முகமது நபி குறித்த கருத்துக்கு நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. அவர் நடந்து கொண்ட விதம் , அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது. உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான். டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு” என்றனர்.
கொரோனா பரவல் குறித்து முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது பற்றியும், அதைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 2,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கட்சிப் பொறுப்பை மாற்றிய இபிஎஸ்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, தனது கட்சிப் பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என்று ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார்.
தேசிய மருத்துவர்கள் தினம்; முதல்வர் வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதல்-மந்திரியாக உயர்ந்த டாக்டர் பி.சி.ராய் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம். பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவின் ரூ 15 கோடி சொத்துகள் முடக்கம்
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ 15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
இதன்படி சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததையடுத்து இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 உயர்வு
தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.856 உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கம் 8 கிராம் ரூ.41,472-க்கு விற்பனையாகிறது.