மூன்று நிகழ்வுகள். ஒரு சிறிய ஊரில் 15 வயது சிறுமி காணாமல் போகிறாள். அந்த ஊரை ஓட்டியிருக்கும் சிமெண்ட் தொழிற்சாலை தீப்பிடித்து எரிகிறது. ஊரில் அங்காளம்மன் கோயில் விழா நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த மூன்று நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு த்ரில்லர். இதுதான் சுழல் – Suzhal: The Vortex. எட்டு பாகங்கள் கொண்ட இந்த வெப்சீரிசை புஷ்கர்- காயத்ரி இணைந்து எழுதியிருக்கிறார்கள். முதல் நான்கு பாங்களை பிரம்மா இயக்கியிருக்கிறார். அடுத்த நான்கு பாகங்களை அனுசரன் இயக்கியிருக்கிறார்.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போரட்டத்துடன் துவங்குகிறது சுழல். மெல்ல ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகமாகின்றன. அனத்துக் கதாபாத்திரங்களும் நல்லவாரா கெட்டவாரா என்ற இடைப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.
பொதுவாய் நகரத்துப் பின்னணியில்தான் க்ரைம் த்ரில்லர்கள் வரும். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துப் பின்னணியில் கோயில் திருவிழாவின் காட்சிகளின் ஒலி ஒளியுடன் கதை சொல்லியிருக்கிறார்கள்.
தொழிற்சாலைக்கு தீ வைத்தது யார் என்ற விசாரணையில் தொடங்கும் போது சிறுமி காணாமல் போகிறாள். சந்தேகம் ஊர் இன்ஸ்பெக்டர் மகன் மீது திரும்புகிறது. ஆனால் அவனும் காணாமல் போகிறான். ஆலை உரிமையாளர் மகன் மீது சந்தேகப் பார்வை விழுகிறது. அவன் மட்டுமில்லாமல் வேறு சிலர் மீதும் சந்தேகங்கள் எழுகின்றன. என்ன நடந்தது? சிறுமி ஏன் ஓடிப் போனாள்? இன்ஸ்பெக்டர் மகன் என்ன செய்தான்? குற்றங்களை செய்தது ஏன்? இப்படி பல கேள்விகள் ஒவ்வொரு பாகத்திலும் எழுப்பப்பட்டு திரைக்கதையை சுவராசியமாக்குகின்றன.
இன்னும் பல அம்சங்களை குறிப்பிடலாம். ஆனால் அப்படி சொன்னால் கதை தெரிந்துவிடும். மர்மம் மறைந்துவிடும். இவரா? அவரா? என்று பார்வையாளர்கள் யூகிக்க வைத்துக் கொண்டிருப்பதில் திரை எழுத்தின் சாமர்த்தியம் தெரிகிறது.
அங்காளம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய சடங்கான மயானக் கொல்லையைக் (கல்லறை சூறையாடுதல்) கொண்டாட தயாராகும் ஒரு சிறிய நகரமான சம்பலூரில் கதை நடக்கிறது. கதைக்கான இடத் தேர்வு பொருத்தம்.
வர்ணம் பூசப்பட்ட முகங்கள் மற்றும் தேர்களுடன், பக்தர்கள் சுடுகாட்டிற்கு ஊர்வலம் செல்லும் பாடல்களின் வடிவத்தில் கடவுளின் வாழ்க்கையை விவரிக்கிறார்கள். அந்த இசையும் காட்சிகள் அமைப்பும் அமானுஷ்ய உணர்வைத் தருகின்றன.
சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி என்ற சக்கரையாக கதிர் நடித்திருக்கிறார், துடிப்பான நடிப்பு. அவர் தாடியும் அதிகமான தலைமுடியும் அவர் போலீஸ்தானா என்று அடிக்கடி சந்தேகம் கொள்ள வைக்கிறது.
இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக ஸ்ரேயா ரெட்டி…ஆம் திமிரு படத்தில் கந்துவட்டி தாதாவாக வந்த அந்த ஸ்ரேயாதான். நிமிர்ந்த நடையும் விறைப்பான உடையுமாக பொருத்தமாக இருக்கிறார். மகன் மீது சந்தேகம் எழுப்பப்படும்போது திருஷ்யம் ஆஷா சரத்தை நினைவுப்படுத்துகிறார்.
காணாமல் போன சிறுமியின் அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ். உணர்வுகளை பார்வையாலேயே சிறப்பாக வெளிப்படுத்தி தன் இருப்பைக் காட்டுகிறார்.
தமிழ் திரையுலகில் அதிகம் தொடப்படாத சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை சுழல் தொட்டிருப்பது பாரட்ட வேண்டிய அம்சம்.
பெண் பிள்ளைகளுக்கு எங்கிருந்து தொல்லைகள் வருகின்றன என்பதையும் அவர்கள் அதை சொல்ல முடியாத நிலையில் இருப்பதையும் தெளிவாக சொல்கிறது.
சிறுமியின் அப்பாவாகவும், யூனியன் தலைவராகவும் பார்த்திபன். தேவையைப் புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.
15 வயது சிறுமியாக கோபிகா ரமேஷ். சிறப்பான நடிப்பு.
இன்ஸுரன்ஸ் கம்பெனியின் விசாரணை அதிகாரியாக சந்தானபாரதி. மிக இயல்பாக நச் வசனங்களுடம் மனதை கொள்ளை கொள்கிறார்.
படத்துக்கு இசையும் ஒளிப்பதிவும் பெரும் பலம் இசை. சாம் சி.எஸ். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒளிப்பதிவு முகேஸ்வரன். காட்சியின் கோணங்களும் ஒளி அமைப்புகளும் கதையின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
நிறைய கதாபாத்திரங்கள். லதா ராவ், நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல் என்ற பல நடிகர்கள். அனைவருக்குமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அதை உணராத வகையில் சுழலின் வேகமான திரைக்கதையும் காட்சியமைப்புகளும் எட்டு பாகங்களை அலுக்காமல் கொண்டு செல்கின்றன.
சுழல் – தமிழ் வெப் தொடர்களின் இன்றைய உச்சம்.