நம்மூர் விஜய்க்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம். அதாவது தெலுங்கில் டப் செய்யப்படும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருக்கும்.
இதனாலேயே தெலுங்கு மார்க்கெட்டையும் பிடிக்கும் எண்ணத்தில்தான் ‘வாரிசு’ படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒரு வகையில் அவருக்கு நேரடி தெலுங்குப்படமும் கூட.
தற்போது ‘வாரிசு’ படத்தின் கதை இதுதான் என ஒரு பேச்சு உலா வர ஆரம்பித்திருக்கிறது.
‘ஊருக்கு பெரிய மனிதர். பெரும் மதிப்புமிக்க நிறுவனத்தின் அதிபர். திடீரென ஒரு நாள் அவர் கொல்லப்படுகிறார். இதனால் பரபரப்பாகும் அந்நிறுவன் ஊழியர்கள், போர்ட் மீட்டிங்கை வைக்கிறார்கள். என்ன செய்வதென்று விவாதிக்கிறார்கள்.
அந்நிறுவன அதிபருக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவனை வெளியுலகிற்கு காட்ட அவர் விரும்பவில்லை என்ற ரகசியம் செகரட்டரிக்கும் மட்டும், தெரியும். பேச்சுவாக்கில் இது கசிய, வாரிசை தேடிப் போகிறார்கள். எல்லோருக்கும் உதவும் ஹீரோ, ஹீரோயினை ஒரு பிரச்சினையில் இருந்து காப்பாற்றுகிறார். அங்கே அவரை தேடி வருகிறது ஒரு டீம். அதற்கு பின்னால் அவர் எப்படி வாரிசாக சாதிக்கிறார் என்பதே கதை’ என்கிறார்கள்.
உண்மையில் இப்படியொரு கதையுடன் ’லார்க்கோ வின்ச்’ [Largo Winch] என்ற ப்ரெஞ்சு மொழிப்படம் 2008-ல் வெளியானது. இதன் கதையைதான் அடிப்படை ஒன் லைன்னாக வைத்து வாரிசு படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாக கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்படத்தின் விளம்பர போஸ்டரைதான் விஜய் நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக இருந்த யோகன் அத்தியாயம் ஒன்று படத்திற்கும் பயன்படுத்தி இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.
புஷ்பாவுக்கு வில்லன் விஜய் சேதுபதி??
தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாகி கடைசியில் வில்லனாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி.
சமீபகாலமாகவே அவர் ஹீரோவாக நடித்தப்படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு வில்லனாக அவர் நடித்தப் படங்கள் மட்டுமே வசூலைக் குவித்திருக்கின்றன. இதற்கு விஜய் சேதுபதி காரணமா என்ற ஆராய்ச்சியில் தமிழ் சினிமாவின் வியாபாரத்தை ட்விட்டர் மூலம் ஆராய்ச்சி செய்யும் யாரும் நல்லவேளையாக இறங்கவில்லை.
தற்போது லேட்டஸ்ட் டாபிக் என்னவென்றால், பெரும் வரவேற்பைப் பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற கிசுகிசுதான்.
புஷ்பா முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையினால் அவர் நடிக்க முடியாமல் போனது என்கிறார்கள். இரண்டாம் பாகம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்நேரத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.
இது குறித்து புஷ்பா படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆகஸ்ட்டில் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
அஸின், சமந்தா வழியில் ராஷ்மிகா மந்தானா!
தமிழ் சினிமாவில் ’சுட்டும் விழி சுடரே’ பாடலுக்கு அருமையாக ஆட்டம் போட்ட அஸினை ஞாபகம் இருக்கலாம்.
தமிழ் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த அஸின், பின்னர் ஹிந்தி சினிமாவுக்கு போக விரும்பினார், இதனால் சென்னையில் தனது தந்தை ஜோசப் தொட்டும்காலுடன் வீடு எடுத்து தங்கியவர் பின்னர் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றினார். அங்குள்ள ஏஜென்ஸி மூலம் கால்ஷீட் சமாச்சாரங்களை பார்த்து கொண்டார். இதற்கு கொஞ்சம் பலன் கிடைத்தது. ஆனால் இறுதியில் மும்பை தொழிலதிபரை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
இவரது பாணியை இப்போது கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான மண முறிவுக்குப் பின்னால் கிளாமரில் கிளர்ச்சியூட்டு சமந்தாவின் குறி இப்போது பாலிவுட்டில் விழுந்திருக்கிறது
இதனால் சமந்தா மூன்று கோடி மதிப்புள்ள ஃப்ளாட்டிற்கு குடிப்பெயர்ந்துள்ளார்.
அங்கிருந்தபடியே ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகளைத் தேடிப்பிடிப்பது. இதற்கிடையில் தமிழில் வாய்ப்புகள் வந்தால் மும்பையிலிருந்து வந்து நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம்.
இதே பாணியில் தற்போது ராஷ்மிக மந்தானாவும் இறங்கியிருக்கிறாராம். தனது அசிஸ்டெண்ட்கள் மூலமாக மும்பையில் தங்குவதற்கு ஃப்ளாட் தேடி கொண்டிருக்கிறாராம். அங்கேயே தங்கியிருந்து தான் தற்போது நடித்து வரும் ஹிந்திப்பட ஷூட்டிங்குக்கு போய் வர முடிவு செய்துள்ளாராம்.
நம்மூர் இயக்குநர்கள் கூப்பிட்டால் அவருக்கும் மட்டுமில்லாமல் அவரது அஸிஸ்டெண்ட்களுக்கும் ஃப்ளைட் டிக்கெட் போட்டு கொடுத்தால், பறந்து வந்துவிடுவார்.