ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய தலைவராக தனது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை நியமித்துள்ளார் முகேஷ் அம்பானி.
அம்பானி வாரிசு என்பது தெரியும். அதைத் தாண்டி யார் இந்த ஆகாஷ்?
முகேஷ் அம்பானி – நீட்டா அம்பானிக்கு செயற்கை முறை கருத்தரித்தல் முறையில் பிறந்தவர் ஆகாஷ் அம்பானி. இதுகுறித்து பேட்டியளித்த ஆகாஷ் அம்பானி, “என் பெற்றோருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு குழந்தைகள் இல்லை. இதன்பிறகு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் நானும் என் சகோதரி இஷாவும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தோம். எங்களுக்கு 5 வயது ஆகும்வரை வேலைக்குகூட செல்லாமல் எங்களை தனிப்பட்ட முறையில் அம்மாவே வளர்த்தார்” என்று கூறியுள்ளார்.
மும்பை கேம்பியன் பள்ளியிலும் பின்னர் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார் ஆகாஷ் அம்பானி.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவில் ரோட் ஐலண்ட் மாநிலத்திலுள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதரத்தில் பட்டம் பெற்றார்.
ஆகாஷின் மனைவி ஷ்லோகா மேத்தா, வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள். ஆகாஷும் ஷ்லோகாவும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். 12ஆம் வகுப்பு படிக்கும்போது தனது காதலை தெரிவித்தாராம் ஆகாஷ். உடனே ஏற்றுக் கொண்டார் ஷ்லோகா. நியூ ஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் ஷ்லோகா.
ஆகாஷ் அம்பானியின் திருமணம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரம்மாண்டமாக நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த திருமண இந்தியாவின் முக்கிய நிகழ்வாக அப்போது வர்ணிக்கப்பட்டது. ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை. பெயர் பிருத்வி.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க தன் மகன்கள் மற்றும் மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளித்து வருகிறார் முகேஷ் அம்பானி. கல்லூரி படிப்பை முடித்தவுடனேயே அவர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சேர்த்தார். கல்லூரி முடித்ததிலிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஆகாஷ்.
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் ஆகாஷுக்கு பிடித்தமான ஒன்று. ஜியோ நிறுவனத்தின் திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இன்று ஜியோ நிறுவனம் இத்தனை உயர்ந்திருப்பதற்கு காரணம் ஆகாஷ்ஷின் யோசனைகளும் உழைப்பும்தான் என்கிறார்கள் தொழில்துறை வல்லுநர்கள்.
ஆகாஷ் அம்பானிக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். குறிப்பாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்கும் முக்கிய ஆட்டங்களைக் காண நேரில் சென்றுவிடுவார். கிரிக்கெட்டைத் தவிர கால்பந்து விளையாட்டிலும் ஆகாஷ் அம்பானிக்கு ஆர்வம் அதிகம். ஆனால் இந்த விளையாட்டுகளை எல்லாம் மைதானத்தில் ஆடாமல் வீடியோக்களில்தான் ஆடுவார்.
எல்லா பணக்காரர்களைப் போல ஆகாஷ் அம்பானிக்கும் கார்களின் மீது ஆர்வம் அதிகம். உலகிலுள்ள அத்தனை டாப் மாடல் கார்களையும் வைத்திருக்கிறார்.
தனது ரோல் மாடல் அப்பா முகேஷ் அம்பானிதான் என்கிறார் ஆகாஷ் அம்பானி.
ஆகாஷ் அம்பானி தலைமையேற்றிருக்கும் ஜியோ நிறுவனனத்தின் இன்றைய மதிப்பு 95 ஆயிரம் கோடி ரூபாய். அவர் வாரிசாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய்.