ஒரு சிறுமிக்கு நேரும் பாலியல் வன்கொடுமையில் குற்றம்சாட்டப்படும் தனது அப்பா நல்லவர் என நிரூபிக்க களமிறங்கும் மகள் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதே ‘கார்கி’யின் ஒன்லைன்.
அயனாவரத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கார்கியின் திரைக்கதையாக்கி இருக்கிறார்கள் கெளதம் ராம்சந்திரன் மற்றும் ஹரிஹரன் ராஜூ.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ’பருத்திவீரன்’ சரவணனின் ஒன்பது வயது மகளை, வட மாநிலங்களைச் சேர்ந்த நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். இவர்களோடு உள்ளூரைச் சேர்ந்த ஒருவரும் குற்றவாளி என்று பரபரப்பான செய்திகள் வெளியாகிறது. அந்த உள்ளூர் நபர் யார், அந்த மர்மத்தை சாய் பல்லவி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே ‘கார்கி’
சாய் பல்லவியை இனி ‘லேடி தனுஷ்’ என்று சொல்லலாம். இன்றைக்குள்ள இளம் நடிகைகளில் சாய் பல்லவியை கமிட் செய்யும் இயக்குநர்கள், மிக தைரியமாக க்ளோஸ்-அப் ஷாட்கள் வைக்கலாம். முகப்பாவனைகளில் நொடிக்கு நொடி வித்தை காட்டுகிறார். Heroine oriented subject என்றால் இனி இயக்குநர்களின் ஆகச் சிறந்த தேர்வாக சாய் பல்லவி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இப்படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் பதட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுவரை காமெடி அல்லது குணசித்திர கதாபாத்திரங்களில் கமிட்டாகி விட்டோமே என்று அட்டடென்ஸ் மட்டும் போட்டு வந்த காளி வெங்கட்டுக்கு இந்தப்படம் ஒரு பக்காவான பிஸினெஸ் கார்ட். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.
’பருத்தி வீரன்’ சரவணன், ஆர்.எஸ். சிவாஜி, லிவிங்ஸ்டன், திருநங்கை நீதிபதியாக வரும் சுதா, கவிதாலயா கிருஷ்ணன், ஜெயப்பிரகாஷ், ஐஸ்வர்யா லஷ்மி உள்பட படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே வாங்கிய சம்பளத்திற்கு மிகாமல், அளவாய், யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக திருநங்கை நீதிபதியாக வரும் சுதா, கதாபாத்திரம் செம டச்சிங். ‘I know the arrogance of men and pain of women. I am the best person to judge this case’ என்று அவர் தெறிக்கவிடும் வசனம், சிந்திக்க வைக்கும் சாட்டையடி. தமிழ் சினிமாவில் நீதிமன்ற காட்சிகள் என்றால், லாஜிக்கையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, மேஜிக்கை கையிலெடுப்பார்கள். இந்த பாரம்பரியமிக்க க்ளிஷேக்களை ஓரங்கட்டிவிட்டு, ஒரு பரபரக்கிற காட்சியாக எடுத்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது.
ஒரு மாத்திரையின் டோஸேஜ்ஜை வைத்து, பக்காவாக நிரூபிக்கப்பட்ட வழக்கின் போக்கை மாற்றுவது போல் திரைக்கதை அமைத்திருப்பது விறுவிறுப்புக்கான வோல்டேஜ். ஆர்.எஸ். சிவாஜி மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவரில் சுற்றியிருப்பவர்கள் சாணியை எறிந்திருப்பார்கள். சில நாட்களில் அவர் பெயிலில் வெளியே வந்ததும் சாய் பல்லவி சாணியைக் கழுவி விடும் காட்சி, சைக்காலஜி டச்.
ஒரு சிரீயஸான எமோஷனல் த்ரில்லர் படமாக இருந்தாலும் கதை நடக்கும் சூழலில் சுற்றியிருக்கும் அழகியல் அம்சங்களையும் காட்சிகளோடு இணைத்து காண்பித்து இருப்பது ரசிக்க வைக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, காட்சிப்படுத்தலை விறுவிறுப்பாக்குவதில் முன்னணியில் நிற்கிறது. ஸ்ரீயந்தி மற்றும் ப்ரேம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, உணர்வுகளைப் பிரதிபலிப்பது, சாய் பல்லவியுடன் சேர்ந்து நம்மையும் பதட்டத்துடன் இருக்க செய்கிறது. ஷஃபிக் முகமத் அலியின் எடிட்டிங், தரமான கட்டிங்.
’கார்கி’யில் பல நிறைகள் இருந்தாலும், ஒரு மிகப்பெரிய . லாஜிக் ஓட்டையை அடைக்காமல் விட்டுவிட்டார்கள். சாய் பல்லவி சிறுமியாக இருக்கையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுக்க முயலும்போது, ’என்னை நினைச்சுக்கோ. பயப்படாதே’ என கொதித்தெழும் அப்பா, ஜெயப்பிரகாஷின் மகளை எந்தவித பாலியல் தொந்தரவும் கொடுக்காமல் பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்லும் நம்பகமான வேலையாள் என சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜி நல்லவர் என்பதற்கான காட்சிகளை ஆங்காங்கே அடுக்கடுக்காக வைத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு நல்லவர் தப்பு செய்வாரா.. திடீரென தப்பு செய்ய என்ன காரணம், அவருடைய வீக்னெஸ் என்ன என்று நமக்குள் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க கூடிய குறியீடுகளை காட்டாமலேயே விட்டுவிட்டார்கள். க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காக அந்த கதாபாத்திரத்தை காலி பண்ணிவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.