No menu items!

மகாபெரியவரும் முஸ்லீம் பெரியவரும் – வட இந்தியாவுக்கு ஒரு செய்தி

மகாபெரியவரும் முஸ்லீம் பெரியவரும் – வட இந்தியாவுக்கு ஒரு செய்தி

வடக்கே உதய்பூரில் நடந்த ‘கொலைக்கள’ நிகழ்ச்சி, நெஞ்சைப் பதற வைக்கிறது! வெள்ளையர் விதைத்த பிரித்தாளும் சூழ்ச்சியின் பலன் இன்னமும்! ‘நடக்கலாமா இப்படி” என்று ஒவ்வொரு இந்தியனின் இதயமும் வேதனையோடு துடிக்கிறதே!

சுதந்திரம் வந்தபோது நாடு துண்டாடப்பட்ட நிலையில் நிகழ்ந்த விபரீதங்களும், நவகாளியில் காந்தியடிகள் நடந்தும் உண்ணா நோன்பிருந்தும் கண்ணீர் சிந்தியும் அமைதி திரும்ப போராடிய காட்சிகள் நினைவில் வந்து வந்து போகின்றன! கருணை, ஒற்றுமை என்கிற காந்தி மகானின் கட்டளையை நாடு மறந்து விடலாமா?

அப்போது, வடக்கே வீசிய வெறுப்பு என்கிற ‘வாடைக்காற்று” தெற்கைத் தீண்டவில்லை ! தமிழ்நாடு ‘அன்பின் வழியது உயிர் நிலை” என்ற வள்ளுவன் வாக்கை புரிந்து கொண்டவர்கள் நிறைந்த பூமி. இங்கே மத வன்முறை தலை தூக்க வழி இல்லை!

பலபல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் காஞ்சி சங்கர மடத்தில் இரவில் தங்கும்படியாக ஆயிற்று. பொழுது விடியும் நேரம் அல்லாஹூ அக்பர்- இறைவனே உயர்ந்தவன் என்கிற தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலி காற்றில் தவழ்ந்து வந்தது.

மாடிப்படிகளில் ஓசை… மங்கிய ஒளியில் காவி உடை அசைந்தது. ‘மகா பெரியவர்” கிடுகிடு வென்று இறங்கி வருகிறார் ! அன்பே சிவமாக காட்சி! எம் மதத்தவரும் அவரிடம் நாடி வந்தார்களே !

உள்ளத்தை பண்படுத்தி வாழும் நெறியை செம்மைப்படுத்துவதே ‘மதம்” என்பதை உணர வைத்தவர் கம்பனை ரசித்த நீதிபதி மு.மு.இஸ்மாயில் காஞ்சி பெரியவரை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார் ! மகா பெரியவர் அவரிடம் வாஞ்சை காட்டினார் !

ஒரு காட்சி…

மகாபெரியவர், செங்கல்பட்டு பக்கமாக பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர், திடீர் என்று ஒரு கிராமத்துக்குள் திரும்புகிறார். ஊரே திடுக்கிட்டு திரண்டு அவரை வரவேற்றது. மகா பெரியவர் வேகமாக நடந்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து விட்டார். ஊர் பெரியவர்களை அழைத்து, ‘இந்தப் பகுதியில் ஒரு சிறிய சிவன் கோயில் இருக்க வேண்டுமே ? இருந்ததா?” என்று கேட்டார். யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை !

கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தயங்கித் தயங்கி நின்றார்.

‘வாருங்கள்… என்ன சொல்ல வேண்டும் !” என்று கேட்டார் மகாபெரியவர்

‘எனக்கு ஒரு காணி நிலம் உண்டு. நான் பயன்படுத்துவது இல்லை. கிணறு வெட்ட அங்கே தோண்டிய போது, சிலை உருவமும், கோயில் கோபுர அடையாளங்களும் தெரிந்தன. நிறுத்தி விட்டேன்… உங்களிடம் தெரிவிக்க காத்திருந்தேன்”… என்று அந்த முஸ்லீம் பெரியவர் குரல் கம்மியவாறு கூறினார் !

கூட்டம் சலசலத்தது. மகாபெரியவர் பேசாமல் இருக்க சொன்னார். அந்த இஸ்லாமியருடன் நடந்து சென்று, நிலத்தை அடைந்து தோண்டிய இடங்களை பார்வையிட்டார்.

‘சுவாமி! இந்த இடத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எனக்கு நிம்மதி!“ என்றார் அந்த முஸ்லீம் பெரியவர். கை குவித்தவாறு விடை பெற்றார்.

அந்த இடத்தை ஆழமாக, அகலமாகத் தோண்டத் தோண்ட சிவன் கோயில் கோபுரமும், நந்தியும், லிங்கமும் தென்பட்டன!

மாலை! அதே வீட்டுத் திண்ணையில் மகாபெரியவர் அமர்ந்திருக்க, சுற்றிலும் கூட்டம். ஊர் பெரியவர்களிடம் கோயிலை எழுப்புவது பற்றி, பூஜைகள் அதுவரை எப்படி என்பது பற்றி பேச்சு நடக்கிறது.

‘எல்லாம் சரி! அந்த நிலத்தை பொறுப்போடு நம்மிடம் ஒப்படைத்த பெரியவரை மறந்துவிட்டால் எப்படி! அவர் எங்கே”… என்றார் மகாபெரியவர்.

முஸ்லீம் பெரியவர் கடமை முடிந்துவிட்டது என்ற நினைப்போடு ஒதுங்கி போய்விட்டார் ! அவர் வீட்டுக்குச் சென்று அழைத்துவருமாறு கேட்டுக்கொண்டார் மகாபெரியவர்.

அழைத்து வந்தார்கள். முஸ்லீம் பெரியவர் ஒதுங்கியே நின்றார். அருகில் அழைத்த மகாபெரியவர் அவரைப் பற்றி முழுவிவரமும் கேட்டறிந்தார்.

‘நீங்கள் ‘ஹஜ்” யாத்திரை போயிருக்கிறீர்களா?” என்று கேட்டார் பெரியவர்.

‘இல்லை… வசதியும் வாய்ப்பும் கூடிவரவில்லை… இறைவன் எப்போது வழிகாட்டுகிறானோ!“ என்றார் முஸ்லீம் பெரியவர்.

‘இவருக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம் இந்த பெரியவர் ஹஜ் செல்ல உதவுவது நமது கடமை… நீங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வசூலித்து, அவர் வசதியாக ‘ஹஜ்” போய்வர எல்லா ஏற்பாடுகளும் செய்யுங்கள்… மடமும் உதவும்” என்றார் மகாபெரியவர்.

மகாபெரியவரின் உத்தரவு நிறைவேற்றப்படுகிறது. நமக்கு கற்றுத்தரும் நிரந்தர பாடம் இந்த உத்தரவு!

வெறுப்பு நிறைந்த வாடைக் காற்று வீசுவது நிற்கட்டும்

நமதான அன்புத் தென்றல் பொதிகை டூ இமயம் வரை வீசட்டும் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...