No menu items!

மிஸ் ரகசியா – பாஜக குறிவைக்கும் 8 எம்எல்ஏக்கள்

மிஸ் ரகசியா – பாஜக குறிவைக்கும் 8 எம்எல்ஏக்கள்

“இந்தக் கட்சிக்காரங்களால எப்பவும் தொல்லைதான். ஜனங்களோட கஷ்டங்களை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தார் ரகசியா.

“உள்ள நுழையும்போதே புலம்பல். என்னாச்சு?”

“வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்தும் உண்ணாவிரதத்தால செம ட்ராஃபிக் ஜாம். ஜாம்ல மாட்டுன அத்தனை பேரும் புலம்பல்தான்.”

“பாஜக உண்ணாவிரதம் ட்ராஃபிக் ஜாம் ஏற்படுத்தற அளவு இருக்குனா கட்சி வளர்ந்துக்கிட்டு இருக்குங்கிறதைதானே காட்டுது. அண்ணாமலை கட்சியின் பலத்தைக் அதிகரிச்சுட்டு வர்றார்ங்கிறது உண்மைதானே?”

“அதுக்குத்தானே அமித்ஷா அவரை இங்க அனுப்பியிருக்கிறார். ஐதராபாத் செயற்குழுவுல பேசினதை கேட்டிருப்பீங்கல்ல. அடுத்த இலக்கு தமிழ்நாடு, கேரளானு லிஸ்ட் போட்டிருக்கிறார். லிஸ்ட் மட்டும் போடல அதுக்கேத்த நடவடிக்கைகளையும் எடுக்கிறார். தமிழ்நாடு முழுக்க உண்ணாவிரதம்கிறது பெரிய கட்சிகள் செய்யற போராட்டம். இப்ப பாஜக அதை செய்யுது.”

”மகாராஷ்டிரா மாடல்ல தமிழ்நாட்டுல ஆட்சி கவிழ்ப்பு நடக்கும்னு பாஜகவினர் பேசுறாங்களே. அமித்ஷா திட்டத்துல அதுவும் இருக்கா?”

“அதிமுக ரெண்டாகி நிக்கிறதால அதுக்கு வாய்ப்பு இருக்குன்னு பாஜகவினர் நினைக்கிறாங்க. ரெண்டு பேரும் பாஜக எடுக்கிற நடவடிக்கைகளுக்கு சப்போர்ட்டா இருப்பாங்கனு கணக்கு போடுறாங்க. 2021 சட்டப் பேரவைத் தேர்தல்ல திமுக இல்லாத மாற்றுக் கட்சிக் காரங்களும் உதயசூரியன் சின்னத்துல போட்டியிட்டாங்க. அவங்கள்ல 8 பேரை பாஜக குறி வச்சிருக்காங்க. அவங்களை வெளில இழுக்க முயற்சிகள் நடக்குதாம்”

“எட்டு பேர் வெளில வந்தா ஆட்சி எப்படி கவிழும்? கட்சித் தாவல் சட்டத்துல பதவி பறி போகும்ல?”

“கரெக்ட். ஆனா, திமுக கூட்டணிலருந்தும் எங்களால இத்தனை பேரை வெளில கொண்டு வர முடியும்னு காட்டினா அது அரசியல்ல பெரிய இமேஜைத் தரும்னு பாஜகவுக்கு யோசனை சொல்லியிருக்காங்க”

“இதை அமித்ஷா ஏத்துக்கிட்டாரா?”

“மத்திய உளவுத் துறையிடம் இது குறித்து விசாரிப்பு நடந்துருக்கு. அங்க தமிழ்நாட்டைப் பத்தி நல்லா தெரிஞ்ச ஒரு அதிகாரி இருந்துருக்காரு. மகாராஷ்டிரா மாதிரி இல்ல தமிழ்நாட்டு மக்கள். அவங்க ஆட்சி கவிழ்ப்பையெல்லாம் ரசிக்க மாட்டாங்கனு 1980-ல திமுகவுக்கு நடந்த தோல்வியை சொல்லியிருக்காரு. அது மட்டுமில்லாம இந்துத்வாவும் அங்க எடுபடாதுனு சொல்லியிருக்கார். தமிழ்நாட்டு மக்கள் கோயிலுக்குப் போவாங்க, சாமி கும்பிடுவாங்க ஆனா ஓட்டுப் போடும்போது அதை நினைக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாம இன்னைக்கு தமிழ்நாட்டு கோயில்கள்ல வயதானவர்கள் கூட்டம்தான் அதிகமா இருக்கு. இளைஞர்கள் அதிகம் கோயில்களுக்கு வருவதில்லை. அதுனால தமிழ்நாட்டுக்கு வேற திட்டம் தேவைனு சொல்லியிருக்காரு”

“அப்புறம்…”

“இப்ப அந்த அதிகாரி உளவுத் துறைல இல்லை. வேற டிப்பார்ட்மெண்டுக்கு மாத்திட்டாங்க” என்று சிரித்தாள் ரகசியா.

”அதிமுக ரெண்டாகிறதைப் பத்தி பாஜக அலட்டிக்கிற மாதிரி தெரியலையே? உடையட்டும்னு காத்திருக்காங்களா?”

“ஆமாம். 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக தலைமைல கூட்டணி. புதுச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17-ல் தாங்கள் போட்டியிட பாஜக திட்டமிட்டிருக்கு. இபிஎஸ் அணிக்கு 7 இடங்கள், ஓபிஎஸ் அணிக்கு 4 இடங்கள், தினகரனுக்கு 2, சசிகலாவுக்கு 1 என கோஷ்டிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப் போறாங்க. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போடும் கணக்கு இது. அதனால கமலாயம் குஷியா இருக்கு”

“பாஜகவுக்கு எல்லாம் அவங்க விரும்புனமாதிரி நடக்குதுபோல”

“எல்லாம்னு சொல்ல முடியாது. அங்கேயும் அதிருப்திகள் இருக்கு. வெங்கையா நாயுடு ரொம்ப அப்செட்ல இருக்கார். சமீபத்துல அவர் பிறந்தநாள் வந்தது”

“ஆமா, சிஎம் கூட போய் பார்த்து வாழ்த்து சொன்னாரே?”

“ஆமா, அதுல ஒர் உள்குத்து அரசியல் இருக்கு. ஆளுநர் மாளிகையிலதான் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தங்கியிருந்தார். ஆனா அவருக்கு யாருமே வாழ்த்து சொல்லலையாம். பெரிய அளவுல எந்த ஏற்பாடும் நடக்கலையாம். ஏற்கெனவே தன்னை குடியரசுத் தலைவர் வேட்பாளாரா அறிவிக்கலங்கிற வருத்தமும் அவர் கிட்ட இருந்தது. அதையும் அவர்கிட்ட முறையா சொல்லலையாம். பதவில இருந்து ஓய்வுப் பெற்றதும் எந்த வீட்டுல தங்கப் போறிங்கனு ரெண்டு வீட்டை பாஜக தலைவர் நட்டா காட்டுனாராம். அப்பதான் தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இல்லைனு வெங்கையா நாயுடுக்கு தெரிஞ்சதாம். இப்படி அப்செட்ல இருந்தவரை முதல்வர் ஸ்டாலின் நேர்ல போய் பார்த்து வாழ்த்து சொன்னதுல ஏகப்பட்ட சந்தோஷமாம். சென்னைல உங்களுக்கு அரசு பங்களா ஏற்பாடு செய்யறேன்னு முதல்வர் அவர்கிட்ட கூறியிருக்கிறாராம்”

“வெங்கையா நாயுடுகிட்ட ஏன் திமுக நெருக்கம் காட்டுது”

“பாஜகவின் உள் அரசியல் தெரிந்தவர் வெங்கையா நாயுடு. டெல்லியில் அவருக்கு பெரிய தொடர்புகள் உண்டு. அதை திமுக பயன்படுத்திக்க நினைக்குது. இது ஒரு அரசியல் வியூகம்தான்.”

“எடப்பாடி நினைத்ததுபோல் திரௌபதி முர்முவை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அழைத்துவர முடியவில்லையே?”

“திரௌபதி முர்முவுக்கு தலைமை கழகத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தணுங்கிறதுதான் எடப்பாடியோட ஆசையா இருந்துச்சு. ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு பாஜக சொல்லிடுச்சு. ‘மேடம் நிறைய மாநிலங்களுக்குப் போய் ஆதரவு திரட்ட வேண்டியிருக்கு. அதனால நமது கூட்டணி கட்சிகள் எல்லோரையும் நட்சத்திர ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு ஆகி இருக்குது’ன்னு சொல்லிட்டாங்களாம். இதனால அப்செட் ஆன எடப்பாடியை சமாதானப்படுத்தற வகையில முதலில் எடப்பாடி ஆதரவாளர்களை மேடைக்கு அழைச்ச பிறகு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வாய்ப்புத் தரப்பட்டது இதனால் எடப்பாடி சமாதானமாகிட்டாராம்.”

“அப்படின்னா எடப்பாடி அணிக்குத்தான் பாஜக முக்கியத்துவம் கொடுக்குதா?

“அப்படியும் சொல்ல முடியாது. அதிமுக உடையற வரைக்கும்தான் இந்த முக்கியத்துவம்லாம். அதுக்கப்புறம் எல்லோரும் ஒண்ணுதான்”

“ஓஹோ?”

“அதேநேரத்தில் அதிமுகவில் நிகழும் குழப்பங்களை ராகுல் காந்தி உன்னிப்பா கவனிச்சுட்டு வர்றார். அதிமுக எம்.பி. தம்பிதுரைகிட்ட இதுபற்றி கேட்டுத் தெரிஞ்சிருக்கார். உடனே ஒரு ஆங்கில ஊடகம் எடப்பாடியுடன் ராகுல் காந்தி பேசினார்னு செய்தி வெளியிட்டிடுச்சு. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்னுதான் மறுப்பு அறிக்கை வெளியிட வச்சிருக்கார் ராகுல் காந்தி.”

“நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகிட்டாரே? கோட நாடு கொலை கொள்ளை பற்றியெல்லாம் பேசியிருக்கிறாரே”

“அவர் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகியதற்கும் எடப்பாடி மீது அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியதற்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டுதல்தான் காரணம்னு சொல்றாங்க. அதேநேரத்தில் எடப்பாடி தரப்பிலேயே மருது அழகுராஜ் சொல்வதில் சில உண்மைகள் இருக்குதுங்கிறாங்களாம். குறிப்பா சேலம் இளங்கோவன் பத்தி அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மைதானேன்னு சேலம் மாவட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்றாங்களாம்.”

“அதிமுக உள்கட்சி மோதல் விஷயத்திலும் ஸ்டாலின் அதிக அக்கறை காட்டுறதா கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு ரகசிய உத்தரவு தலைமையிடம் இருந்து போயிருக்கிறது. அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலோர் எடப்பாடி – ஓபிஎஸ் அதிகார மோதலை அவ்வளவாக ரசிக்கவில்லை. இந்த இரு தலைவர்களும் வேண்டாம்ங்கிற மனநிலைக்கு வந்திருக்காங்க. அவங்களை பாரதிய ஜனதா பக்கம் போக விடக்கூடாது. அவங்ககிட்ட பேசி .அவங்களுக்கு தேவையானதை செய்து நம் கட்சிக்கு அழைச்சுட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. இதில் வடசென்னையில் அதிமுகவை கரைக்கும் வேலையை அமைச்சர் சேகர் பாபு ஆரம்பித்துவிட்டாராம்”
“அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது?”

“தடைவிதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் சொல்லியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தையே மலைபோல் நம்பியிருக்கிறார் ஓபிஎஸ். அதேநேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுக்குழுவுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எடப்பாடி தரப்பு. அது மட்டுமில்லாமல் இந்த முறை பொதுக் குழுவுக்கு அசைவ உணவு தடபுடலாக தயாரிக்கப்படுமாம். கடந்த முறை சைவ உணவு பறிமாறப்பட்டதில் கட்சியினருக்கு ஏக வருத்தமாம். அதனால் இந்த முறை அனைத்தும் உள்ள அசைவம்”

“சாப்பாடா இப்ப முக்கியம். கட்சிதானே முக்கியம். அதை கவனிக்கிறதை விட்டுவிட்டு சாப்பாட்டுல கவனம் செலுத்துறாங்களே”

“சாப்பாடுதானே முக்கியம். அதுக்காகதானே எல்லோரும் ஓடிக்கிட்டு இருக்கிறோம். இன்னொரு செய்தி சொல்றேன் கேட்டுக்கங்க. இந்த முறை எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் தமிழில் ஃபெயிலாகியிருக்கிறார்கள். இத்தனை மாணவர்கள் தோல்வியுற்றதில் சதி இருக்கலாம்னு ரகசிய விசாரணை நடக்கிறதாம்”

‘ஃபெயிலானதுல என்ன விசாரணை”

“கொரோனாவுக்குப் பிறகு நடக்கும் பொதுத் தேர்வு என்பதால் இந்த முறை எளிமையாக திருத்த வேண்டும், ஃபெயிலாக்க கூடாது என்ற உத்தரவுகள் இருந்தும் இத்தனை பேர் தமிழில் ஃபெயிலானது அரசுக்கு மர்மமாகவே இருக்கிறது. உள்ளடி வேலை நடந்து திமுக ஆட்சியில் தமிழில் இத்தனை பேர் தோல்வி என்ற பிம்பத்தை கட்டமைக்க நடத்தப்பட்ட சதியா என்று விசாரிக்கப்படுகிறது” என்று நமது கேள்விக்கு காத்திராமல் கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...