டது. இப்போது புதிதாய் திருட்டுப் பட்டம் கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
எடப்பாடி பழனிசாமியின் அரசியலில் இதெல்லாம் மிக சகஜம். வெல்ல மண்டியில் வாழ்க்கையைத் துவங்கி, செங்கோட்டையனால் உயர்வு பெற்று, பிறகு செங்கோட்டையனையே ஓரம் தள்ளி தவழ்ந்து சசிகலாவால் முதல்வர் பொறுப்பேற்று, பின்னர் அவரையே யார் அவர் என்று கேள்வி கேட்டு….. இன்று அதிமுகவின் ஒற்றை முகமாக உருவெடுத்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு பிறகான அரசியல் சதுரங்கத்தில் சாதகமான சூழல் அமைந்ததால் சாதூர்யமாக காய்களை நகர்த்தி எதிரிகளை சாய்த்திருக்கிறார்.
ஆஹா எடப்பாடி… எத்தனை அரசியல் ஞானம் எதிரிகளையெல்லாம் ஓரம் தள்ளி தனி ஆளாக நின்று களமாடுகிறார் என்ற புகழுரைகளை கேட்க முடிகிறது. ஆனால், இன்று பிடித்த இடத்தை எடப்பாடியால் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? அவருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் என்ன? இன்று புகழப்படும் அவரது ’அரசியல் திறமை’ தொடர்ந்து செல்லுபடியாகுமா?
பார்ப்போம்.
நேற்று வரை ஓ.பன்னீர்செல்வத்துடன் நின்று ஆவேச உரைகள் ஆற்றிய கே.பி. முனுசாமி இன்று எடப்பாடி பழனிசாமி பக்கம். அண்ணன் ஓபிஎஸ் என்று பேசிய அதிமுக பிரமுகர்கள் இன்று எடப்பாடி பக்கம்.
ஒரு காட்சி. ஜூலை 11-ல் மறு பொதுக்கூட்டம் நடக்கிறது. கே.பி. முனுசாமி மேடையில் ஏதோ பேசுகிறார். அவரிடம் கையை நீட்டி கடுமையாக வாக்குவாதம் செய்கிறார் சி.வி. சண்முகம். இருவருக்கும் நடுவே எடப்பாடி பழனிசாமி என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறார்.
பொதுமேடையில் எல்லோர் முன்னும் இது போன்ற மோதல் நடந்தால், திரை மறைவில் ஆலோசனைக் கூட்டங்களில் எத்தனை மோதல் வெடித்திருக்கும்? வெடிக்கும்? இதுதான் எடப்பாடியின் முதல் பெரிய சவாலாக இருக்கும். தனக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பவர்களை சமாளிப்பது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி. உதயக்குமாருக்கு வழங்கியதிலேயே மன வருத்தங்கள் இருக்கும். அவற்றை சமாளிக்க வேண்டும். இன்னும் பல பதவிகள். பல கோரிக்கைகள். அனைத்தையும் அடுத்தவர் காயப்படாமல் நிறைவேற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியின் அடுத்த சவால் டெல்லி பாஜக. நேற்று ஜிஎஸ்டி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததை திமுக அரசு எதிர்க்கவில்லை என்று திமுகவை குற்றஞ்சாட்டியதுடன், ‘ஏழை மக்களை பாதிக்கும் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த இரண்டு வரிகளை வைத்து இதுவரை மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசாத எடப்பாடி இப்போது மத்திய அரசுக்கு எதிராக திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
மிக மிக லேசாக யாருக்கும் வலிக்காமல் கோரிக்கை வைத்ததே மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி என்று பார்க்கப்படுகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி எந்த அளவு மத்திய பாஜகவுடன் இணங்கி போயிருப்பார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தனை இணக்கத்துக்கு காரணம் என்ன? கொள்கை பிடிப்பா? மோடி மேல் உள்ள அன்பா? தொடரும் வழக்குகளா?
மூன்றாவது காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
டெல்லி மேல் இத்தனை பயம் உள்ள எடப்பாடியால் டெல்லி உத்தரவுகளை புறம் தள்ளாமல் கட்சி நடத்த இயலுமா? ஓபிஎஸ்ஸை அழைத்து எடப்பாடி அமைச்சரவையில் இணைந்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன பிரதமரால் ஒபிஎஸ்ஸுடன் இணைந்து போங்கள் என்று எடப்பாடியிடம் சொல்ல முடியாதா? அப்படி சொன்னால் அதை கேட்காமல் எடப்பாடி பழனிசாமியால் இருக்க முடியுமா?
பாஜக இப்போது அமைதியாக இருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இப்போது தேர்தல் எதுவும் பக்கத்தில் இல்லை. இரண்டாவது பாஜக எந்த அளவு தமிழ்நாட்டில் தனியாக வளர்கிறது என்பதை பார்ப்பது. \
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது இதே நிலையில் பாஜக இருக்கும் என்று கூற முடியாது. அடுத்த ஒன்றரை வருடங்கள் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து, தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்ற நிபந்தனையுடன். அப்படி கூட்டணி வைக்கும்போது அதில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரும் இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே எடப்பாடிக்கு பாஜக ஒரு சவாலாகவே இருக்கும், எப்போதும்.
எடப்பாடியின் மூன்றாவது சவால் தொண்டர்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக என்று அதன் தலைவர்கள் பெருமை பேசுவார்கள். அந்த ஒன்றரைக் கோடியில் எத்தனை பேர் எடப்பாடியிடம், எத்தனை பேர் ஓபிஎஸ்ஸிடம் என்ற கேள்விக்குப் பதில் யாரிடமும் இல்லை.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வென்ற இடங்கள் 66. அவற்றில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களிலும் சுமார் 45 தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது. இந்தப் பகுதிகள் முழுவதும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிறைந்த பகுதிகள்.
ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த தென் மண்டலத்திலும் மத்திய மண்டலத்திலும் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை. இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது பன்னீர்செல்வத்துக்கு செல்வாக்கு இல்லை என்றும் பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமிக்கு தான் சார்ந்த மாவட்டங்கள்தாண்டி செல்வாக்கு இல்லை என்பதையும் புரிந்துக் கொள்ளலாம். இப்படி இருக்கும்போது ஓபிஎஸ்ஸையும் நீக்கிய நிலையில் அம்மாவட்டங்களில் பெருவாரியாக இருக்கும் சமூகத்தினரின் ஆதரவு எடப்பாடியின் தலைமைக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. அந்த சந்தேகத்தினாலும் பயத்தினாலும்தான் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க் கட்சித் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது போன்ற பிம்ப அரசியல் தொண்டர்களையும் அந்த சமூகத்தினரையும் கவர உதவுவது சந்தேகம்தான்.
கட்சியின் முக்கியஸ்தர்களை வளைத்துப் போட்டதுபோல் தொண்டர்களை வளைத்துப் போடுவது மிகப் பெரிய சவாலாக எடப்பாடிக்கு இருக்கும். ஆனால், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வலம் விரும்பும் அவருக்கு இந்த சவாலை வெல்வது அவசியம். அதிமுகவின் பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுகவின் அமைப்பு விதி அது. ஆனால், பொதுச் செயலாளர் பதவிக்கு தான் மட்டுமே போட்டியிடும் சூழலை உருவாக்கி தேர்தலின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படலாம். அதுவும் எடப்பாடியின் சாமர்த்திய அரசியலுக்கு சான்றாக கூறப்படும்.
ஆனால், தொண்டர்கள் ஆதரவு பலம் தெரியாமல் அரசியல் செய்துக் கொண்டிருப்பது அதிக காலத்துக்கு உதவாது. அதற்கு சின்னம்மா என்று கட்சியின் மேல் மட்டத்தினர் கொண்டாடிய சசிகலாவே உதாரணம். மேல் மட்டத்தினர் கொண்டாடிய சசிகலாவுக்கு கீழ் மட்ட தொண்டர்களின் ஆதரவு இல்லை என்பது அவரது இன்றைய பயணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.
இப்படி சவால்கள் சார்ந்த உலகில்தான் தன்னுடைய இன்றைய வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த சவால்கள் அனைத்துமே வரும் காலத்தில் அவரை நெருக்கும். அதை எப்படி வெல்வார் எடப்பாடி பழனிசாமி? அவரது அரசியல் சாதூர்யங்கள் அப்போது கை கொடுக்குமா?
காத்திருப்போம். பார்த்திருப்போம்.