நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பு
ஏறக்குறைய மூன்று மாதங்கள் படுக்கையில்…
தொடர்ந்து டயாலிசிஸ்…
அடுத்தடுத்து ஒவ்வொரு உறுப்புகளும் ஒத்துழைக்க மறுப்பு..
நீண்ட கோமா நிலை…
என மிகவும் கஷ்டப்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறார் வித்யாசாகர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது குழந்தையையும் நட்சத்திரமாக ஜொலிக்க வைத்திருக்கும் மீனாவின் கணவர்தான் இந்த வித்யாசாகர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மனைவி மீனா மகள் நைனிகா இருவரின் முகங்களைக் கூட பார்க்காமல் நிரந்தரமாக விடைப்பெற்றுவிட்டார்.
வித்யாசாகருக்கு என்னவாயிற்று?
கடந்தாண்டு டிசம்பர் மாதம், வித்யாசாகருக்கு நுரையீரலில் பாதிப்பு உண்டானது. அப்பொழுதும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்ததால், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து கொண்டார். வீட்டில் அவருக்கு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் மூலம் சுவாசப் பிரச்சினை எழாமல் பார்த்து கொண்டார்கள். ஆனால் அவரது நிலைமை கொஞ்சம் தீவிரமடையவே, ஆஸ்பத்திரியில் சேர்த்தார் மீனா.
இந்நிலையில் இந்தாண்டின் பிப்ரவரி மாதம் மீனா, நைனிகா மற்றும் வித்யாசாகர் என குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனாவின் தாக்கம் இருந்தது. மூவரும் அதிலிருந்து மீண்டு விட்டார்கள். ஆனால் நுரையீரல் பாதிப்பு இருந்த வித்யாசாகருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக வித்யாசாகர் ஆஸ்பத்திரியில் வசித்தார் என்றே சொல்லவேண்டும். தொடர்ந்து அவருக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. நுரையீரலை அடுத்து இதயமும் ஒத்துழைக்க மறுத்தது. ஒரு கட்டத்தில் இந்த இரு உறுப்புகளும் செயலிழந்து விட்டன.
ஏறக்குறைய மூன்று மாதங்களும் மேலாக வித்யாசாகர் ஆஸ்பத்திரி படுக்கையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், சுயநினைவு இல்லாமல் இருந்தார். உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மீனா ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை வித்யாசாகரை மீண்டு எழச் செய்யவேண்டும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
மீனாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மருத்துவர்கள் குழு, நுரையீரல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் உடனடியாக நுரையீரல் தானம் பெறுவதற்கான முயற்சிகள் பரபரவென மேற்கொள்ளப்பட்டது.
எக்மோ உதவியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் வித்யாசாகர் கடத்தி கொண்டு இருந்தார். மறுபக்கம் நுரையீரல் தானம் குறித்து தேடல் தொடர்ந்தது. மகாராஷ்ட்ரா, பெங்களூர் என தேடாத இடங்கள் இல்லை. நுரையீரல் கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தால், தானம் கொடுப்பவரின் ரத்தவகை பொருந்தவில்லை. இதனால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை விஷயத்தில் தொய்வு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் எக்மோவில் தாக்குப்பிடித்த வித்யாசாகர் உயிர், தனது கருணை நேரத்தை ஜூன் 28- தேதியோடு முடித்து கொண்டது.