ஹேப்பியா இருக்கணும் இதுதான் மனித வாழ்க்கையின் முக்கிய இலக்கு. மகிழ்ச்சியா இருக்கிறதுக்கு பல முயற்சிகளை எடுக்கிறோம். ஆனா வெற்றி கிடைக்கிறதில்லை.
மகிழ்ச்சின்றது ஒண்ணுமில்லை. ஹார்மோன்கள் என்கிறார்கள் அறிவியலாளர்கள். நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்தாம் நாம் மகிழ்ச்சியாக இருப்பதை தீர்மானிக்கின்றன.
போயஸ் கார்டனில் வீடு, பிஎம்டபுள்யு கார், பாங்க் அக்கவுண்ட்டில் ஏராளமான பணம் இருந்தாலும் இந்த ஹார்மோன்கள் நாம் உடலில் சுரக்காவிட்டால் மகிழ்ச்சி உணர்வு நமக்கு வராது என்கிறார்கள்.
நாள் முழுவதும் நமது உடலில் ஹார்மோன்கள் சுரந்துக் கொண்டே இருக்கின்றன. சில சமயம் அதிகமாய் சுரக்கும் சில சமயம் குறைவாக சுரக்கும். ஹார்மோன்கள் என்பது கெமிக்கல்கள்தாம். உடலிலுள்ள சுரப்பிகள் இந்த ஹார்மோன்களை சுரந்து உடலின் பல பாகங்களுக்கு அனுப்பி உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. நமது உடலில் பலவிதமான ஹார்மோன்கள் 24 மணி நேரமும் சுரந்துக் கொண்டே இருக்கும். உதாரணமாய் கார்டிசால் என்றொரு ஹார்மோன் இருக்கிறது. இது காலை நேரத்தில் அதிகமாய் சுரந்து நம்மை விழிக்க வைக்கும் சுறுசுறுப்பாய் வைக்கும். மெலடோனின் என்று மற்றொரு ஹார்மோன் இருக்கிறது. இது இரவு நேரத்தில் சுரந்து நம்மை தூக்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நமது உடலில் மாயவித்தைகள் செய்வது இந்த ஹார்மோன்கள்தாம்.
மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஹார்மோன்கள் காரணமாக இருக்கின்றன.
அந்த நான்கு மகிழ்ச்சி ஹார்மோன்கள் இவைதான்:
செரொடோனின் (Serotonin): இந்த ஹார்மோன் நமக்கு முக்கியமான ஹார்மோன். இதுதான் நமக்கு மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த ஹார்மோன் குறைந்தால் நமக்கு எரிச்சல் அதிகரிக்கும் தேவையில்லாமல் எரிச்சல், கோபம் வரும். களைப்பு அதிகரிக்கும். அதனால் உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். அதனால் இந்த ஹார்மோனை சரியா அளவு வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதிகம் சுரந்தாலும் சிக்கல்தான். வேறு பிரச்சினைகளில் கொண்டு சென்றுவிடும். இந்த ஹார்மோன் நமது குடல்களில் சுரக்கிறது. வயிற்றுப் பிரச்சினைகள் இருக்கும்போது நமக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது இதனால்தான்.
இந்த ஹார்மோன் நல்ல அளவில் சுரக்க சரியான உணவுகளை சாப்பிட வேண்டும். நார்சத்து அதிமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. உணவுப் பழக்கம் சீராக இருந்தால் இந்த ஹார்மோனும் சீராக இருக்கும். நமது மனநிலையும் சீராக இருக்கும். சூரிய ஒளியும் முக்கியம். இளம் வெயிலில் நடப்பது இந்த ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும்.
ஆக்சிடோசின் (Oxytocin): அன்பையும் காதலையும் அதிகரிக்கும் ஹார்மோன் என்று இதை கூறுகிறார்கள். இந்த ஹார்மோன்கள் சீராக இருந்தால் நமது மனம் நேச உணர்வுகளால் சூழ்ந்திருக்கும் என்று ஆய்வுகளில் கண்டறிந்திருக்கிறார்கள். படபடப்பு, மன அழுத்தம் குறைந்து மனம் முழுவதும் நல் உணர்வுகளால் நிரப்பப்படும். ஒருவரை கட்டியணைக்கும்போதும் முத்தமிடும்போது இந்த ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள். வளர்ப்பு பிராணிகளுடன் கொஞ்சி விளையாடும்போது இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் முன் மூளைப் பகுதியில் சுரக்கிறது.
ஆதரவான அணைப்பு, பாசத்துடன் ஒரு புன்னகை, அன்பான முத்தங்கள் இவையெல்லாம் ஆக்சிடோசின் சுரக்க உதவுகின்றன. எனவே அன்பை வளர்ப்போம்.
டோப்பாமைன் (Dopamine): இந்த ஹார்மோன் நமக்கு நல்லுணர்வுகளை தரும் ஹார்மோன். இந்த ஹார்மோன்கள் குறைந்தால் வாழ்க்கையே வெறுத்துப் போன உணர்வு வரும். எதையும் செய்யப் பிடிக்காது. யார் மீதும் நம்பிக்கை வராது. மனச் சோர்வு அதிகரிக்கும். அதனால் இந்த ஹார்மோனை சீராக வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த ஹார்மோன்கள் மிக அதிகமாகினாலும் ஆபத்து. மனம் முரடனாக மாறும். வேகம் அதிகரிக்கும். வன்முறையை நாடும். அதனால் இந்த ஹார்மோனை சீராக வைத்திருக்க வேண்டும்.
புரோட்டின் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதும் நல்ல தூக்கமும் இந்த ஹார்மோனை சீராக வைத்திருக்க உதவும்.
எண்டோர்ஃபின்ஸ் (Endorphins): உடல் வலிகளை குறைப்பதும் மறைப்பதும் இந்த ஹார்மோன்கள்தாம். நமது உடலில் ஏற்பட்டதும் வலியை குறைப்பதற்கு நமது உடல் இந்த ஹார்மோன்களைதான் வெளியிடுகிறது. மூளையில் சுரக்கும் எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோன் நமது மன நிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் நமது உடலில் ஒரு உற்சாகம் வரும் அதற்கு காரணம் இந்த ஹார்மோன்கள்தாம். உடல் உழைப்பின்போது அதிகம் சுரக்கும். நம்மை களைப்பு தெரியாமல் பார்த்துக் கொள்ளும். நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சி போன்றவை இந்த ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ளும்.