தமிழ் சினிமா ரசிகர்கள் ரொம்பவே ரசித்த த்ரிஷா, ஹன்சிகா மோத்வானி, தமன்னாவுக்கு ரசிகர்களே வி.ஆர்.எஸ். கொடுத்துவிட, காஜல் அகர்வால் திருமணமாகி செட்டிலாகி விட, லேட்டஸ்ட்டாக கீர்த்தி சுரேஷ் உடல் எடையைக் குறைக்கிறேன் என மெலிந்துவிட அவரைத் தேடிவந்த வாய்ப்புகளும் அவர் எடையைக் குறைத்த வேகத்தைவிட மிக துரிதமாக குறைந்துவிட, கடைசியில் நயன்தாராவும் நீண்டநாள் திருமண கிசுகிசுவை நிஜமாக்கிவிட, தமிழ் சினிமாவில் தங்களுடைய ப்ரியமான ஹீரோவுக்கு ஜோடியாக அடுத்து யாரை திரையில் பார்ப்பது என்ற உலகிற்கு மிக அத்தியாவசியமான ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் களமிறங்கி இருக்கிறது ’இளமைத் ததும்பும்’ டாப் 5 இளம் நடிகைகளின் வரவு.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, ஆனால் உச்சத்தில் இருக்கும் கமர்ஷியல் ஹீரோக்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கும் அளவிற்கு வயதானாலும், சினிமாவுக்கு வந்து 25 வருடங்களைக் கொண்டாடினாலும், ரெஸ்ட்ரோ பார்களில் கூடியிருக்கும் வாலிப பசங்களின் எண்ணிக்கையைவிட அதிகளவிலான அடுத்த தலைமுறை இளைய நடிகர்கள் படையெடுத்தாலும், அவர்களுக்கு ஜோடியாக நடிக்க பார்ப்பதற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தோற்றமும், துள்ளும் இளமையும், தங்களுடைய சினிமா அனுபவத்தை விட இரண்டு மடங்கு குறைவான வயதும் உள்ள ஹீரோயின்களைதான் சட்டென்று டிக் அடிக்கிறார்கள். இவர்களுடைய எதிர்பார்பை இயக்குநர்களும் முழுமையாகப் ’புரிந்து’ கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சமீபத்தில் அறிமுகமான ப்ரியங்கா மோகன், கீர்த்தி ஷெட்டிக்கும் இப்போது பெரும் வரவேற்பை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்து ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி, நீண்ட நாள் காணாமல் போன பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஹிட் படங்களைக் கொடுத்தார். இதனால் மீண்டும் ‘பீஸ்ட்’ மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் இவருக்கும் தற்போது பலத்த வரவேற்பு. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என ரவுண்ட் அடித்துகொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தானாவின் கால்ஷீட்டுக்காக போய் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த நான்கு நடிகைகளுக்கு இருக்கும் கமர்ஷியல் வேல்யூ இல்லாவிட்டாலும் கூட, தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும், சாய் பல்லவியையும் கமிட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
தற்போது கமர்ஷியல் ஹீரோக்களின் புதிய படங்களில் அநேகமாக இந்த ஐந்து நடிகைகளில் யாரையாவது ஒருவரைதான் ஹீரோயினாக நடிக்க வைப்பது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக தயாராகி வருகிறது தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பு.
கமர்ஷியல் ஹீரோக்களின் தேர்வாக, இயக்குநர்களின் விருப்பமாக, முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் இந்த டாப் 5 நடிகைகளைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களை பார்க்கலாம்.
பூஜா ஹெக்டே
வயது 31. 175 செமீ என நெடு நெடு உயரம். ஆனால் லாலி பாப்பை போன்ற மெல்லிய உடல்வாகு. வசீகர புன்னகை. இவைதான் பூஜா ஹெக்டேயின் அழகிய அடையாளம். மிஸ் யூனிவர்ஸ் 2010-ல் செகண்ட் ரன்னர் – அப், மிஸ் இந்தியா செளத் க்ளாமரஸ் ஹேர் – 2010 இவையிரண்டும் இவரது அழகிற்கும், கூந்தலுக்கும் கிடைத்த க்ரெடிட்கள். தமிழில் ‘முகமூடி’ பாக்ஸ் ஆபிஸில் எடுப்படாமல் போனதால், தெலுங்குப் பக்கம் போனார். அங்கே இவரை வாரியணைத்து கொண்டார்கள் ரசிகர்கள்.
இன்று தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். அடுத்தடுத்த ஹிட் இவரை நயன்தாராவைப் போல சம்பளத்தை எகிறவைக்க உதவின. தற்போது 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறுகிறார்கள். விஜயுடன் நடித்த ‘பீஸ்ட்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பூஜா ஹெக்டேவுக்கு முழுமையான பலன் கிடைத்திருக்கிறது. தெலுங்கு, ஹிந்தியில் பரீட்ச்சயமான முகம் என்பதால், பான் – இந்தியா படங்களுக்கு இவரை நடிக்க வைத்தால் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்பது இங்குள்ள இயக்குநர்களின் கணக்கு. இது இவருக்கு பலம்.
ராஷ்மிகா மந்தானா
நாம் எதற்கெடுத்தாலும் க்ளிக் செய்யும் கூகுள், ’நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா – 2020’ என ராஷ்மிகா மந்தானாவை தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறது. அந்தளவுக்கு இவரது குறும்புத்தனமான சேட்டைகளும், முகப்பாவங்களும், சோஷியல் மீடியா அப்டேட்களும் இளசுகளின் மனதில் இவரை விசா இல்லாமலே குடிப்பெயர வைத்திருக்கின்றன. இன்ஸ்டாக்ராமில் 32.3 மில்லியன் ஃபாலோயர்களை பெற செய்திருக்கின்றன. கன்னடத்தில் அறிமுகமானாலும், இவருக்கு மவுசை கொடுத்தது தெலுங்குப் படமான ’கீதா கோவிந்தம்’.
பான் – இந்தியா படமாக பெரும் வரவேற்பை பெற்ற ’புஷ்பா’ இவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகளை இன்னும் பலப்படுத்தி இருக்கிறது. தற்போது இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் ‘வாரிசு’ இவருக்கு தமிழில் அதிக டிமாண்ட்டை உருவாக்கும் என்கிறார்கள். ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடிக்கும் ’மிஷன் மஞ்சு’, அமிதாப் பச்சனுடன் ‘குட்பை’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அனிமல் படத்தில் முதலில் பரினீதி சோப்ரா நடிப்பதாகதான் இருந்தது. ஆனால் புஷ்பா கொடுத்த புஷ், ராஷ்மிகாவை கமிட் செய்ய வைத்திருக்கிறது. இப்போது ராஷ்மிகா மந்தானாவின் ஃப்ரொபைல் இல்லாத இளசுகளின் மொபைல் இல்லை என்றாகியிருக்கிறது.
இவரது சம்பளம் வெறும் 2 கோடிதான். புஷ்பாவுக்குப் பிறகுதான் இதையும் ஏற்றியிருக்கிறாராம்.
ப்ரியங்கா மோகன்
அப்பா தமிழ், அம்மா கன்னடம் என்பதால் சென்னைவாசிதான். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்ற ஆறுதலுடன் களமிறங்கி இருக்கிறார் ப்ரியங்கா மோகன். கன்னடம், பயோ டெக்னாலஜி படித்த கையோடு அதை மறந்துவிட்டு கன்னடம், தெலுங்குப் படங்களில் ஒரு ரவுண்ட் அடித்தப் பிறகுதான் கோலிவுட்டில் கால் பதித்து இருக்கிறார்.
தற்போது இவருக்கு 27 வயது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ மற்றும் ’டான்’, சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களில் நடித்தார். ஆரம்பத்திலேயே இரண்டு ஹிட் படங்கள். கமர்ஷியல் வேல்யூ உள்ள ஹீரோகளுடன் நடித்ததால் இவருக்கு அசுரவேகத்தில் ஸ்டார் வேல்யூ கிடைத்திருக்கிறது.
இவர் கமிட்டாக இருக்கும் படங்களில் நடிக்க 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் கேட்பதாக கிசுகிசுக்கிறார்கள். ஆனாலும் அதை கொடுக்க தயாராக இருக்கிறது கோலிவுட் வட்டாரம்.
கீர்த்தி ஷெட்டி
தமிழ் சினிமாவில் 18 வயதுடைய ஒரு குறுகுறுப்பான கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி கிடைத்திருக்கிறார். தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘உப்பென்னா’ படத்தில் அறிமுகமான இவருக்கு அப்போதைய சம்பளம் வெறும் 6 லட்சம்தான் என்கிறார்கள். ஆனால் தற்போது 10 மடங்கு உயர்த்திவிட்டாராம். அதாவது 60 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.
தமிழில் இவர் அதிகம் எதிர்பார்த்த லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘த வாரியர்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பதுங்கிவிட்டலும் கீர்த்தி ஷெட்டியின் கேரியருக்கு எந்த ஸ்பீட் ப்ரேக்கரும் இல்லை. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதால் கொஞ்சம் தெம்பாக இருக்கிறது கீர்த்தி ஷெட்டியின் கால்ஷீட்டை பார்க்கும் மேனேஜர் வட்டாரம்.
2016-ல் தெலுங்கில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த ‘பங்காராஜூ’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டபோது, அப்பட குழுவினர் முதலில் ஹீரோயினா நினைத்தது கீர்த்தி ஷெட்டியைதான். ஃபேண்டஸி படமான அதில் நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்காக கேட்டதால், கீர்த்தி 2 கோடி போதும் என்று சொல்ல, திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்தது பங்காராஜூ டீம். இந்த அனுபவம் கொடுத்த படிப்பினையால், இப்போது சம்பள விஷயத்தில் அடக்கி வாசிக்கிறாராம்.
தமிழ் சரிவர பேச தெரியாததால் தமிழ் டியூஷன் வைக்க சொல்லி இவருக்கு பல தரப்புகளிலிருந்தும் அட்வைஸ்கள் வருகிறதாம்.
சாய் பல்லவி
சாய் பல்லவி செந்தாமரை [முழுப்பெயர் இதுதான்] ஜார்ஜியாவில் படித்தது டாக்டர் படிப்புதான் என்றாலும், பிடித்தது ‘ஆக்டர்’ தொழில்தான் என கோலிவுட், டோலிவுட். மல்லுவுட்டில் உற்சாகமாக வலம் கொண்டிருப்பவர். இன்றைய நிலவரப்படி, ஹீரோயின்களுக்கு க்ளோஸ் – அப் ஷாட் வைப்பது என்பது இயக்குநர்களுக்கு இருக்கும் மிகப்பெரும் சவால். ஆனால் ’ரவுடி பேபி’ சாய் பல்லவி இருந்தால் போதும், அந்த சவாலை அசால்ட்டாக சமாளிக்கலாம். அந்தளவிற்கு முகப்பாவனைகளில் வித்தை காட்டும் நடிப்பு ராட்சசி சாய் பல்லவி.
தாய் மொழி படுகா என்றாலும் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என கூடுதலாக ஐந்து மொழிகளிலும் புலவர் அளவிற்கு பேசும் திறமை இருப்பதால், இயக்குநர்களுக்கு இவர் ’டார்லிங்’ ஆகியிருக்கிறார் . எதைக் கேட்டாலும், நோ கமெண்ட்ஸ் என்றோ அல்லது என் அம்மாகிட்டதான் கேட்கணும் என்று பதில் சொல்லும் ஹீரோயின்களுக்கு மத்தியில், மெச்சூர்ட்டான ஒரு நடிகையாக, தனது கருத்துகளை தைரியமாக முன்வைப்பதில் இவருக்கு ஒரு தனி இடம்.
இதனால் இவருக்கு வழக்கமான க்ளாமர் இமேஜை விட சென்சிட்டிவான நடிகை என்ற இமேஜ்தான் இருக்கிறது. கதைகளைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் கேட்கும் சம்பளம் 2 கோடியாம். ஹீரோயின்களை மையமாக கொண்ட படங்களுக்கான நாயகியாக நடிக்க இன்றைய இயக்குநர்களின் முதல் தேர்வாக இருப்பது சாய் பல்லவி என்பது இவரது திறமைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்.