No menu items!

ஒரு நாயகன் உருவாகிறான்!

ஒரு நாயகன் உருவாகிறான்!

“என் வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முக்கிய மேட்ச் வின்னராக ரிஷப் பந்த் உருவெடுப்பார். அதற்குறிய அனைத்து தகுதிகளையும் அவரிடம் நான் பார்க்கிறேன்.ஆனால் தனது ஆற்றலை வெளிப்படுத்த அவருக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது”

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை. அவர் குறிப்பிட்ட இளம் ஆட்டக்காரர் ரிஷப் பந்த்.

இத்தனைக்கும் அந்த போட்டியில் ரிஷப் பந்த் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 56 பந்துகளில் 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதிலும் தவறான நேரத்தில் அவசரப்பட்டு ஷாட் அடித்து கேட்ச் கொடுத்திருந்தார். அதனால் அவரை அன்று எல்லோருமே திட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த சூழலில்தான் ரிஷப் பந்த்தைப் பற்றி இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார் சவுரவ் கங்குலி. அன்றைக்கு பந்த்தைப் பற்றி அவர் அப்படி சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் இன்று கங்குலி கணித்ததைப் போலவே இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து நிற்கிறார் ரிஷப் பந்த்.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். வெற்றிபெற 260 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணி 38 ரன்களுக்கெல்லாம் ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய அனுபவ நாயகர்களின் விக்கெட்களை இழந்திருந்தது. ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் சேனலை மாற்றிய நேரத்தில் பிட்ச்சில் நங்கூரம் பாய்ச்சி நின்றார் ரிஷப் பந்த்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் துணையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை சரிவில் இருந்து மீட்ட அவர், பின்னர் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டார். 113 பந்துகளில் அவர் அடித்த 125 ரன்களின் உதவியால் இந்தியா ஆட்டத்தையும் தொடரையும் வென்றது.

இதனால் ஒரு சாதாரண வீரர் என்ற இமேஜைக் கடந்து சவுரவ் கங்குலி அன்று சொன்னபடி ஒரு மேட்ச் வின்னராக விஸ்வரூபம் எடுத்து நின்றார் ரிஷப் பந்த்.

ஒருநாள் போட்டியில் வேண்டுமென்றால் இவரது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இதுவாக இருக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கெனவே இதுபோன்ற இன்னிங்ஸ்களை நிறைய ஆடியுள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்ட்டில் தனி ஆளாக இந்தியாவை அவர் வெற்றிபெற வைத்தது, அவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அத்துடன் sena (south Africa, England, newzealand, Australia) நாடுகளில் அதிக சதங்களைக் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்த சாதனைகளை அடைய அவர் பட்டுள்ள கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஒரு காலத்தில் இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. உத்திரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த ரிஷப் பந்த், சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்றிருக்கிறார். ஷிகர் தவனின் பயிற்சியாளர் தாரக் சின்ஹாதான் ரிஷப் பந்துக்கும் பயிற்சியாளராக இருந்தார். அக்காலகட்டத்தில் டெல்லி அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி இருந்ததால், ராஜஸ்தானுக்கு குடிபெயரும்படி ரிஷப் பந்த்துக்கு ஆலோசனை கூறியுள்ளார் தாரக் சின்ஹா.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற ரிஷப் பந்த், அம்மாநிலத்தின் 15 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அதன்பிறகு ரிஷப் பந்த் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆட எதிர்ப்பு எழுந்தது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பந்த், பெரிய போராட்டங்களுக்கு பிறகு அந்த அணியில் இடம் பிடித்தார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், 2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். இதில் ஒரு போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்களையும், மற்றொரு போட்டியில் 96 பந்துகளில் 111 ரன்களையும் குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது நகலாக தற்போது கிரிக்கெட்டில் தடம்பதித்து வருகிறார் ரிஷப் பந்த்.

அதேநேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் தோனிக்கும் பந்த்துக்கும் வித்தியாசம் உள்ளது. தோனி ஆடவந்த காலத்தில் தினேஷ் கார்த்திக்கைத் தவிர வேறு எந்த கீப்பர்களும் அவருக்கு இணையாக இல்லை. ஆனால் இப்போது சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், விருத்திமான் சாஹா பந்த்துக்கு போட்டியாக பல விக்கெட் கீப்பர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாததால், இந்த இங்கிலாந்து தொடரில்கூட அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை ஆடவைக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் மிகுந்த போராட்டத்துக்கு பிறகு, பயிற்சியாளர் திராவிட்டின் ஆதரவால் அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.

இந்தச் சூழலில் கடந்த மாதம் நடந்த டெச்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமும் விளாசிய பந்த், எதிர்ப்பாளர்களின் வாயை மூடினார். நேற்றைய இன்னிங்ஸின் மூலம் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் தான்தான் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இதே பாணியை அவர் தொடரவேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...