இந்திய சினிமாவில் இதுதான் ‘பிரம்மாண்டம்’ என்று ஒரு புதிய வரையறையை வகுத்தவர் இயக்குநர் ஷங்கர்.
ஆனால் ‘பாகுபலி’யின் முதல் பாகம் வெளியானதுமே, அட இதுதான் பிரம்மாண்டம் என்ற கமெண்ட்கள் எழுந்தன. பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவந்ததுமே பிரம்மாண்டத்திற்கு மறுவரையறை வகுத்துவிட்டார் இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலி.
இதற்கிடையில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத கன்னட சினிமாவிலிருந்து கேஜிஎஃப் படங்களின் மூலம் பிரசாந்த் நீல்லும் முரட்டுத்தனமான பிரம்மாண்டத்தைக் காட்டினார். இதையெல்லாம் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட, நெருக்கடி என்னவோ ஷங்கருக்குதான் உண்டானது.
இதுவரை காட்டிய பிரம்மாண்டத்தை தாண்டிய வேறெதை புதுமையாக காட்டுவது என்ற நெருக்கடியிலிருக்கும் ஷங்கர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறாராம்.
வழக்கமாக தனது படங்களுக்கு அந்தந்த துறையில் முன்னணியில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை கூடவே வைத்து கொண்டு படமெடுப்பது ஷங்கரின் சக்ஸஸ் ஃபார்மூலா. இதுவரை கிடைத்த வெற்றியைத் தாண்டி பெரியதாக சாதிக்கும் துடிப்பில் இருப்பதால், தனது பாணியை கொஞ்சம் மாற்றியிருக்கிறாராம் ஷங்கர்.
உயர் தரத்தில், எந்த வித சமரசமும் இல்லாமல் இருக்கவேண்டும். ஆனால் ஷூட் செய்வதற்கு அதிக காலம் பிடிக்காமல் அதை மளமளவென சீக்கிரம் எடுத்து முடிக்க வேண்டுமென்பதற்காக புத்தம் புது டீமுடன் கைக்கோர்த்திருக்கிறாராம்.
வாரியரை வாரிவிட்ட லிங்குசாமி!
இயக்கிய ’அஞ்சான்’ மற்றும் தயாரித்த ’உத்தம வில்லன்’ இரண்டுப் படங்களும் ’வேற லெவலில்’ இருக்கும் வகையில் தான் கற்ற வித்தை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இறக்கினார் லிங்குசாமி. ரசிகர்கள் தங்களது வித்தையைக் காட்ட, விமர்சன ரீதியாகவும், நிதிரீதியாகவும் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டார்.
கடன் தொகை பல கோடிகள் என்பதால், வேறங்கும் தலைக்காட்டாமல் அமைதிக்காத்து வந்தார். வாங்கிய கடனால் அவரால் இங்கு படத்தை இயக்கவோ அல்லது தயாரிக்கவோ முடியாமல் இருந்தது. அப்படியொரு முயற்சி எடுத்தால் முன்னர் வாங்கிய கடனை திருப்பி அளித்தால் மட்டுமே, படத்தை வெளியிட அனுமதிப்பார்கள் என்பதே அதற்கு காரணம்.
அதனால் பல ஆண்டுகள் வனவாசம் இருந்தது போல இருந்த லிங்குசாமிக்கு, கைக்கொடுத்தது ‘வாரியர்’ படம். உண்மையில் இது தெலுங்கு மற்றும் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் படம். வாரியரில் கதாநாயகனாக நடித்திருக்கும் ராம் பொத்னேனி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இங்கு பள்ளியில் படித்தவர். அதனால் தமிழில் கால் பதிக்க விரும்பும் ராமுக்கு இந்த ப்ராஜெக்ட்டில் ஆர்வம் உண்டானது.
மளமளவென வேலைகள் நடந்தது. பூசணிக்காயும் உடைத்து விட்டார்கள். படத்திற்கு பிரம்மாண்டமாக ப்ரமோஷன் வேலைகளையும் பார்த்தார்கள். அதிலும் கெடுபிடி. படத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு ராம் பொத்னேனியையும், கீர்த்தி ஷெட்டியையும் ஜோடியாக பேச வைத்த ப்ரமோஷன் நல்லபடியாகதான் முடிந்தது.
ஆனால் ரிலீஸ் ஆகவேண்டிய நேரத்தில்தான் சைலண்ட்டாக ஒரு காரியம் நடந்ததாக கிசுகிசுக்கிறார்கள். மாஸ்டர் ப்ளானாக வேறொரு பேனர் பெயரில் படத்தின் வெளியீட்டை லிங்குசாமி தரப்பு முயற்சித்ததாகவும், அதை கடன் கொடுத்தவர்கள் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் வாரியருக்கு இப்போது சிக்கல். படத்தை வெளியிடுவதில் இப்போது குழப்பம் நிலவுகிறதாம். போக்கிரி பட காமெடி மாதிரி மண்டையை மறைந்தவர்கள் கொண்டையை மறைக்கவில்லையே என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.
100 கோடி சம்பளத்தை எட்டும் புஷ்பா ஹீரோ!
ஒடிடி நிறுவனங்களின் வருகையால் கொண்டாட்டத்தில் இருப்பது சிறிய பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களோ அல்லது மீடியம் பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களோ அல்லது புதுமுக நட்சத்திரங்களோ அல்ல. கமர்ஷியலாக முன்னணியில் இருக்கும் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் கொட்டிக் கொடுப்பதில் ஒடிடி நிறுவனங்களிடையே கடும்போட்டி நிலவுகிறது.
எப்படியாவது இந்திய சினிமா சந்தையைப் பிடிக்க வேண்டுமென்ற போட்டியில் இறங்கியிருப்பதால், நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கான ஒடிடி உரிமை தொகையை தாறுமாறாக ஏற்றி வருகின்றன ஒடிடி நிறுவனங்கள். ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிப்பட்டாலே சட்டென்று ஓடி வருகிறார்கள் ஒடிடி ஆசாமிகள்,
சமீபத்தில் மும்பையில் இருந்து பறந்து வந்த ஒடிடி நிறுவன பிரதிநிதிகள் சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி முகாமிட்டு வருகின்றன. தென்னிந்திய சந்தையில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு சமீபகாலமாக கிடைத்துவரும் வரவேற்பை பார்த்துதான் இந்த முடிவு என்கிறது ஒடிடி தரப்பு.
இதில் முதலில் அறுவடை செய்திருப்பவர் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன். புஷ்பா 2 படத்திற்கான ஒடிடி உரிமையை பெரும் தொகைக்கு இப்பொழுதே வியாபாரம் பேச ஒடிடி நிறுவனங்கள் மும்முர காட்ட, தனது சம்பளத்தை 90 கோடி என ராக்கெட் வேகத்தில் ஏற்றி இருப்பதாகவும், படத்தின் வியாபாரத்தில் பங்கும் வேண்டுமென கேட்பதாகவும் சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால் 100 கோடியை எட்டிவிடும் அல்லு அர்ஜூனின் சம்பளம்.
இந்த விஷயத்தைக் கேட்ட தயாரிப்பாளர்கள் கலவரத்தில் இருக்கிறார்கள். ஒடிடி -யில் நல்ல விலைக்கு கேட்பதால் இவர்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்கள். ஆனால் அடுத்தப் படங்களுக்கும் இதே சம்பளத்தை ஹீரோக்கள் கேட்டால் எப்படி படம் தயாரிப்பது என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.
சந்தடிசாக்கில் 18 கோடி சம்பளம் வாங்கிய புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாரும் தற்போது 50 கோடி கேட்கிறாராம். அட தேவுடா!
மாதவனால் சூர்யாவுக்கு கிடைத்த ஹிட்!
சூர்யாவின் சினிமா வாழ்க்கை பயணத்தில் தவிர்க்க முடியாத முக்கிய படங்களில் ஒன்று ‘கஜினி’.
ஸ்டைலாகவும், மிரட்டலாகவும் நடிப்பதற்கான வாய்ப்பை சூர்யாவுக்கு உருவாக்கி கொடுத்த ஸ்கிரிப்ட் என்பதால் அப்படம் சூர்யாவின் ஆல்டைம் ஃபேவரிட் படங்கள் வரிசையில் இதற்கும் இடமுண்டு.
உண்மையில் இப்படத்தில் சஞ்சய் ராமசாமியாக நடிக்க வேண்டியவர் அப்பொதெல்லாம் சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவன். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ‘கஜினி’ கதையை மாதவனிடம் சொல்ல, உற்சாகமாக கேட்டிருக்கிறார். முதல்பாதியில் இம்ப்ரஸ் ஆன மாதவனுக்கு இரண்டாம் பாதி செட்டாகவில்லை.
’இரண்டாம் பாதியுடன் என்னை இணைத்துப் பார்க்க முடியவில்லை’ என்று தன்னை தேடிவந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். ’கதை எனக்கு செட்டாகல. வேற யாரையாவது வைத்து பண்ணுங்களேன்’ என்றும் சொல்லி ஒதுங்கிவிட்டார்.
அந்த ஸ்கிரிப்டை கேட்ட சூர்யா சட்டென்று ஓகே சொல்ல, ‘கஜினி’ படம் தயாரானது. வசூலில் பட்டையக் கிளப்பியது.