திரௌபதி முர்மு. இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் பழங்குடி இனப் பெண். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முதல் குடிமகளாக இருக்கப் போகும் திரௌபதி முர்முவைப் பற்றிய 12 விஷயங்களை தெரிந்துகொள்வோம்:
- ஒடிசா மாநிலத்தில் சாந்தால் (Santhal) என்ற பழங்குடி இனத்தில் 1958-ம் ஆண்டு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரௌபதி முர்மு. அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக வளர்ந்திருக்கிறார்.
- புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி பெண்கள் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.
- கல்லூரி படிப்பு முடிந்தது உள்ளூரில் சில காலம் ஆசிரியராக முர்மு பணியாற்றி உள்ளார். பின்னர் ஒடிசாவின் நீர்வளம் மற்றும் மின்சக்தித் துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
- 1990-களில் அரசியலில் ஆர்வம் காட்டிய முர்மு, பாஜகவில் இணைந்தார். அரசியலில் முர்மு வகித்த முதல் பதவி, ராய்ரங்பூர் நகர் ( Rairangpur Nagar) பஞ்சாயத்தின் கவுன்சிலர் பதவி. பின்னர் அந்த பஞ்சாயத்தின் துணைத் தலைவர் பதவியையும் அவர் ஏற்றுள்ளார்.
- ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 2000 மற்றும் 2009-ம் ஆண்டில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும், பின்னர் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் முர்மு பணியாற்றியிருக்கிறார்.
- சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான நீலகாந்தா சன்மான் விருதை முர்மு பெற்றுள்ளார்.
- 2013-ம் ஆண்டில் பாஜகவின் பழங்குடிகள் இன பிரிவின் தேசிய செயல் குழுவின் உறுப்பினராக முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2015-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரவுபதி முர்மு நியமிக்கப்பட்டார்.
- 2017-ம் ஆண்டில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளாராவார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றது.
- அரசியலில், சமூகத்தில் பல வெற்றிகளைப் பெற்றபோதிலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொண்டவர் திரௌவுபதி முர்மு. அவருடைய இரண்டு மகன்களும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். கணவரும் காலமாகிவிட்டார். இப்போது அவருக்கு துணை அவரது மகள் மட்டுமே.
- பாஜகவில் இருந்தாலும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு நெருங்கிய நண்பராக முர்மு உள்ளார். பிஜு ஜனதா தளத்துக்கு 12 மக்களவை மற்றும் 9 ராஜ்யசபா உறுப்பினர்களும் 114 எம் எல் ஏக்களும் உள்ளனர். முர்முவுக்கு நவீன் பட்நாயக்குடன் உள்ள நட்பால் இந்த வாக்குகள் அவருக்கு கிடைக்கும் அதனால் குடியரசுத் தேர்தலில் வெற்றி எளிதாகிவிடும்.
- திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானால் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவராக அவர் இருப்பார்.