No menu items!

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இப்பதவிக்கு வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகை:

பழங்குடி இனத்தில், மின்சாரம்கூட இல்லாத ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்முவின் விலாசம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாளிகையா இது (இத்தாலியில் இள்ள குயிரினல் பேலஸ் முதல் இடத்தில் இருக்கிறது). மாளிகை அமைந்துள்ள இடத்தின் மொத்த பரப்பளவு 330 ஏக்கர். மாளிகையின் அளவு 2 லட்சம் சதுர அடி. அறைகளின் எண்ணிக்கை 340. இன்றைய ரியல் எஸ்டேட் மதிப்பீடுகளின்படி இந்த மாளிகையின் இப்போதைய மதிப்பு 2.52 லட்சம் கோடி ரூபாய் என்று டெல்லி வீட்டு புரோக்கர்கள் கூறுகிறார்கள். 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட முகாலய தோட்டம், பிரம்மாண்டமான கோல்ஃப் மைதானம், மருத்துவமனை, நூலகம் என உலகத் தர வசதிகள் இங்கே இருக்கின்றன.

கோடை மாளிகைகள்:

ஆனால் இது மட்டுமல்ல, குடியரசுத் தலைவரின் வாசஸ்தலங்கள். கோடைகாலங்களில் டெல்லி வெயிலிருந்து தப்பிப்பதற்காக குடியரசுத் தலைவர் வசிக்க சிம்லா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் 2 பிரம்மாண்டமான மாளிகைகள் இருக்கின்றன. இதில் சிம்லாவில் உள்ள மாளிகை 10,628 சதுரடி கொண்டதாக உள்ளது. , ஹைதராபாத்தில் உள்ள மாளிகை 90 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஓய்வெடுக்க அந்த மாளிகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சம்பளம்:

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்களிலேயே அதிக சம்பளம் வாங்குவது குடியரசுத் தலைவர்தான். 2017-ம் ஆண்டுவரை இந்திய ஜனாதிபதியின் சம்பளம் 1.5 லட்சம் ரூபாயாகத்தான் இருந்தது. இதரப்படிகள் தனி. ஆனால் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த சம்பளத் தொகை உயர்த்தப்பட்டது. குடியரசுத் தலைவரின் இப்போதைய சம்பளம், மாதம் 5 லட்சம் ரூபாய்.

மாதாந்திர சம்பளம் மட்டுமின்றி ஆயுள் முழுவதற்குமான இலவச மருத்துவ சிகிச்சை, உலகின் எந்தப் பகுதிக்கும் இலவச விமானப் பயணங்கள்.. என குடியரசுத் தலைவருக்கு கூடுதல் வசதிகளும் உண்டு.

பணியாளர்கள்:

ஜனாதிபதி மாளிகையில் அவர் சொன்னதை கேட்டு பணியாற்றுவதற்காக மட்டும் 541 பணியாளர்கள் உள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின்கீழ் சமீபத்தில் ஒருவர் எழுப்பிய கேள்வியின் மூலம் இது தெரியவந்துள்ளது. 28 சமையல்காரர்கள், 37 டிரைவர்கள், 184 தோட்டக்காரர்கள் என பெரும் கூட்டமே குடியரசுத் தலைவருக்கு பணியாற்ற காத்திருக்கிறது. இந்தப் பணியாளர்களின் மொத்த மாத ஊதியம் 1.35 கோடி ரூபாய்.

எல்லையில்லா அதிகாரம்:

ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையிட நாட்டில் உள்ள எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை. இதேபோல் ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு கிரிமினல் நடவடிக்கையையும் யாரும் எடுக்க முடியாது. ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை, அவரை எந்த சூழ்நிலையிலும் கைது செய்ய முடியாது.

கார்:

குடியரசுத் தலைவரின் பயன்பாட்டுக்காக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்ட் ( Mercedes Maybach S600 Pullman Guard) கார் பயன்படுத்தப்படுகிறது. குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காரில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. இதன் விலை 12 கோடியில் இருந்து 15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு:

குடியரசுத் தலைவரின் பாதுகாப்புக்காக 4 அதிகாரிகள் உட்பட 222 ராணுவ வீரர்களைக் கொண்ட படை உள்ளது. ’தி பிரசிடெண்ட்ஸ் பாடிகார்ட்’ என்று இந்தப் படை அழைக்கப்படுகிறது. அதிக ஆற்றல் வாய்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு இந்த படை உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வுகால பலன்கள்:

பதவியில் இருந்து ஓய்வுபெற்றாலும், குடியரசுத் தலைவருக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. மாதந்தோறும் 1.5 லட்ச ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். 8 அறைகளைக் கொண்ட அரசு பங்களாவில் அவர் வாழலாம். 2 லேண்ட்லைன் மற்றும் ஒரு மொபைல் இணைப்பு வழங்கப்படும். 2 உதவியாளர்களை அவர் வைத்துக்கொள்ளலாம். ரயில் மற்றும் விமானங்களில் அவரும் அவருக்கு உதவியாக ஒரு நபரும் இலவசமாக பயணிக்கலாம்.

இத்தனை வசதிகள் இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடைக்கின்றன. இந்தியாவின் முதல் குடிமகன் என்றால் சும்மாவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...