No menu items!

நியூஸ் அப்டேட்: தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு

நியூஸ் அப்டேட்: தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ. பன்னீர்செல்வத்தை பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தையும் மீறி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். இந்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்று பொதுக்குழு கூட்டம் முடிந்ததுமே, அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அதில், “அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 97 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்; கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது” என்றும் வலியுறுத்தபட்டுள்ளது.

இந்த இரு தரப்பினர் மனுக்கள் மேல் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்துதான் அதிமுகவின் எதிர்காலமும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் எதிர்காலமும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி .பி.எஸ் முறையீடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று கடுமையாக மோதிக்கொண்டனர். இதனையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார். அவரது முறையீட்டை ஏற்று நாளை விசாரிப்பதாக நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

சசிகலாவுக்காக ரூ. 1,600 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய தொழிலதிபர்கள் 14 பேரும் பினாமிகள்தான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வி.கே. சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் 2017-ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் ரூ.1,600 கோடி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்  மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே. தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, ஓஎம்ஆர்  சாலையில் உள்ள மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதையடுத்து, அவர்கள் மீது பினாமி சட்டமும் பாய்ந்தது.

இதை எதிர்த்து வி.எஸ்.ஜே. தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் அனைத்து மனுகளையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

துபாய் தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்ச: நள்ளிரவில் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்

ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், இலங்கை முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றார். இதற்காக நேற்று (11-07-2022) நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்சே வந்ததைப் பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். மேலும், அவர் வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.

பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று பலரும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, பசில் விமானத்தில் செல்வதற்கும் அவரது பயண நடைமுறையை நிறைவேற்றுதவற்கும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக பசில் மீண்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றார்.

ஒகேனக்கலில் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்த நீர்வரத்து: செந்நிறமாக மாறிய காவிரி

கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளான கபினி, கேஆர்எஸ் ஆகியவற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.  இவ்விரு அணைகளும் விரைவாக நிரம்பத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு கருதி காவிரியாற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது சூழலுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து காவிரியாற்றில் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. புதிய நீர்வரத்தால் காவிரி செந்நிறமாக காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...