No menu items!

நியூஸ் அப்டேட்: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர்

நியூஸ் அப்டேட்: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர், குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகிவிட்டாலும், ஒரு வாரம் ஓய்வு எடுக்க முதலமைச்சருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் ஆவடி நாசர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று குடியரசு தலைவர் தேர்தல்: நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை  தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் இந்த தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மக்களவை எம்.பி.க்களும் மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறு பிரேத பரிசோதனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்தார். ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்று அந்த பள்ளி முன்பு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இந்நிலையில், மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது, மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், “நீதிமன்றம் நியமிக்கும் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் மறு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு எடுக்க வேண்டும். மாணவியின் தந்தையும் அவரது வழக்கறிஞரும் உடன் இருக்கலாம்” என்று கூறினார்.

மேலும், “வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது” என்றும் தெரிவித்தார்.

இல. கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று டெல்லி வந்த ஜெகதீப் தன்கர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசியத் தலைவர் நட்டா போன்றோரை தன்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன வளர்ச்சி மற்றும் சேவை மையங்கள் மசோதா, சரக்குகளுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா உட்பட 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. இதுதவிர சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்துக்கு எஸ்.சி., எஸ்.டி., பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசியல் சாசன திருத்தத்துக்கு இரண்டு தனி மசோதாக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் அக்னிபாதை திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...