தேர்வுக்கு தயாராவதைப் போலவே தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதும் சவாலான விஷயம்தான். தேர்வு எழுதி முடித்த நாள்முதல் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்வரை அதற்காக காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு ஒரு வருடம்போல் இருக்கும். நாம் சரியாக தேர்வு எழுதியிருக்கிறோமா, தேர்வில் நாம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வருமா என்று ஒவ்வொரு நாளும் வினாத்தாளைப் பார்த்து மனதுக்கு உள்ளேயே மதிப்பெண்களை போட்டுப் பார்க்கும் மாணவர்கள் நிறைய பேரை நாம் பார்த்திருப்போம்.
சாதாரணமாக தேர்வு எழுதிய ஒரு மாதத்துக்குள் அதன் முடிவுகள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதி முடித்து 1 மாதத்துக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவுகள் வெளியாகாமால் உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாத காலமாவது ஆகலாம் என்று கூறி மாணவர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது யுஜிசி.
இது தொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகாத நிலையில் கல்லூரி மாணவர் சேர்க்கையை முன்பே முடித்துவிடக் கூடாது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சுமார் ஒரு மாத காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்த மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவு வரும் நேரத்திலேயே சிபிஎஸ் இ தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு என்ன காரணம் என்று சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களில் விசாரித்தோம்.
“கொரோனா காரணமாக தேர்வுகள் பாதிக்காமல் இருப்பதற்காக இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. முதல் கட்டமாக கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒரு மதிப்பெண்களுக்கான கேள்விகள் அடிப்படையில் 40 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் ஏற்கெனவே திருத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சூழலில் கடந்த மே, ஜூன் மாதங்களில் 40 மதிப்பெண்களுக்கான அடுத்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் கேள்விகளுக்கு மாணவர்கள் சற்று விலாவரியான பதில்களை அளிக்கவேண்டி இருந்தது.
இந்த 2 தேர்வுகளையும் தவிர 20 மதிப்பெண்கள் உள் மதிப்பீடாக வழங்கப்படுகிறது. பொதுவாக மாணவர்கள் ஒரு தேர்வை மட்டும் எழுதினால் விடைத்தாளை திருத்தி மதிப்பெண்களை வழங்கிவிடலாம். ஆனால் இப்போது 2-வதாக எழுதிய விடைத்தாள்களை திருத்துவதுடன், 2 தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும், உள் மதிப்பீடு மதிப்பெண்களையும் சேர்த்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டி உள்ளது. இந்த ஆண்டில் புதிதாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் ஆசிரியர்களுக்கு இதை ஒருங்கிணைப்பதில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறது. தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதற்கு இது முக்கிய காரணம்” என்று சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிபிஎஸ்இ-க்கு இது சிக்கலென்றால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால், கல்லூரியில் சீட் வாங்குவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற பயத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வைத்து ஏற்கெனவே தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சிபிஎஸ் இ மாணவர்களுக்காக சில இடங்களை ஒதுக்கியுள்ளதாக கல்லூரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளபோதும், தங்களுக்கு போதிய இடங்கள் கிடைக்குமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர்.
இதனால் வசதி வாய்ப்புள்ள மாணவர்கள், தங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணைக் காட்டி, அதிக பணம் கட்டி தனியார் கல்லூரிகளில் சேரத் தொடங்கியுள்ளனர். ஒருசில தனியார் கல்லூரிகளும் இதைப் பயன்படுத்தி அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றன.
கலைக் கல்லூரிகளில் இந்த நிலையென்றால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகளை திறப்பதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. இதுபற்றி குறிப்பிட்டுள்ள தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “.சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தாமதத்தால் தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தாமதமாகிறது” என்று தெரிவித்துள்ளார். இப்படி மாணவர்கள் முதல் கல்லூரிகள் வரை பலரையும் சுற்றலில் விட்டுள்ளது சிபிஎஸ்இ.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு மாதம் ஆகலாம் என்ரு யுஜிசி அறிவித்துள்ள போதிலும், இந்த மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.