No menu items!

ராக்கெட்ரி – சினிமா விமர்சனம்

ராக்கெட்ரி – சினிமா விமர்சனம்

எதற்காக பழி சுமத்தப்பட்டோம், யார் இந்த அவமானங்களுக்கெல்லாம் காரணம் என்பதை இன்றுவரை அறிந்து கொள்ள முடியாமல் வாழும் ஒரு இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கைதான் ’ராக்கெட்ரி’ படத்தின் கதை.

பொதுவாகவே ஒருவருடைய நிஜ வாழ்க்கையை பயோபிக் ஆக எடுப்பது என்பது சாலையில் மாஸ்க்குடன் இருமிக் கொண்டிருப்பவரை மாஸ்க்கை கழட்டி விட்டு நம்மைப் பார்த்து இரும சொல்வது போலதான். விமர்சன கலவரங்கள் அதிகமிருக்கும். அதிலும் உயிரோடு இருக்கும் ஒருவரின் பயோபிக் எடுக்கும் போது, அந்த ஆளுமையின் சாதி, மதம், குலம், பலம் என அனைத்தின் அடிப்படையில் விமர்சனங்கள் முன் வைக்கப்படும்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதைதானே. யாருடைய உதவியும் இல்லாமல், பல மைல்கள் நடந்து போய் கஷ்டப்பட்டு படித்து, வாழ்க்கையில் முன்னேறி, இந்தியாவிற்கு ராக்கெட்டை பறக்க விட்டிருப்பார்.

அதை கொஞ்சம் கமர்ஷியலாக ஆர். மாதவன் எடுத்திருப்பார் என்று போய் திரையரங்கில் போய் உட்கார்ந்தால், படத்தின் முன்பாதி James Bond ரகம், இரண்டாம் பாதி Family Bond பலம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு இயக்குநராகவும் களமிறங்கி இருக்கிறார் முன்னாள் சாக்லேட் பாயும் இன்றைய சாக்லேட் மேனுமான ஆர். மாதவன்.
நம்பி நாராயணனை, பிரபல திரை நட்சத்திரம் சூர்யா நேர்க்காணல் செய்வதில் இருந்து படம் தொடங்குகிறது. லிக்விட் ப்ரொபல்ஷன், ஹைட்ராலிக் சிஸ்டம், சாலிட் ஃப்யூயல், வைகிங் எஞ்ஜின், கேவிடி1 க்ரையோஜெனிக் எஞ்ஜின், ரிவியூ க்ரிட்டிக் டிசைன், என ராக்கெட்ரி சயின்ஸ் சமாச்சாரங்கள் அடுத்தடுத்து வருகின்றன.

அறிவியல் அடிப்படை கொஞ்சம் தெரிந்திருந்தால், மட்டுமே புரியும் காட்சிகள் என்பதால், திரையரங்கில் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் அமைதியும் நம்மோடு இருக்கையில் அமர்ந்து கொள்கிறது.

இரண்டாம் பாதியில் பழி சுமத்தப்படும் நம்பி நாராயணனும், அவரது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் அவமானங்களும், வலிகளும் நம்மையும் ஆக்ரமிப்பதுதான் ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்டின் பலம்.

நம்பி நாராயணன் ஒரு இஸ்ரோ விஞ்ஞானியாக ஆரம்பித்து, விக்ரம் சாராபாயின் சிஷ்யனாக வளர்ந்து, கலாமின் நண்பராக தடங்கள் கடந்து பயணிப்பதை அவரே சொல்வது போல வைத்திருப்பது டைரக்‌ஷன் டீமின் சாமர்த்தியம்.

படத்தின் மிகப்பெரும் பலம் மாதவன். ’அலைப்பாயுதே’, ’மின்னலே’ படங்களில் பார்த்து ரசித்த மாதவனா இது என ஆச்சர்யப்பட வைக்கிறார். அப்படியொரு பரிமாண மாற்றம். மாதவனின் திரை வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல். முன்பெல்லாம் இடுப்பசைவில் ரசிகர்களைக் கவர்ந்த சிம்ரன், இப்படத்தில் முக அசைவில் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். மாதவனின் மகளாக வரும் மீஷா கோஷலின் நடிப்புக்கு இப்படம் ஒரு துருப்புச்சீட்டு. உன்னியாக நடித்திருக்கும் சாம் மோகனும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்திருக்கும் சூர்யாவுக்கு ‘அப்ளாஸ்’ உத்திரவாதம்.

படத்தில் வசனம் ஆச்சர்யம். மாதவன் இப்படியும் கூட எழுதுவாரா யோசிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கண்ட பிறகு மாதவன் சொல்லும் ‘சின்னதா செஞ்சு பழக்கமில்ல’ என்ற வசனம் ஒரு கமர்ஷியல் டச்.

‘திறமைக்கு காசு. திமிர் ஃப்ரீ’, ‘விண்வெளிக்குப் போகாத ராக்கெட் தீபாவளி ராக்கெட்தான்’, ‘இந்தியன் ஹஸ்பெண்ட்ஸ் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சுப்போம்; மக்கள் தொகையை பார்த்தாலே தெரியும்’, ‘சயின்டிஸ்ட்கள் விநோதமானவங்க. ராக்கெட்டை பார்க்க தெரிஞ்சவங்களுக்கு, மனுஷங்களைப் பார்க்க தெரியல’ என ஆங்காங்கே ஒரு வசனத்தில் சபாஷ் வாங்கியிருக்கிறார் அறிமுக வசனகர்த்தா ஆர். மாதவன்.

சாம். சி.எஸ்.-ண் ஒரிஜினல் மியூசிக், சிர்ஷா ரேயின் ஒளிப்பதிவு, பிஜித் பாலாவின் படத்தொகுப்பு இந்த நம்பி எஃபெட்டுக்கு நன்றாகவே கைக்கொடுத்திருக்கின்றன.

குழந்தை இறந்ததைக் கூட சொல்லாமல் மறைத்து, மாதவன் மிஷனை வெற்றிகரமாக முடிக்கும் போது, குழந்தை இறந்து பல நாட்களாயிற்று என உன்னிக்கு தெரியவரும் அந்த காட்சி அத்தோடு முடிந்துவிட்டதாக நினைக்கும் போது, இரண்டாம் பாதியில் விசாரணையில் அடிப்பட்டு கிடக்கும் மாதவனிடம் ‘நீ உலகத்திலேயே ரொம்ப கெட்டவன்.

ஆனா உன்னோட தேசப்பற்றை யாராலும் சந்தேகிக்க முடியாது’ என்று உன்னி கண் கலங்கும் காட்சி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தின் ஆளுமையை அழுத்திச் சொல்லும் காட்சி.

முதல் பாதியில் வரும் ராக்கெட்ரி சயின்ஸ் சமாச்சாரங்களைக் கொஞ்சம் குறைத்து, நம்பி நாராயணனின் மீது சுமத்தப்பட்ட பழிக்குப் பின்னால் நடந்த பரபரப்பான சம்பவங்களை காட்டியிருந்தால், படம் ஒரு பரபரப்பான பயோபிக் ஆகியிருக்க கூடும்.

படத்தின் க்ளைமாக்ஸின் கடைசி பத்து நிமிடம், நம்பி நாராயணன் மீது ஒரு அலாதியான அன்பும், அக்கறையும் வர வைத்திருப்பதுதான் இந்த ராக்கெட்ரியின் மாதவன் எஃபெக்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...