No menu items!

கீர்த்தி சுரேஷ் – சாதனைப் பெண் சறுக்கியது எங்கே?

கீர்த்தி சுரேஷ் – சாதனைப் பெண் சறுக்கியது எங்கே?

அப்பாவித்தனமான முகம். கொஞ்சம் ஹஸ்கியான குரல். தமிழ் ரசிகர்களுக்கே பிடித்த மாதிரி அளவான எடை. அதற்கேற்ற உடை. கூடவே திறமை. இதுதான் ஆரம்பகால கீர்த்தி சுரேஷ்.

கடுமையான கதாநாயகிகள் பஞ்சத்தில் தவித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு தீனிப்போடும் ’ப்ரோட்டீன் ரிச்’ நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

’ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்ற ’உன் மேல ஒரு கண்ணு’ பாடலில் தனது புருவத்தை உயர்த்தி, காதலுடன் கிறங்கடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் இளைஞர்களின் ஹாட் கிரஷ்.

அறிமுகமானது முதலே இவரது சினிமா க்ராப், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாதையைப் போல ஜிவ்வென்று உயர்ந்தது.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ ஹிட். மீண்டும் எஸ்.கே உடன் சேர்ந்து நடித்த ‘ரெமோ’ ஹிட். இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இவர்களுடன் நடிக்கும் போது வளர்ந்து வரும் ஒரு நடிகையைப் போலவேதான் இருந்தார்.

ஆனால் விஜயுடன் ‘பைரவா’ படத்தில் கமிட்டானதும், கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் விஷயங்களில் கெடுபிடிகள் கொஞ்சம் அதிகமானது. இரண்டாம் கட்ட கமர்ஷியல் கதாநாயகர்களுடன் நடித்தவர் தமிழ் சினிமாவின் உச்ச கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவரான விஜயுடன் நடிக்க ஆரம்பித்ததுமே, பல ஹிட்களை கொடுத்த வளர்ந்த நடிகையைப் போலவே மாறி போயிருந்தார்.

இந்த நேரத்தில் தெலுங்கிலும் வாய்ப்புகள் வர, அங்கே ’நான் ஈ’ புகழ் நானியுடன் ஜோடி சேர்ந்த ‘நேனு லோக்கல்’ படமும் ஹிட்டாக, தெலுங்கிலும் பிஸியானார்.

மீண்டும் தெலுங்கில் இவர் நடித்த சாவித்திரியின் பயோபிக் படமான ‘மகாநடி’ அனைவரது வரவேற்பையும் பெற்றது. தேசிய விருதும் கிடைத்தது. இந்த ஒரே படத்தினால் இனி கதாநாயகியை மையமாக கொண்ட, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பார் என கீர்த்தி சுரேஷின் தரப்பிலிருந்து கால்ஷீட் கேட்பவர்களிடம் சொல்லப்பட்டது.

அதேநேரம் டாப் கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் கிடைத்தது. இரண்டாம் கட்ட ஹீரோக்களுக்கு டேட்ஸ் இல்லை. அடுத்தப்படத்தில் பார்க்கலாம் என்று நாசூக்காக நழுவியது கீர்த்தி தரப்பு.

ஆரம்ப கால நட்புக்காக ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்தவர், அடுத்து எஸ்.கே. பக்கம் திரும்பவே இல்லை. காரணம் ‘சர்கார்’ படம். தனது பள்ளிப்பருவ கனவு ஹீரோவான விஜயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்ததும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் கூட எளிதில் பேச முடியாத தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு ரவுண்ட் வந்தது போதும். ஹிந்தியிலும் ஒரு கை பார்க்கலாம் என்று அவர் அன்று எடுத்த முடிவுதான் கீர்த்தி சுரேஷின் சினிமா க்ராஃபில் எதிர்பாராத ட்ராப் உண்டாக காரணமாயிற்று.

இதற்கிடையில் ஹீரோயினை மையமாக கொண்ட ‘பென்குயின்’ படம் ஒடிடி-யில் வெளியானது. ஆனால் வரவேற்பை பெறவில்லை. அடுத்து ஹிந்தியில் டீக்கடை அதிபராக நடித்த ‘மிஸ். இந்தியா’வும் ஆறிப் போன டீயைப் போல ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போனது.

ஹிந்தியை டார்க்கெட் செய்த கீர்த்திக்கு மார்கெட் மேலும் டல்லாக, காரணம் பாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘சைஸ் ஸீரோ’ கலாச்சாரம். குல்ஃபி ஐஸை போல் இருப்பவர்கள், குல்ஃபி குறைந்தால் மீதியிருக்கும் குச்சியைப் போல மாறும் பரிதாபத்தில் கீர்த்தியும் சிக்கினார்.

இதனால் அஜய் தேவ்கனுடன் ‘மைதான்’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் இழந்தார். ஹிந்தி கனவு கலைந்தது. மும்பையில் தங்கிய ஃப்ளாட்டை காலி செய்து கொண்டு, நம்மூர் பக்கம் வந்தவரை, இங்கே உள்ளவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவு எடை குறைந்து, மெலிந்திருந்தார்.

வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் என்று நினைத்த இந்த எடைக்குறைப்பு, காலை வாரி விட, பழையபடி தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.

பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் கூட, பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்கும் அதில் கமிட்டாகலாம் என அவரது மேனேஜர் தரப்பு வந்தவர்களிடம் கால்ஷீட் இல்லை என்று தேடிவ் வந்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷை தேடி வந்தது. அடுத்து தற்போது ஒடிடி-யில் வெளியானதால் இந்தியா முழுவதும் பெரிது பேசப்பட்ட ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் எதிலும் கமிட்டாகவில்லை. காரணம் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம்.

ரஜினியின் ஜோடியாக இல்லாவிட்டாலும், ரஜினி படத்தில் நடித்தால் இழந்த மவுசை திரும்ப பெற்றுவிடலாம் என்று போட்ட கால்குலேஷன், கீர்த்தியின் சினிமா கேரியரை மீண்டும் இன்குபேஷன் நிலைக்குத் தள்ளிவிட்டது.

பெரும் பெயரை பெற்றுத்தரும் என்று நினைத்த ‘சாணி காயிதம்’, கமர்ஷியலாக நம்பர் ஒன் நடிகையாக பெயரெடுக்கலாம் என்று நினைத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சர்காரு வாரி பாட்டா’ என அடுத்தடுத்தப் படங்களும் கைகொடுக்கவில்லை.

இப்போது தன்னுடைய மார்க்கெட் நிலவரம் என்ன…இன்றைய ராஷ்மிகா மந்தானாக்கள் மத்தியில் தன்னுடைய இடம் என்ன… என்பது எதுவும் தெரியாமல் திணறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை இப்போது கையில் எடுத்திருக்கிறார்.

இப்போது இன்ஸ்டாக்ராமில் இதுவரை ’மறைத்து வைத்திருந்த’ அழகை எல்லாம் ’வெளிப்படையாக’ போட்டோ செஷனாக எடுத்து, ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்.

மளமளவென உயர்ந்த கீர்த்தி சுரேஷின் இன்றைய நிலைக்கு காரணம், அவரைச் சுற்றி இருந்தவர்கள் கொடுத்த தவறான வழிக்காட்டல்தான். என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆனால் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ஒர் இரவில், சிறுமியாக இருந்த கீர்த்தியிடம் அவரது அம்மா, ‘நான் தேசிய விருது எனக்கு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கல/’ என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அடுத்த விநாடியே, ‘கவலைப்படாதே அம்மா. உனக்காக ஒரு தேசிய விருது வாங்கித் தாரேன்’ என்றவர் கீர்த்தி சுரேஷ்.

அவர் தனது அம்மாவுக்கு கொடுத்த வாக்கை தனது நடிப்பின் மூலம் நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷூக்கு இதுவும் கடந்து போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...