முன்பெல்லாம் மருத்துவம் மற்றும் இஞ்ஜினீயரிங் கல்லூரி சீட்டுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள்தான் மாணவர்களை விழி பிதுங்க வைக்கும். ஆனால் இப்போது கலைக் கல்லூரிகளில் படிக்கவே மாணவர்களின் விழி பிதுங்குகிறது. சென்னையில் உள்ள முன்னணி கல்லூரிகளில் பி.காம். படிப்பதற்கான முதல் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல கல்லூரிகளில் இதற்கான கட் ஆஃப் மதிப்பெண் 99 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.
பொதுவாக பிளஸ் 2-வில் அறிவியல் மற்றும் கணக்கை முதன்மை பாடங்களாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இஞ்ஜினீயரிங் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதில் இடம் கிடைக்காவிட்டால் அறிவியல் சார்ந்த வேறு பல்வேறு படிப்புகளைப் படிக்க அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிளஸ் 2-ல் காமர்ஸ் மற்றும் அக்கவுண்டென்சியை முக்கிய பாடங்களாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் முக்கிய தேர்வாக பி.காம் மட்டுமே உள்ளது அதனால் ஒவ்வொரு ஆண்டிலும் இந்த படிப்புக்கான கட் ஆஃப் எகிறி வருகிறது.
இந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 தேர்வில் காமர்ஸ் பாடத்தில் ஏராளமான மாணவர்கள் சென்டம் எடுத்துள்ள நிலையில் சென்னையின் முன்னணி கல்லூரிகளில் பி.காம் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் எகிறியுள்ளது.
இதன்படி சென்னையின் முன்னணி முன்னணி கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 99.75-ஆக உள்ளது.
மொழிப்பாடங்களைத் தவிர்த்த மற்ற 4 பாடங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இந்த கட் ஆஃப் கணக்கிடப்படுகிறது.
சென்னையில் உள்ள மற்றொரு முன்னணி கல்லூரியான வைஷ்ணவா கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 99.25-ஆக உள்ளது. இதன்படி இக்கல்லூரியில் முதல் லிஸ்டில் சீட் வாங்க ஒரு மாணவர் 400-க்கு குறைந்தது 397 மதிப்பெண்களை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில் முதல் லிஸ்ட்டில் பி.சி மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் சீட் பெற 380 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் மற்ற பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் அதிகரித்துள்ளன.
கட் ஆஃப் அதிகரித்துள்ள அதே நேரத்தில் இக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வைஷ்ணவா கல்லூரியில் மொத்தமுள்ள 495 இடங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு கல்லூரியான குரு நானக் காலேஜில் கட் ஆஃப் மதிப்பெண் 97 சதவீதமாக உள்ளது.
மாணவிகளுக்கு மட்டுமாக நடத்தப்படும் கல்லூரிகளிலும் இதே நிலைதான் உள்ளது. உதாரணமாக விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் 99 சதவீதமாகவும், பிசி மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான கட் ஆஃப் 98 மற்றும் 97 சதவீதமாகவும் உள்ளது. எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் 99.75 சதவீதமாக உள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மட்டுமே வந்துள்ள நிலையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த தேர்வு முடிவுகளும் வந்தால் கல்லூரிகளில் சீட் கிடைப்பது இன்னும் கடினமாகும் சூழல் உள்ளது.
இந்தச் சூழலில் தங்களுக்கு ரிசல்ட் வரும் முன்பே கல்லூரிகளில் சீட்கள் நிரப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்சி மாணவர்கள் உள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகங்கள் சார்பில், அவர்களுக்கான இடங்கள் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மதிப்பெண்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் லட்சங்களை கட்டணமாக வாங்கிக்கொண்டு சில தனியார் பள்ளிகள் சீட்களை ஒதுக்கி வருகின்றன. பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சீட் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அவர்கள் கேட்கும் பணத்தைக் கட்டிவிடுகின்றனர். இதனால் பல கல்லூரிகளில் எம்பிபிஎஸ், இஞ்ஜினீயரிங் படிப்புக்கு நிகராக பிகாம் படிப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிரது.