போர் என்றாலோ, குண்டுவீச்சு என்றாலோ உடனடியாக நம் நினைவுக்கு வருவது வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்தான். ’நபாம் பெண்’ என்ற பெயரில் புகழ்பெற்றது இந்தப் படம். இந்தப் படம் இப்போது மீண்டும் பிரபலமாகியிருக்கிறது.
அது என்ன நபாம்?
வெடிகுண்டு வெடிப்பதற்கான ஒரு வித கெமிக்கல் கலவைதான் நபாம் (Napalm). வியட்நாம் போரின்போது அமெரிக்கா வீசிய ஒரு குண்டு இந்தச் சிறுமியைத் தாக்கி உடைகளில் தீப்பற்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறாள். அவள் மீது வீசப்பட்ட குண்டில் நபாம் இருந்ததால் அந்த சிறுமியை நபாம் சிறுமி என்று அழைக்கப்படுகிறாள்.
இப்போது அந்த பெண்ணுக்கு என்ன என்று கேட்கிறீர்களா?… அதைத் தெரிந்துகொள்ளும் முன் அந்த பெண் ஆடைகளை களைந்து ஓடிவந்த சம்பவத்துக்கான முழு காரணத்தையும் தெரிந்துகொள்வோம்…
உலகில் அதிக நாட்கள் நடந்த போர்களில் வியட்நாம் போரும் ஒன்று. 1955-ம் ஆண்டு தொடங்கிய இப்போர் 1975 வரை நீடித்தது. 1954-ல் பிரெஞ்சு ஆதிக்கத்தை வெற்றிகொண்ட வடக்கு வியட்நாமின் அரசு, அதன்பிறகு வடக்கு, தெற்கு என்று இரண்டாக பிரிந்து கிடந்த வியட்நாமை ஒன்றாக இணைக்க நினைத்தது. வடக்கு வியட்நாமின் இந்த முயற்சிக்கு கம்யூனிஸ நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெற்கு வியட்னாம், அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் உதவியுடன் வடக்கு வியட்நாமுக்கு எதிராக போரில் குதித்தது.
இப்போரில் 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இந்த போரின்போதுதான் நபாம் பெண்ணின் படம் எடுக்கப்பட்டது.
அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்பட நிபுணரான நிக் உட், சாய்கான் நகரத்துக்கு அருகே அமைந்துள்ள தரங் பாங் என்ற இடத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை எடுத்த தருணத்தைப் பற்றிக் கூறும் நிக் வுட், “வியட்நாம் போரின்போது தெற்கு வியட்நாமுக்காக போரிட்டுக்கொண்டிருந்த விமானப்படைகள் தவறுதலாக தங்கள் பகுதியில் உள்ள தரங் பாங் பகுதியில் குண்டு வீசிச் சென்றன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை நான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது நாங்கள் இருக்கும் பகுதியை நோக்கி மக்கள் பெருந்திரளாக ஓடிவந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, தன் உடலில் ஆடையே இல்லாமல் அலறி அடித்தபடி எங்களை நோக்கி ஓடிவந்தார். அவரது நிலை என்னை ஒருகணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னதான் வலியோ, அச்சமோ இருந்தாலும், ஒரு பெண்குழந்தை இப்படி ஆடையே இல்லாமல் ஓடி வருவாரா என்று ஒருகணம் அதிர்ந்து நின்றேன். அதேநேரத்தில் குண்டுவெடிப்பின் தீவிரத்தை இந்த காட்சி உலகம் முழுமைக்கும் விளக்கும் என்ற காரணத்தால் அவளைப் படம் பிடித்தேன்.
நான் படமெடுப்பதைப் பற்றியெல்லாம் அந்தப் பெண் கவலைப்படவே இல்லை.
‘உடலெல்லாம் கொதிக்கிறது, உடலெல்லாம் கொதிக்கிறது’ என்று மாறி மாறி சொன்னவாறே என்னை நெருங்கினார் அந்தப் பெண். அவளது முதுகைப் பார்த்தபோதுதான், அவரது விபரீத நிலை எனக்கு புரிந்தது. குண்டுவீச்சால் ஏற்பட்ட தாக்கத்தால், அவரது முதுகு முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட வலியைத் தங்க முடியாமல் அந்தப் பெண் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து, அந்தப் பெண்ணின் மீது கொட்டினேன். விசாரித்தபோது தனது பெயர் கிம் புக் என்று அந்தப் பெண் கூறினார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றேன். குண்டுவீச்சு காரணமாக அவரது உடலில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பிழைப்பது கடினம் என்றும் அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சக பத்திரிகையாளர்கள் சிலரின் உதவியுடன் அருகில் உள்ள அமெரிக்க சிகிச்சை மையம் ஒன்றில் அவரைச் சேர்த்தேன். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.
அன்றைய தினம் உட் எடுத்த புகைப்படம் ‘நபாம் பெண் என்ற தலைப்பில் நியூயர்க் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி புயலைக் கிளப்பியது.
அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோஷம் அதிகரித்தது. அமெரிக்காவின் மனசாட்சியை இப்படம் உலுக்கிய நிலையில், அந்த ஆண்டு இறுதியில் வியட்நாம் போரில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியது.
இந்த போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. அதே நேரத்தின் போரின் கோர முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிய இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
சரி இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.
50 ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அந்தப் பெண் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ‘கிம் புக் பான் டி’ என்ற அந்த பெண்ணின் உடலில் 65 சதவீதத்துக்கு அந்த குண்டுவெடிப்பால் காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் சிதைந்துபோன அவரது தோலை சரிசெய்யும் முயற்சியில் மருத்துவர்கள் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மியாமியில் உள்ள மருத்துவமனையில் அவரது தோலின் சுருக்கங்களை சரிசெய்வதற்கான அறுவைச் சிகிச்சை சமீபத்தில் நடந்துள்ளது.
போரின்போது நடந்த சம்பவங்களைப் பற்றி விளக்கியுள்ள பான் டி, “குண்டுவீச்சு நடந்தபோது நான் தெருவில் தோழிகளோடு விளையாடிக்கொண்டு இருந்தேன். திடீரென்று எங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் எங்களை பதுங்கு குழிக்குள் சென்று ஒளிந்து கொள்ளுமாறு எச்சரித்தனர். ஆனால் நாங்கள் சுதாரிப்பதற்கு முன் குண்டு விழுந்தது. என்னால் வெப்பத்தை தாங்க முடியவில்லை. உடைகளைக் களைந்துவிட்டு ஓடினேன்” என்கிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு தீக்காயத்துக்கான சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொடு வந்த பான் டி-க்கு கடந்த 5 ஆண்டுகளாக ஜில் வைபல் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதுவரை 11 லேசர் சிகிச்சைகளை மேற்கொண்ட இவருக்கு தற்போது 12-வது முறையாக லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.