No menu items!

மிஸ்.ரகசியா – அதிமுக மோதல் திமுக உஷார்

மிஸ்.ரகசியா – அதிமுக மோதல் திமுக உஷார்

ஆபீஸ் ஷட்டரின் தாழ்ப்பாள் சிக்கிக்கொண்ட நிலையில் அதைத் திறக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

“அதிமுக ஆஃபிஸில்தான் பூட்டை உடைக்கிறார்கள் என்றால் இங்கேயுமா? என்று சிரித்துக் கொண்டே வந்தாள் ரகசியா.

“நிறைய ஏடிஎம்கே நியூஸ் இருக்குபோல. வா, டீக்கடைல டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம்” என்று ரகசியாவை வெளியே அழைத்துச் சென்றோம்.

“அதிமுக பொதுக்குழுவைப் பற்றிய செய்திகள்தான் பேப்பர், டிவினு நிறைய வந்துருக்கே”

“இருந்தாலும் ரகசியா கொடுக்கிற நியூஸ் மாதிரி வருமா”

“ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. மத்த நியூசையெல்லாம் பேசிட்டு கடைசில அதிமுக பொதுக் குழுவுக்கு வரலாம். ஒரு ரிலீஃப் கிடைக்கும்..” என்று ஆரம்பித்தாள் ரகசியா.

“உளவுத் துறை செய்திகளை தந்தாலும் கலைஞர் தனக்குனு ஒரு வட்டத்தை வச்சு உளவுத் துறை செய்திகளை சரி பார்ப்பார். அது மாதிரி இப்போ முதல்வர் ஸ்டாலினும் ஆரம்பிச்சிருக்கார். ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரிதான் முதல்வரின் காதாக செயல்படுகிறாராம். முக்கியமாய் திமுகவினர் குறித்த செய்திகளை விசாரித்து வகைப்படுத்தி கொடுக்கிறாராம். இந்த செய்திகளை அவர் நேரடியாக முதல்வரிடம் கொடுப்பதில்லை. அதற்கென முதல்வருக்கு நெருக்கமான இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் தகவல்கள் தரப்படுகின்றன. அவர்கள் முதல்வருக்கு செய்திகளை கடத்துகிறார்கள்”

” ஏன் இப்படி சுற்றி வளைத்து…நேரடியாகவே கேட்கலாமே”

“வேண்டாம் என்று நினைக்கிறார் முதல்வர். அது மட்டுமில்லாமல் இந்த அதிகாரிகள் தகவல்களை சரி பார்த்து முழுமையாக முதல்வருக்கு கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் முதல்வருக்கு நேரம் மிச்சம்”

“கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பனின் சஸ்பென்ஷனை திமுக ரத்து பண்ணியிருக்கிறதே? கோபம் தணிந்துவிட்டதா? பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதா?”

“அதுக்கு ஒரு பின்னணி இருக்கு. ஜூலை 8-ம் தேதி கடலூர் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இதில் அய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்கள் 12 பேர் அவரது உத்தரவின்படி கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவினர் அய்யப்பன் ஆதரவு கவுன்சிலர்களுடன் இணைந்து கடலூர் மாநகராட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயம் முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத் துறையின் மூலம் கிடைச்சிருக்கு. அய்யப்பனுடன் பேசுமாறு அன்பகம் கலையிடம் முதல்வர் சொல்ல, அய்யப்பன் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டார் அப்போது மன்னிப்பு கடிதம் கொடுத்தால் உங்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று அன்பகம் கலை சொல்ல, பதிலுக்கு தனக்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்டத்தில் செய்யும் அரசியலைப் பற்றி அய்யப்பன் சொல்லியிருக்கிறார்.

தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார். இதைக்கேட்ட அன்பகம் கலை, முதலில் மன்னிப்பு கடிதத்தை தாருங்கள். முதல்வரிடம் தக்க சமயத்தில் பேச வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன். அவரிடம் நீங்களே இதுபற்றி பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அய்யப்பன் விஷயத்தில் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க துரைமுருகனும் ஸ்டாலினிடம் சிபாரிசு செய்ததாக சொல்கிறார்கள்.”

“சரி நம்ம வாவ்தமிழா யூடியுப் சேனலில் எஸ்.வி.சேகர் பேட்டி போட்டிருந்தங்களே அது பாஜகவுல பேசப்பட்டிருக்கு”

“என்னாச்சு?”

“தன்னை வந்து பார்க்க சொல்லி எஸ்.வி.சேகரை அண்ணாமலை கூப்பிட்டுருக்கார். அவரும் அண்ணாமலையை பார்க்க போயிருக்கிறார். அடுத்து என்ன என்பது இனிமேல்தான் தெரியும். புதிய பொறுப்புகள் சேகருக்கு கொடுக்கப்படலாம். எல்லோரையும் பார்க்கிற அண்ணாமலை ஒருத்தரை மட்டும் பார்க்காம டிமிக்கி கொடுக்கிறாராம். அது தெரியுமா?”

“யாரவர்? அண்ணாமலைக்கு எதிர்க் கோஷ்டியா?”

“இல்லை. ஜி.கே.வாசன். அண்ணாமலையை பார்க்கணும்னு ஜி.கே.வாசன் தொடர்ந்து முயற்சி பண்றாராம். ஆனா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கல”

“ஏன் என்னாச்சு?”

“பாஜகவில் சேரலாம்னு ஜி.கே.வாசன் இருக்கார். அதுக்கான முயற்சிகளையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஆனால் பாஜக டெல்லி தலைமை ஜி.கே.வாசனோட தொண்டர் பலம் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கு. அவர் வந்தா கட்சிக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்தானே தவிர எக்ஸ்ட்டா ஸ்ட்ரெங்க்த் இல்லனு நினைக்குது. அதனால வாசனை சந்திக்கிறதுக்கு அண்ணாமலை தயங்கிட்டு இருக்கார்”

“வாசன் பேசாம காங்கிரசிலேயே இருந்திருக்கலாம்.பாவம்.”

”ஆமாம். ஆனா ஆசை யாரைவிட்டது. கேஜ்ரிவால் தரப்புலருந்து நம்ம முதல்வருக்கு எச்சரிக்கை தகவல் வந்துருக்குனு டெல்லி வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க”

“அவங்களுக்கும் இவங்களுக்கும் கனெக்‌ஷனே இல்லையே?”

“அரசியல்வாதிங்க கனெக்‌ஷன் நமக்குப் புரியாது. அதிமுக உடையற விஷயத்துல திமுக கவனமா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்துல இப்போ அடிச்சுக்கிட்டு இருக்கிற மூணு கோஷ்டியும் ஒண்ணாயிடும். எங்களை திமுகதான் பிரிச்சு வச்சிருந்துச்சுனு அந்த நேரத்துல பரப்புரை நடத்தும். அதுக்கு இப்போ திமுகவுல இருக்கிற பாஜக ஸ்லீப்பர் செல் உதவும்னு சொல்லியிருக்காங்க. அதனால அதிமுக மேட்டர்ல திமுக அதிகம் கவனம் செலுத்தாம இருக்கு”

“எல்லாம் மர்மமா இருக்கு”

”சரி.. அதிமுக பத்தி பேச ஆரம்பிச்சாச்சு. இப்போ பொதுக்குழு விஷயத்தில் உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கிறதோ, ஒவ்வொண்ணா கேளுங்க. எனக்கு கிடைச்ச நியூசை சொல்றேன்”

“அதிமுக மாவட்டச் செயாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கம் இருக்கும்போது லாய்ட்ஸ் ரோட் அதிமுக தலைமை ஆபிசை ஓபிஎஸ் கோஷ்டி எப்படி பிடிச்சாங்க? சென்னை மாவட்டத்து அதிமுகவினருக்கு இப்படி நடக்கப் போறது தெரியாதா”

“இந்த விஷயத்தில் எடப்பாடி கொஞ்சம் அப்செட் என்கிறார்கள். அவரும் இதுபற்றி மாவட்ட செயலாளர்களிடம் வருத்தப்பட்டாராம். சென்னை மாவட்ட செயலாளர்களுக்கும் இங்குள்ள தொண்டர்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக சுமார் 200 தொண்டர்கள் மட்டுமே தலைமை அலுவலகத்தில் இருந்திருக்காங்க, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்து அலுவலகத்தை கைப்பற்றி உள்ளனர்.”

“ஊர்லருந்து ஓபிஎஸ் ஆள் கூட்டிட்டு வரார்னு முந்தின நாளே செய்திகள் வந்துருச்சே. அப்படியுமா எடப்பாடி உஷார் ஆகல?”

“அவங்க பொதுக் குழுவுக்கு வந்து கலாட்டா பண்னுவாங்கனு நினைச்சிருக்காங்க. பார்ட்டி ஆபிசுக்குக்கு போவாங்கனு எதிர்பார்க்கல. ஆனால் நல்ல வேளை இந்தக் கூட்டம் பொதுக்குழுவுக்கு வரலனும் எடப்பாடி தரப்புல கொஞ்சம் ஹேப்பி. அவங்க வந்திருந்தா பெரிய கலாட்டாவாயிருக்கும். பொதுக்குழுவே நடத்த முடியாம போயிருக்கும்னு பேசிக்கிறாங்க. இந்த விஷயத்திலயும் ஓபிஎஸ் கோட்டை விட்டுட்டார்னுதான் கட்சில பேச்சு”

“தடாலடி அரசியல் செய்வது ஓபிஎஸ்ஸின் பாணி இல்லையே. அப்படி இருக்கும்போது அவர் எப்படி திடீரென கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் முடிவுக்கு வந்தார்?”

“கட்சி தன் கைவிட்டு நிச்சயம் போகும் என்று உறுதியாகத் தெரிந்ததும் கட்சி அலுவலகத்திலிருந்து சில பல ஆவணங்களை எடுத்துச் செல்வதற்காகத்தான் அங்கு ஓபிஎஸ் சென்றார் என்கிறார்கள்”

”அப்படியென்ன டாக்குமெண்ட்ஸ் அவர் எடுத்துட்டு போயிருக்காரு”

”ஒபிஎஸ் பொருளாளராக இருந்தபோது, கணக்கு வழக்கில் ஏற்பட்ட சில சிக்கல்கள் பிற்காலத்தில் தன்னை துரத்தக் கூடாது என்பதற்காக அந்த டாக்குமெண்ட்ஸை தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அத்துடன் ஏதாவது வில்லங்கம் செய்து எடப்பாடி தரப்புக்கு கட்சி அலுவலகம் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்துள்ளது. அதனால்தான் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப் போகிறோம் என்று ஓபிஎஸ்ஸிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சொன்னபோது அவர் பிகு பண்ணிக் கொள்ளவில்லை. ‘நாம் எதற்காக வந்தோமோ, அந்த காரியம் முடிந்துவிட்டது. நாம் இப்போது பிரச்சினை செய்யாமல் கிளம்புவோம்’ என்று வைத்தியலிங்கம் சொன்னதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார் ஓபிஎஸ். மற்றவர்கள் தன்னைப்பற்றி ஏதும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வாசலில் சில நிமிடங்கள் அமர்ந்து கிளம்பிப் போயிருக்கிறார்.”

“கட்சி தன் கைக்குள் வந்திருப்பதால் எடப்பாடியார் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாரே?”

“இருக்காதா பின்ன. அதனால்தான் பொதுக்குழுவின் நடுவில் கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டுக்கூட அவர் பதற்றம் இல்லாமல் இருந்திருக்கிறார். ஓபிஎஸ்ஸைப் பிறகு பார்த்துக் கொள்வோம் முதலில் பொதுக்குழுவில் பெரும்பான்மை ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வை முடித்துவிடுவோம் என்பதில் கவனமாக இருந்துள்ளார். தலைமை கழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேட்டுக்கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸை பொருளாளர் பதவியில் இருந்து மட்டுமே நீக்க மட்டுமே திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர் தலைமைக் கழகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் அவரை கட்சியை விட்டே நீக்கி இருக்கிறார்கள். வரும் அக்டோபர் 17-ம் தேதியுடன் அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த தேதிக்குள் அதிமுகவை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் அடுத்த கணக்காக உள்ளது.”

“இனி எடப்பாடியை கையில் பிடிக்க முடியாதே?”

“அப்படியும் சொல்ல முடியாது. பொதுக்குழு மேடையிலேயே கே.பி.முனுசாமியிடம் சி.வி.சண்முகம் சீற, அவரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினார் எடப்பாடி. இப்போது பொதுச்செயலாளர் ஆவதற்காக பலரது தயவும் எடப்பாடிக்கு தேவைப்பட்டுள்ளது. இதனால் பிற்காலத்தில் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய நிலை அவருக்கு உள்ளது. இதை எடப்பாடியால் சமாளிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”

’அரசியல் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்”

“அரசியல் இல்லாத ஒரு நியூஸ் சொல்றேன். இந்தியாவோட விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐ எஸ் ஆர் ஓ வை தனியாருக்கு கொடுக்கிற திட்டங்கள் தயாரா இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாராங்கள். ஏர் இந்தியாவை வாங்கியதை போல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் பங்கு போட இருக்கும் நிறுவனம் டாடாவாம்” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...