தவறான முடிவுகளால் சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்கும் சாமானிய குடும்பத் தலைவனின் கதை.
நேர்மையான நடுத்தர வயது ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன். மனைவி மகளுடன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் ஃபீல் குட் வகையை சார்ந்தவை.
தனது மகளுக்கு தூங்கும் நேர கதைகளாக தனது வாழ்க்கையை ஃப்ளாஸ்பேக்காக கூறுகிறார். அதில் கதாபாத்திரங்கள் வெளி வருகிறார்கள். ராதாகிருஷ்ணனாக விஜய் சேதுபதி. வழக்கம் போல் சிறப்பான நடிப்பு.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மாதவனுடன் (ஷாஜி) ராதாகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பிள்ளைகளின் படிப்புக்காக தனது நிலங்களை விற்க அவரை அணுகுகிறார். அவரை நம்பி சில திட்டங்களில் இறங்குகிறார். ஆனால் மாதவன் ஏமாற்றிவிடுகிறார். கிராம மக்களின் கோபத்தையும் காவல்துறை நடவடிக்கையையும் ராதாகிருஷ்ணன் எதிர்கொள்ள நேரிடுகிறது . இந்த சிக்கல்களை ராதாகிருஷ்ணன் எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதி கதை.
கிட்டத்தட்ட கமலின் மாகாநதி போன்ற கதை, சற்று மென்மையான வடிவத்தில். மகாநதியிலிருந்த மனதை அழுத்தும் சோக அம்சங்களை அகற்றி பாசிடிவ்வாக கதையை நகர்த்தியிருக்கிறார் சீனு ராமசாமி. அவருக்குப் பக்கபலமாக நின்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
படத்தின் இன்னொரு பலம் இஸ்லாமிய நண்பராக நடிக்கும் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இஸ்லாமிய கதாபாத்திரத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. வரவேற்கதக்கது.
விஜய்சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்திருக்கிறார். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் அழகாய் வந்திருக்கிறது. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாயாக உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநர் சீனு ராமாசாமிக்கும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, யுவனுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையை அறிந்திருக்கிறோம். அந்த மோதலில் இசை கொஞ்சம் சேதமடைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. கிராமத்திய சூழலில் பாடல்கள் வருடுகின்றன.
கதைக்கேற்று ஒளிப்பதிவு பயணிப்பது படத்தின் இயல்புத் தன்மையைக் கூட்டுகிறது.
சமூகக் கதைகளை சொல்வதில் பெயர் பெற்றவர் சீனு ராமசாமி. தன் பாணியில் இந்த முறையும் கதை சொல்லியிருக்கிறார். தென் மேற்கு பருவக் காற்று, நீர்ப் பறவை தொட்ட உச்சங்களை மாமனிதன் தொடுவானா என்ற கேள்வி எழும்.
மாமனிதன், மறக்க முடியாத மனிதனல்ல.