தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விழாவை புறக்கணிக்கும் பொன்முடி
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து உயர் கல்வித் துறைக்கு எந்த அறிவிப்பு கொடுக்காமல், வேந்தரை மட்டும் அனுசரித்து துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிறப்பு அழைப்பாளராக யாரை அழைப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களை உயர் கல்வித் துறையிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இறுதி செய்யப்படுபவர்களில் ஒருவரைதான் அழைக்க வேண்டும். ஆனால், அதுபோல எதுவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக துணை வேந்தரிடம் கேட்டால், எனக்கு எதுவும் தெரியாது சார், ஆளுநர் அலுவலகத்தில் தகவல் வருகிறது என்கிறார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்ளப்போவதில்லை” என்று கூறினார்.
அதிமுக வங்கிக் கணக்குகள் முடக்கப்படுமா? வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாககூறி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்துவந்த பொருளாளர் பதவி, திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுகவின் வரவு செலவு கணக்குகள் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கிகளுக்கு கட்சியின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் வங்கிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான்தான் அதிமுகவின் பொருளாளர். என்னை கேட்காமல், வரவு செலவு கணக்குகளை யாரும் கையாள அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா நிலை என்ன? பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுப்பு
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவின் நிலை தொடர்பான தகவலை அளிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, “மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு உத்தவ் தாக்ரே ஆதரவு!
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்ரே வசம் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பாக கடந்த சில நாள்களாக அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே ஆலோசனை செய்து வந்தார். அப்போது, கட்சி எம்பிக்கள் பெரும்பாலானோர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என உத்தவ்விடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் முர்முவையே ஆதரிக்க போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
‘சாட்டை’ துரைமுருகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேச்சுரிமை எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது.