அந்தமான் கடலில் திங்கள்கிழமை காலை 5.42 மணி முதல் 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் இன்று காலை தெரிவித்தது. இதில் போர்ட் பிளேயருக்கு கிழக்கு – தென்கிழக்கே 215 கி.மீ தொலைவில் காலை 5.57 மணிக்கு ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரியது.
முன்னதாக, கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 02-07-2022 அன்று மதியம் 1.25 மணியளவில் விஜயநகருக்கு அருகே 2.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானது. இந்நிலையில், அசாமில் இன்று காலை 11.03 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த தொடர் நில அதிர்வுகள் ஒரு பெரும் நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, “இந்த வகையான நிலநடுக்கம் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. பெரும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, சேதம் ஏற்படவும் வாய்ப்பு குறைவு” என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் மனோஜ் ராஜன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் மீண்டும் வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு, ஓ.பன்னீர்செல்வம் இன்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தனக்கு நேற்று மாலைதான் அழைப்பு வந்ததாகவும் முறைப்படி பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மேலும் 10 நாள் தாமதமாக வெளியாகும் என தகவல்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் 10 நாள் தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assessment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யூ டியூப், ஃபேஸ்புக் வருமானத்துக்கும் இனி வரி: புதிய விதி அமல்
சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள் ஈட்டும் வருமானத்திற்கு இனி 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும், “சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் பிரபலம், தங்கள் பக்கத்தில் ஒரு நிறுவனத்தின் பொருளை விளம்பரம் செய்யும்போது, அதற்கு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையோ அல்லது அதே பொருளை இலவசமாகவோ அந்த நிறுவனம் வழங்கும். அவ்வாறு கொடுக்கப்படும் பொருளுக்கு வரி செலுத்தமாட்டார்கள். ஆனால், இனி அவ்வாறு வழங்கப்படும் பொருளோ தொகையோ ரூ.20,000க்கு மேலாக இருந்தால் முறையாக 10% TDS வரி செலுத்த வேண்டும்” என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
காரைக்காலில் காலரா இல்லை; வயிற்றுப் போக்கால்தான் பாதிப்பு – அமைச்சர் தகவல்
காரைக்காலில் காலரா பரவி வருவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் காரைக்காலில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”காரைக்காலில் காலராவால் அதிகம் பேர் பாதிக்கப்படவில்லை. வயிற்றுபோக்கு பாதிப்பில் 700 பேர் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த வாரங்களில் தினசரி 15 முதல் 20 பேர் வரை வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு, தனியார் தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு, மாம்பழ சீசன் ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். தற்போது ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்ததால் நோய்த்தொற்றும் நோயாளிகள் வருகையும் குறைந்துள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலப்பு போன்றவை சரி செய்யப்பட்டுள்ளது. அதனால் அச்சம் தேவையில்லை. ஓரிரு நாளில் காரைக்கால் நிலைமை சீரடையும்” என்று கூறினார்.