அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று ஒரு டாலர், 78 ரூபாய் 95 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. கிட்டதட்ட 79 ரூபாய். வரும் நாட்களில் இது மேலும் சரிய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு ஏறினால் சாமானியர்களுக்கு என்ன பாதிப்பு என்று இருந்துவிட முடியாது. டாலரின் ஏற்படும் மாற்றம் நாம் அன்றாடம் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை மாற்றத்தை கொண்டு வரக்கூடியது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதற்கு என்ன காரணம்?
நிதி ஆலோசகர் சோம. வள்ளியப்பனிடம் பேசினோம்.
‘‘கொரொனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து முழுமையாக மீள்வதற்குள் உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்தது. இதுவும் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. ஆனாலும், இக்காலகட்டத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரிய மாற்றமின்றி கட்டுக்குள் இருந்தது.
ஆனால், இதனிடையே அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவு விலைவாசி அதிகரித்தது. மே மாதத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் 8.6% ஆக இருந்தது.
பணவீக்கம் 8%க்கும் மேல் உயர்ந்ததால் அமெரிக்கா பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது. கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெடரல் வங்கி வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், பல்வேறு நாடுகளில் இருந்தும் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி தங்கள் முதலீடுகளை எடுத்து அங்கே முதலீடு செய்ய தொடங்கினார்கள். இந்தியாவில் இருந்தும் இப்படி தொடர்ந்து டாலர் வெளியேறியதால் டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு டாலர் மதிப்பு உயரத் தொடங்கியது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம்.
இதன் விளைவுகள் என்ன?
ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான மதிப்பை அவர்கள் டாலராக பெறுவார்கள். அப்படி பெற்ற டாலரை இந்திய ரூபாயாக மாற்றும்போது அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். இதுபோல் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்துக்கு அனுப்பும் பணத்தின் அளவும் அதிகரிக்கும்.
அதேநேரம் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது சுமை. அதாவது இறக்குமதி செய்யும் பொருளுக்கான மதிப்பை டாலரில்தான் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்நிலையில், டாலர் வாங்க இவர்கள் முன்பைவிட அதிக பணம் கொடுக்க வேண்டியதிருக்கும். வெளி சந்தையில் இருந்து நாம் வாங்கியுள்ள கடனுக்கு செலுத்தும் வட்டியும் அதிகரிக்கும்.
இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகம் என்பதால் ஒட்டுமொத்தமாக இது நமக்கு நஷ்டம்தான். உதாரணமாக 2021இல் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 420 பில்லியன் டாலர், இறக்குமதி மதிப்பு 612 பில்லியன் டாலர். ஏற்றுமதியைவிட இறக்குமதி 192 பில்லியன் டாலர் அதிகம். இந்த 192 பில்லியன் டாலரை வாங்க நாம் முன்பு கொடுத்த இந்திய ரூபாயைவிட இப்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும்.
ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நமது ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அதற்கு உடனே வாய்ப்பில்லை என்பதால் இந்திய அரசு கையில் இருக்கும் டாலரை விற்றால் மட்டும்தான் டாலர் மதிப்பு குறையும். ஆனால், அப்படி செய்தால் அரசின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும். எனவே, அரசு அந்த ரிஸ்கை எடுக்காது. எனவே, வரும் நாட்களில் டாலர் மதிப்பு இன்னும் ஏறத்தான் வாய்ப்புள்ளது.
சாமானிய மக்களை பாதிக்குமா?
நிச்சயம் பாதிக்கும். இந்திய ரூபாய் மதிப்பு குறைவது விலைவாசியை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக கச்சா எண்ணெயை நாம் அதிகம் இறக்குமதிதான் செய்கிறோம். இதற்கு டாலராக பணம் செலுத்துவதால், அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் அதனைத் தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும்” என்கிறார் சோம வள்ளியப்பன்.