No menu items!

யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் காமராஜர்

யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜரின் 120ஆவது பிறந்த தினம் இன்று. காமராஜருடன் நெருங்கி பழகிய எழுத்தாளர் சிட்டியும் கண்ணதாசன் புதல்வர் காந்தி கண்ணதாசனும் காமராஜர் பற்றிய என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே…

யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார்

எழுத்தாளர் சிட்டி

காமராஜரை அவர் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரராக இருந்த காலத்திலிருந்தே தெரியும். நான் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வழக்கமாகப் போவேன். அங்கே அவர் பேசுவார். இப்படித்தான் காமராஜர் எனக்கு பழக்கம்.

‘மணிக்கொடி’ பத்திரிகை காரியாலயத்திற்கும் அவர் அவ்வப்போது வருவார். ‘மணிக்கொடி’ பத்திரிகையின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. 1937இல் அவர் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் நாள் அவைக்குச் செல்கையில் உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட அவை நடவடிக்கைகள் அடங்கிய ஆவணக்கட்டு ஒன்றை சுமந்துகொண்டு ‘மணிக்கொடி’ அலுவலகத்துக்கு வந்தார். ‘மணிக்கொடி’ ஆசிரியர் பி.எஸ். ராமைய்யாவிடம் அந்தக் கட்டை கொடுத்துவிட்டு, “எப்படி வேண்டுமோ அப்படி இதை உபயோகித்துக் கொள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

1962 ஏப்ரல் 22ஆம் தேதி இரண்டாவது முறையாக காமராஜர் தமிழக முதலைமைச்சராகப் பதவி ஏற்றபோது பதவி ஏற்பு நிகழ்ச்சியை பதிவு செய்ய ‘ஆல் இந்தியா ரேடியோ’ சார்பாக நான் போயிருந்தேன். விழா முடிந்த பிறகு பார்த்தால் கவர்னர், அமைச்சர்கள் அனைவருடைய குரலும் நன்றாகப் பதிவாகியிருக்க, காமராஜர் குரல் மட்டும் சரியாக பதிவாகவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. காமராஜர் குரல் இல்லாமல் அந்த ‘டேப்’பை ஒலிபரப்ப சாத்தியமே இல்லை. நிகழ்ச்சியை ஒலிபரப்பாமலும் இருக்க முடியாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி. அப்போது பொதுத்துறை செயலாளராக இருந்த திரவியத்தை அணுகி நிலைமையை சொன்னேன். “என்ன சுந்தரராஜன், இதில் நான் என்ன செய்ய முடியும்” என்று சொல்லிவிட்டார் அவர். “அதை காமராஜரிடம் தெரிவிக்கலாமா” என்று அவரைக் கேட்டேன். திரவியம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். “இந்த விஷயம் உங்கள் டிப்பார்ட்மெண்டையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது” என்றார்.

அப்போது காமராஜர் தற்செயலாக வெளியே வந்தவர், “என்ன சிட்டி, இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்” என்று மெதுவாக கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன். உடனே அவர், “நான் வேண்டுமானால் இன்னொரு முறை படிக்கட்டுமா? ஆனால், கவர்னர் இல்லையே; நீங்கள் கவர்னராக இருக்கிறீர்களா?” என்று வேடிக்கையாக கேட்டார். நான் கவர்னர் குரல் இருக்கிறது என்று சொன்னேன். “சரி நான் படிக்கிறேன்; நீங்கள் எங்கெல்லாம் இடைவெளி விட வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்” என்று விட்டு திரவியத்தை பதவி பிரமாண வாசகத்தை எடுத்துவரச் செய்தார். எல்லாம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை போட்டு சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டார். அப்புறம் நாங்கள் புறப்படும் போது திரவியம் தனியாக என்னிடம் வந்து, “விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு காரணம் இருந்தது. இது அரசியல் சட்ட அமைப்பு நியதிகளுக்கு எதிரானது. டெல்லியில் பலருடைய பதவிக்கும் ஆபத்து நேர்ந்திருக்கும். அது காமராஜருக்கும் தெரியும். ஆனால், அவரது பெருந்தன்மையாலும் சட்டென்று முடிவெடுக்கும் தன்மையாலும், நட்பு காரணமாகவும் இதனைச் செய்தார்!

இன்னொருவர் என்றால் டெல்லியில் கேட்க வேண்டும், கவர்னரைக் கேட்க வேண்டும், வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஒன்றுமில்லாத பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுவார்கள். காமராஜர் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வெறும் விதிகள் அதன் தீர்வைத் தடுத்து விடாமல் செய்தார்.

1954-55 சென்னை பொருட்காட்சியின் போது அங்கே நான்கைந்து பேராக நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது “நேரு, சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வரவேண்டும் என்று விரும்புகிறார்” என்று ஒருவர் சொன்னார். காமராஜர் என்னிடம், “சிட்டி, சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாற்றை நீங்களே எழுதுங்களேன்” என்றார். இதை அவர் விளையாட்டாக சொல்வதாகத்தான் முதலில் எடுத்துக்கொண்டேன். ஆனால், ஒரு மாதம் சென்று மீண்டும் பார்த்த போது, “என்ன நான் சொன்னதைப் பற்றி யோசித்தீர்களா?” என்றார். எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம் அவரே சொன்னதும், “என்னால் எப்படி முடியும்” என்று தயங்கினேன். “பரவாயில்லை எழுதுங்கள்” என்று கட்டாயப்படுத்தினார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அப்புறம் காமராஜரே, உடனே சத்தியமூர்த்தியின் மகள் லஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லி சத்தியமூர்த்தி சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் எனக்கு அனுப்பச் சொல்லிவிட்டார். நூற்றுக்கணக்கான தலைவர்களின் கடிதங்கள், பதினைந்து தொகுப்புகள் அடங்கிய செய்தித்தாள் நறுக்குகள், பல புத்தகங்கள், சொற்பொழிவுக் குறிப்புகள் என்று ஒர் அறை முழுவதும் நிறைந்துவிட்டது.

1962இல் சென்னை கார்ப்பரேஷன் கட்டிடத்தில் சத்தியமூர்த்தியின் சிலையை திறந்து வைக்க நேரு வந்திருந்தார். அப்போது திருமதி சத்தியமூர்த்தியை வீட்டில் போய் பார்க்க நேரு விரும்பினார். லஷ்மி கிருஷ்ணமூர்த்தி அப்போது ஊரில் இல்லை. எனவே, நேரு, திருமதி சத்தியமூர்த்தியுடன் பேசுவதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று என்னை கூப்பிட்டார், காமராஜர். நான் போனேன். சத்தியமூர்த்தி வீட்டில், “சத்தியமூர்த்தியின் வரலாற்றை எழுதுகிறார்” என்று என்னை நேருவுக்கு அறிமுகம் செய்தார். நேரு, “அப்படியா ? ரொம்ப நல்லது, நான் பல வருடமாக சொல்லிக்கொண்டே வருகிறேன். யாரும் செய்ய முன் வரவில்லை. நீங்கள் செய்ததில் சந்தோசம்” என்றார். நான் முன்னெச்சரிக்கையாக கையில் வைத்திருந்த நேருவின் தந்தை மோதிலால் நேரு, சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதங்களை அவரிடம் காண்பித்தேன்.

அவைகளை படித்தவுடன் நேரு உணர்ச்சி வசப்பட்டார். “இவை எல்லாம் இருக்கின்றனவா?” என்று நம்ப முடியாமல் கேட்டார். என் பணியில் எனக்கு வெற்றிக்கிடைக்கட்டும் என்று ஆசி கூறினார். அப்போது காமராஜர் கண்களை அகல விரித்து உருட்டி வேடிக்கையாக அவரது சந்தோசத்தை பகிர்ந்துக்கொண்டார்.

காமராஜர் கொடுத்த கார்

காந்தி கண்ணதாசன்

“காங்கிரஸில் அப்பா (கண்ணதாசன்) சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.

வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லிவிடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார்.

ஒருநாள் காமராஜருக்கு நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.

”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் ‘எம்.டி.ஜி. 140’ அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான்.

1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் கட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார்.

நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள்.

அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய ‘எம்.டி.ஜி. 140’ அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...